ஜெபக்குறிப்பு: 2019 மே 28 செவ்வாய்

எப்போதும் கலவர பகுதியாக காட்சியளிக்கும் காஷ்மீர் மாநிலத்திற் காகவும் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போருக்கான பதட்டமான நிலை நீங்கி அப்பகுதியில் அமைதி நிலவவும் பேச்சு வார்த்தையின் வாயிலாக இரு நாட்டு பிரச்சனைகள் தீர்க்கப்படவும், தீவிரவாதிகளின் செயல்கள் முற்றிலும் அழிக்கப்படவும் வேண்டுதல் செய்வோம்.

நேரத்தைக் கொடுப்பாயா?

தியானம்: 2019 மே 28 செவ்வாய் | வேத வாசிப்பு: அப்போஸ்தலர் 18:18-28

“…நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்” (யோசுவா 24:15).

இந்த அவசர வாழ்க்கையில், குடும்பமாகச் சேர்ந்து ஒரு காரியம் செய்வதென்றால் அது பெரிய ஒரு சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். குடும்ப அங்கத்தவர்கள் யாவரும் பலவித ஈடுபாடுகள் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். ஆரம்ப திருச்சபையிலே, குடும்பம் குடும்பமாக வீடுகள்தோறும் கூடி ஆராதனை செய்தார்கள். ஆனால், இன்று நமது ஆராதனையில் குடும்பமாக ஆராதிப்பவர்கள் குறைவாகவே காணப்படுகிறார்கள். குடும்ப ஜெபங்களுக்கு நேரம் கண்டுகொள்வதும், நேரம் ஒதுக்கிக்கொள்வதும் இன்று கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும்பாடாகிவிட்டது. அன்றிருந்த யோசுவா போன்று, இன்று நமது குடும்பங்களில் இல்லாமற்போனது ஏன்? “நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்” என்ற வாசகத்தை வீட்டுச் சுவரில் தொங்கவிடுவதோடு, நமது காரியங்கள் நிறைவு பெற்று விடுகின்றதா?

ஆக்கில்லா, பிரிஸ்கில்லாள் என்ற கணவனும் மனைவியும் ஒன்றாக, பவுலோடுகூட ஊழியங்களில் பங்கேற்றார்கள் என்பதை நாம் வேதத்தில் வாசிக்கிறோம். அதுமாத்திரமல்ல, அவர்கள் அப்பொல்லோ என்பவனை தம்மோடு சேர்த்துக்கொண்டு, தேவனின் மார்க்கங்களை அவனுக்குத் திட்டமாய் விவரித்து காண்பிப்பதையும் காண்கிறோம். கணவன் மனைவியாக நேரம் ஒதுக்கி ஒருவனைக் கிறிஸ்துவுக்குள் வளர்ப்பது எவ்வளவு மகிழ்ச்சிக்குரிய காரியம். இவர்கள் இருவரும் தங்களது நேரத்தை தேவ ஊழியத்துக்காக அர்ப்பணித்துச் செயற்பட்டார்கள் என்பது நமக்கு விளங்குகிறதல்லவா!

பல காரியங்களில் ஈடுபட்டு நேரமின்றித் தவிக்கின்ற நமக்கு, தேவனின் காரியங்களுக்காக நேரத்தை ஒதுக்குவது என்பது, மிகவும் கடினமாக தோன்றலாம். ஆனாலும் அதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டால், நேரத்தைக் கண்டுபிடிப்பதும், நேரம் ஒதுக்கிக்கொள்வதும் இலகுவாகிவிடும். குடும்ப ஜெபத்தின் முக்கியத்தை நாம் உணர்ந்து செயற்படுவதுடன், நமது பிள்ளைகளும் உணர்ந்துகொள்ளும்படி பெற்றோர் தாமே பொறுப்புடன் நடக்க வேண்டியது அவசியம். முக்கியமாக இப்போதெல்லாம் குடும்பமாக உட்கார்ந்து உணவருந்துவதே அரிதாகிவிட்டது; குடும்ப ஐக்கியம் கேள்விக்குறியாவதற்கு இதுவும் ஒரு காரணம் எனலாம். காலமும் நேரமும் நம்மை ஆள அனுமதிக்கக்கூடாது. நாமேதான் அவற்றை ஆள வேண்டும்.

“அவன் (கொர்நேலியு) தேவபக்தியுள்ளவனும் தன் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து… எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தான்” (அப்.10:2).

ஜெபம்: நல்ல ஆண்டவரே, யோசுவாவைப்போல, கொர்நேலியுவைப் போல வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயப்படவும் தேவனளித்த நேரங்களை வீணடித்து விடாதபடியும் எங்களைக் காத்தருளும். ஆமென்.