Daily Archives: May 12, 2019

ஜெபக்குறிப்பு: 2019 மே 12 ஞாயிறு

தேவனாகிய கர்த்தர் மத்திய பிரதேஷ், ஹரியானா, உத்ர பிரதேஷ்,டெல்லி, மேற்குவங்காளம் ஆகிய இடங்களில் இந்நாட்களில் நடைபெறுகிற தேர்தலிலே சுவிசேஷ ஊழியங்களுக்கு உள்ள தடைகள் நீங்கி சுயாதீனமாக ஊழியம் செய்வதற்கு முழு ஆதரவைத் தரும் ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு கிருபை செய்ய பாரத்துடன் ஜெபிப்போம்.

என் விசுவாசம் மெய்யானதா?

தியானம்: 2019 மே 12 ஞாயிறு | வேத வாசிப்பு: ரோமர் 4:16-25; 5:1-2

“அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்” (ரோமர் 4:25).

“மருத்துவமனைக்குச் செலுத்தவேண்டிய பணம் எதிர்பாராதபடி என் சக்திக்கும் அதிகமாகிவிட்டதால், ஒரு நாள் அவகாசம் கேட்கலாமா என தயக்கத்துடன் சென்றேன். ஆனால், அவர்கள் கணக்கு முடித்துப் பற்றுச்சீட்டைத் தந்தார்கள். திகைத்துப்போய் நின்ற என்னிடம், சற்று முன்னர் ஒருவர் வந்து எனக்கான முழுப் பணத்தையும் செலுத்திவிட்டார் என்று சொன்னார்கள். எனக்கு நம்பமுடியவில்லை. ஆனால் இதோ பற்றுச்சீட்டு. என் பிள்ளைக்காகப் பணம் செலுத்தியவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை” என்று கண்ணீருடன் ஒரு சகோதரன் சொன்னபோது, நாமும் அவருடன் கூடி தேவனை ஸ்தோத்தரித்தோம்.

எந்த நம்பிக்கையும் இல்லாதபோதும், இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல அழைக்கிறவராயிருக்கிற தேவனுடைய வார்த்தையை முழுதாக விசுவாசித்த ஆபிரகாமை, பவுல் நமக்கு முன்பாக நிறுத்தியிருக்கிறார். அந்த விசுவாசமே ஆபிரகாமுக்கு நீதியாக எண்ணப்பட்டது. அது இன்று நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது. நமது தேவன் முடியாதவைகளை முடித்து வைக்கிறவர் என்பதை ஆபிரகாமின் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். இங்கே நமது விசுவாசம் எப்படிப்பட்டதாயிருக்கிறது? இயேசு நமது பாவங்களுக்காக மரித்தார் என்பது நம்பமுடியாத காரியம் என்றாலும், அது சத்தியம்; அது விசுவாசிக்கப்பட வேண்டிய ஒன்று. அப்படியாக நான் விசுவாசிக்கும்போது, ஒரு பரிமாற்றம் ஏற்படுகிறது. நான் என் பாவங்களை அவரிடம் ஒப்புவிக்க, அவர் தமது மன்னிப்பையும் நீதியையும் எனக்கு அருளுகிறார். இந்த மீட்பைப் பெற்றுக்கொள்ள நாம் வேறு எதுவும் செய்யவே முடியாது. விசுவாசம் ஒன்றுதான் அதற்கு வழி! அதையும் பரிசுத்தாவியானவரே கிருபையாய் நமக்குள் தருகிறார். என்ன அற்புதம்! இந்த மன்னிப்பும் தேவநீதியும் நமக்குக் கிடைப்பது, இயேசு நமது பாவங்களைச் சுமந்து மரித்ததால் மாத்திரமல்ல, மரித்தவர் உயிர்த்தெழுந்தார்; அதுதான் ஜெயம்! இந்த உயிர்த்தெழுதலானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானத்தையும், அவருடைய கிருபைக்குள் பிரவேசிக்கும் சிலாக்கியத்தையும், தேவமகிமையை அடைவோம் என்கிற நம்பிக்கையையும் நமக்கு உறுதியாக அருளியிருக்கிறது.

இதற்கு மிஞ்சி நமக்கு என்னதான் வேண்டும்? இயேசுவே இரட்சகர் என்று அறிந்து ஏற்றுக்கொண்டு, அவர் அருளிய விடுதலையை அனுபவிக்கின்ற நம்மில் அந்த இரட்சிப்பு முதலில் வெளிப்படட்டும்.

“நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்” (2கொரி.5:21).

ஜெபம்: ஆண்டவரே, நாங்கள் தேவனிடத்தில் சமாதானத்தையும், அவருடைய கிருபைக்குள் பிரவேசிக்கும் சிலாக்கியத்தையும் எங்களுக்குத் தந்தீரே. உமக்கு நன்றி. ஆமென்.

சத்தியவசனம்