வாக்குத்தத்தம்: 2019 மே 1 புதன்
நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் (யோசுவா 1:9).
என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பேர் சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் (யாத் 33:17).
1சாமுவேல் 29-31 | லூக்கா.22:1-27
நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் (யோசுவா 1:9).
என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பேர் சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் (யாத் 33:17).
1சாமுவேல் 29-31 | லூக்கா.22:1-27
கர்த்தாவே. நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும் (சங்.30:9).
“உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக” (யோவா.14:27) இப் புதிய மாதத்திலும் பெலப்படுத்துகிற கர்த்தர் நம்மோடிருந்து நம்மை நடத்தவும், ஒவ்வொரு நாளும் நமது ஜெப வாழ்வில் நாம் புதுப்பிக்கப்பட்டு, அவரை அறிகிற அறிவில் வளருவதற்கு உதவி செய்யவும் ஜெபிப்போம்.
தியானம்: 2019 மே 1 புதன் | வேத வாசிப்பு: லூக்கா 24:13-24
“அவரே இஸ்ரவேலை மீட்டி ரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம்…” (லூக்கா 24:21)
“நான் எவ்வளவாக நம்பியிருந்தேன். ஆனால்…” இப்படியாக நம் வாழ்நாளில் ஒரு தடவையேனும் துக்கப்படாமல் இருந்திருக்கமுடியாது. ஏமாற்றப்பட்டுவிட்டதாக எண்ணுகின்ற மனநிலை நம்மை வேறு திசைக்குத் திருப்பிவிடவும்கூடும். ஆனால், உண்மை என்னவென்று உணரக்கூடாதபடி துக்கத்தால் கண்கள் மறைக்கப்பட்டு புலம்புவது வீணல்லவா!
இயேசுவின் சிலுவை மரணம் பஸ்காப் பண்டிகை நாட்களில் நடந்ததால் சகல யூதருக்குள்ளும், ரோமாபுரி முழுவதிலும் இச்செய்தி பரவியது. இயேசுவின் சீஷர்களும் திகைத்தார்கள். என்றாலும் இயேசு உயிரோடிருக்கிறார் என்று தேவதூதர் சொன்னதைக் கேட்ட பெண்கள் அதைச் சொல்லியும், சில சீஷர்கள் கல்லறையில் இயேசுவின் சரீரம் இல்லாததைக் கண்டும்கூட அவர்கள் குழப்பிப்போயிருந்தனர். “இவர் நம்மை மீட்டு ரட்சிப்பார் என்று நம்பியிருந்தோமே. இப்போ இவரைக் காணவேயில்லையே” என்று சொல்லி இரண்டு சீஷர்கள் மற்ற சீஷரின் ஐக்கியத்தை விட்டு, ஏமாற்றம் கலந்த துக்கத்தோடு, எம்மாவூருக்கு, அதாவது எதிர்த்திசையில் திரும்பி நடந்தார்கள். வழியில் தம்மோடு இணைந்துகொண்ட இயேசுவை அடையாளம் காண முடியாதபடி அவர்களின் கண்களை ஏமாற்றம் மறைத்துவிட்டிருந்தது. அதிலும், “உமக்கு ஒன்றும் தெரியாதிருக்க நீர் என்ன அந்நியரா” என்று கோபப்பட்டான் கிலேயப்பா. இயேசுவும், “என்ன சங்கதி” என்று கேட்க, உயிர்த்த இயேசுவுக்கே இவர்கள் கதை கூறினார்கள்.
உலக சரித்திரத்தின் மகா உன்னத நிகழ்வை இந்தச் சீஷர்கள் உணர முடியாதபடி அவர்களது கண்கள் மறைக்கப்பட்டிருந்ததன் காரணம் புரிகிறதா? எதிர்பார்ப்பு உடைந்ததால் ஏற்பட்ட ஏமாற்றத்திலும், தங்கள் பிரச்சனைகளிலுமே அவர்களது கண்கள் நோக்கமாயிருந்தது. இந்த மனநிலையுடன் எம்மாவூருக்குத் திரும்பியவர்களால், தமது கேள்விகளுக்கெல்லாம் பதிலாயிருக்கிறவர் அருகில் இருந்தும் அவரை அடையாளம் காணமுடியாதிருந்தது.
இன்று நமது நிலையும் இதுதான். நமது கண்கள் எப்போதும் நமது பிரச்சனை களையே சுற்றி வருவதால், உண்மை இன்னதென்று உணரக்கூட முடியாதபடி நமது கண்கள் ஏமாற்றம் என்ற வஞ்சனையினால் மறைக்கப்பட்டு விடுகிறது. நாம் சேரவேண்டிய இடம் ஆண்டவர் சந்நிதானம் என்பதையும், அவர் நம் அருகில் இருக்கிறார் என்பதையும் மறந்து, பதில் தேடி அலைகிறோம். இதனால் உயிர்த்த இயேசுவின் உன்னத வல்லமையை நாம் மறந்துவிடுகிறோம்.
