Daily Archives: May 5, 2019

ஜெபக்குறிப்பு: 2019 மே 5 ஞாயிறு

“நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை” (யோவா.13:8) என மனத் தாழ்மையை கற்றுத்தந்த அருள்நாதரை நினைவுகூரும் இந்த நாளின் திருவிருந்து ஆராதனையில் பங்குபெறும் ஒவ்வொருவரும் உருக்கமான இரக்கத்தையும் மனத்தாழ்மையையும் தரித்துக்கொண்டவர்களாய் காணப்படுவதற்கும் ஜெபம் செய்வோம்.

மூடுமேகம் அகன்றது!

தியானம்: 2019 மே 5 ஞாயிறு | வேத வாசிப்பு: யோவான் 21:15-19

“…ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர். நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர்” (யோவான் 21:17).

“மரணம் நம்மைப் பிரிக்கும்வரைக்கும்” என்று தேவ சமுகத்தில் வாக்குப் பண்ணிய எத்தனை பேர் அந்த வாக்கை உடைத்தெறிந்திருக்கிறார்கள். உணர்ச்சி மேலீட்டால் கொடுக்கின்ற வாக்குறுதிகள் தருணத்தில் மறக்கப்படுகின்றனவோ அல்லது, நிறைவேற்ற முடியாமல் போகின்றதோ தெரியவில்லை. ஆனால் அதன் பாதிப்பு வேதனை தரும்; பின்னர் அதைச் சரிப்படுத்துவதும் இலகுவல்ல.

“ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர ஆயத்தமாயிருக்கிறேன்” (லூக்.22:33) என்று சொன்ன பேதுரு இடறிப்போனான். ஆனால், சேவல் கூவுகிறவதற்கு முன்னே அவன் இயேசுவை மூன்று தரம் மறுதலிப்பான் என இயேசு முன்கூட்டியே கூறியிருந்தார். அப்படியிருந்தும், வேலையாட்களுக்கு முன்பாக இயேசுவைத் தெரியாது என்று மூன்று தரம் பேதுரு மறுதலித்துவிட்டான். சேவலும் கூவியது. கர்த்தரும் திரும்பி பேதுருவைப் பார்த்தார். இயேசு கூறியது நினைவுக்கு வந்த பேதுரு, “வெளியே போய், மனங்கசந்து அழுதான்” (லூக். 22:62). இந்த வேதனை அவனுடைய உள்ளத்தில் நிச்சயம் ஒரு மூடுமேகத்தைத் தோற்றுவித்திருக்கும். சொல்லியிருந்தும் மறுதலித்துவிட்டேனே என்று உள்ளம் உடைந்திருக்கும். உயிர்த்த கர்த்தர் கடலோரத்திலே தம்மை வெளிப்படுத்தி, பேதுருவை மூடியிருந்த மறுதலிப்பின் மேகத்தை அகற்றிவிடுவதற்கான அனுபவத்திற்கூடாக அழைத்துச் செல்லுகிறார். பேதுரு மூன்று தரம் மறுதலித்தான். “நீ என்னை நேசிக்கிறாயா” என்று கர்த்தர் மூன்று தடவையாகக் கேட்கிறார். இறுதியாக “என் ஆடுகளை மேய்ப்பாயாக” என்கிறார்.

ஆண்டவர் நமது உள்ளங்களை நன்கு அறிந்திருக்கிறவர். தம்மை மறுதலித்த பேதுருவையும் அவர் அறிந்திருந்தார். தம்மை மறுதலித்தவன் கைகளில் தமது ஊழியத்தைக் கையளிப்பது என்றால் சாதாரணமான விஷயமல்ல. நேசிக்கிறேன் என்று சொல்லுவதும், பாடுவதும் இலகு. அவருடைய வேலையை செய்ய முன்செல்லுவதே நமக்கு வருகின்ற பெரிய சோதனை. இங்கே மன்னிப்பு பெற்ற பேதுருவின் வாழ்வே மாறிப்போனது. மீன் பிடித்தவன் சுவிசேஷகன் ஆனான். அலசடிப்படுகின்ற மனதைக் கொண்டவன், இப்போது கேபா என்ற பெயரைப் பெற்றான். இன்று நம்மை மூடியிருக்கிற மேகம்தான் எது? ஆண்டவரிடம் மனந்திரும்புவோம். அவர் நம்மை அறிவார். நமது தவறுகளை அறிவார்; மன்னித்து ஏற்றுக்கொள்வார். நம் கர்த்தர் எவ்வளவுக்கு நம்மை நேசிக்கிறார் என்பதை உணர்ந்தவர்களாக, புறப்பட்டு அவர் பணியைச் செய்வோமாக.

“…குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே” (1பேது. 1:19).

ஜெபம்: அன்பின் கர்த்தாவே, எங்களது குற்றமுள்ள மனச்சாட்சியோடு உம்மண்டை வருகிறோம், எங்களை மன்னித்து உமது பணியில் எங்களைப் பயன்படுத்தும். ஆமென்.

சத்தியவசனம்