“அவர்கள் அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள். அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை” (சங்கீதம் 34:5)
ஜெபம்: உயிர்த்தெழுந்த எங்கள் ஆண்டவரே, பிரச்சனை நேரங்களில் நீர் எங்கள் அருகில் இருப்பதினால் உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.
பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது; அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான் (மத்.20:1).
தமது போதனைகளை நீதிக்கதைகள் மூலம் கற்றுக்கொடுப்பது இயேசுகிறிஸ் துவின் சிறப்பான முறையாகும். இந்நீதிக் கதைகள் உண்மையாகவோ கற்பனையாகவோ நடந்த நிகழ்வுகளாக இருக்கலாம். ஆயினும் அவை ஆழமான சத்தியத்தை எடுத்துரைக்கும். பரலோக இராஜ்யத்தை விளக்கும் வீட்டெஜமானனைப் பற்றிய உவமைக் கதை புரிந்துகொள்ளக் கடினமானதொன்று.
இவ்வுவமையின் சுருக்கமாவது: வீட்டெஜமான் ஒருவன் தன்னுடைய திராட்சைத் தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த ஒருநாள் அதிகாலையில் புறப்பட்டான் (மத்.20:1). வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு பணம் கூலி பேசி, அவர்களைத் தன் திராட்சத் தோட்டத்துக்கு அனுப்பினான்.
அந்நாட்களில் ஒரு சாதாரண கூலியாளுக்குக் கொடுக்கப்படும் ஒருநாள் கூலி ஒரு பணம் ஆகும். மூன்றாம் மணி வேளையிலும் அவன் புறப்பட்டுப் போய், கடைத் தெருவிலே நிற்கிற வேறு சிலரைக் கண்டு நீங்களும் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள். மறுபடியும், ஆறாம் ஒன்பதாம் மணி வேளையிலும், பதினாராம் மணி வேளையிலும் அவன் அவ்வாறே சென்று வேறு சிலரையும் கூலிக்கு அமர்த்தி அவ்வாறே கூலி பேசினான். சாயங்காலத்தில், திராட்சத் தோட்டத்துக்கு எஜமான் தன் காரியக்காரனை நோக்கி: நீ வேலையாட்களை அழைத்து, பிந்தி வந்தவர்கள் தொடங்கி முந்திவந்தவர்கள் வரைக்கும் அவர்களுக்குக் கூலி கொடு என்றான். அப்பொழுது பதினோராம் மணி வேளையில் வேலையமர்த்தப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள்.
முந்தி அமர்த்தப்பட்டவர்கள், தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள். வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானை நோக்கி: ஒருமணி நேரம் மாத்திரம் உழைத்தவர்களுக்கும் எங்களுக்கும் ஒரேவிதமான கூலி கொடுத்தீரே” என்று முறுமுறுத்தார்கள். அதற்கு வீட்டெஜமான் ஒருநாள் வேலை செய்தவர்களுக்கும் ஒரு மணி நேரம் வேலை செய்தவர்களுக்கும் நான் நியாயம் செய்தேன். உனக்குக் கொடுத்ததுபோலப் பிந்திவந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம். என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா˜ நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான். இவ்வுவமையிலிருந்து நாம் கற்றுக்கொள்வது என்ன?
முதலாவதாக, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தன்னுடைய திராட்சத் தோட்டத்தில் வேலை செய்ய ஆட்களைத் தேடுகிறார். ஆண்டவருக்கென்று இவ் வுலகை நாம் ஆதாயப்படுத்த அநேக காரியங்கள் செய்ய வேண்டியதாயுள்ளது. ஆதாயம் செய்த ஆத்துமாக்கள் அதிக கனிகள் தரும்படி அவர்களுக்கு பயிற்சி தர வேண்டும். நாம் அமர்ந்துகொண்டு முறுமுறுக்கக்கூடாது. ஆண்டவருக்கு ஊழியம் செய்யவே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். உலகில் மிகவும் விரக்தியடைந்த மனிதன் யாரெனில் இரட்சிக்கப்படாத மனிதனல்ல. அவனுக்கு எதிர்காலத்தில் நடக்கப்போவதைப் பற்றி சிறிதே அறிந்துள்ளான். ஆனால் இரட்சிக்கப்பட்ட மனிதன், தான் இவ்வுலகில் வாழ்வதன் காரணத்தை அறியாததினால் அதிக விரக்தியடைந்தவனாயிருக்கிறான். “ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார்” என்று எபே.2:10 கூறுகிறது. தேவனுடைய பண்ணையில் வேலை செய்யும் பணியாட்களாக இருப்பதற்காகவே தேவன் நம்மை இரட்சித்திருக்கிறார்.
இரண்டாவதாக, வெவ்வேறு காலங்களில் வாழ்வின் வெவ்வேறு நிலைகளில் ஊழியக்காரர்களாக தேவன் நம்மை தெரிந்தெடுத்திருக்கிறார். கிறிஸ்துவின் சபை நிறைவுள்ளதாக ஆரம்பிக்கப்படவில்லை. புதிய ஏற்பாட்டு சபையில் மக்கள் அனுதினமும் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக வரலாற்றில் நாம் காண்கிறோம். இக்காலத்திலும் நாம் சபையில் இணைக்கப்பட்டு வருகிறோம். புதிய ஏற்பாட்டு சபையில் அப்போஸ்தலர்கள் என அழைக்கப் பட்டவர்கள் கிறிஸ்துவின் பண்ணையில் முன்னதாக வந்தனர் என்ற ஒரே கார ணத்தால் அதிக வெகுமதிகளைப் பெறப் போவதில்லை. தேவன் பணியாட்களின் மீதே ஆர்வமுள்ளவராய் இருக்கிறார். அவர்கள் எப்பொழுது வேலைக்கு வந்தார்கள் என்பது அவருக்கு முக்கியமல்ல. நீங்கள் வயதான காலத்தில் ஆண்டவரை இரட்சகராக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா தேவனுக்காக ஓடியாடி மற்றவர்களைப்போல ஊழியம் செய்ய முடியவில்லையே என்று கவலைப்படாதேயுங்கள். தேவன் உங்களுக்குரிய வெகுமதியை நியாயமாய் அளிப்பது நிச்சயம்.
மூன்றாவதாக, ஆண்டவராகிய இயேசு தாராளமாகவும் நியாயமாகவும் வெகுமதி அளிப்பார். இவ்வுவமை கூறும் செய்தி இதுதான். கூலியாட்கள் ஒவ்வொருவரும் எதிர்பாராத கூலியைப் பெற்றனர். ஒவ்வொருவரும் ஒருநாள் கூலியான ஒரு பணத்தைப் பெற்றுக்கொண்டனர். ஒருவரும் தாங்கள் குறைவாக கூலி பெற்றதாக முறுமுறுக்கவில்லை. முதலாவது அமர்த்தப்பட்ட வேலையாட்களுக்கு நியாயமான கூலி கொடுத்த எஜமான் மற்றவர்களுக்கும் தாராளமாய் கூலி கொடுத்தார். தங்களுக்கு ஒருவர் தாராளம் காட்டாததைக் கண்ட மற்றவர்கள் வருத்தப்பட்டு; அவரைக் குறை சொல்வது வழக்கம். ஆனால் இங்கு அப்படியல்ல. நியாயமாய் வெகுமதி கொடுத்த எஜமான் தாராளமாய் கொடுப்பதில் எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை.
தன்னுடைய கடையில் மிட்டாய்களை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்த சிறுமியை நோக்கி, “உன் கைநிறைய மிட்டாய்களை எடுத்துக்கொள்” என்றார் கடையின் உரிமையாளர். அச்சிறுமி சிறிது நேரம் தயங்கிய பின்னர், “தயவு செய்து நீங்களே தாருங்கள். ஏனெனில் என்னுடைய கையை விட உங்களுடையது பெரியது” என்றாள்.
மற்றவர்களுடைய வாழ்க்கையோடு நம்முடைய வாழ்வை ஒப்பிட்டு நமக்கு வரும் வெகுமதியைக் கணக்கிட்டு எதிர் பார்ப்போமானால் நமக்கு திருப்தி இராது. தேவனுடைய கரம் நமக்கு வெகுமதியைத் தரும்படி பொறுமையுடன் காத்திருக்கவேண்டும். அவர் நீதியோடும் நியாயத்தோடும் பலனைத் தருகிறவர்.
நமது கையைவிட தேவனுடைய கரம் பெரியது! இன்று நாம் அவருக்காக வாழ்வோமானால் நாளை அவர் அதற்குரிய வெகுமதியைத் தருவார்!!
இரட்சகரை அறிந்தோரே அவரைத் துதியுங்கள்!
நாம் அவருக்குத் தரவேண்டியதை யாரே கூறுவார்
நம்மையும் நமக்குரிய யாவையும் மகிழ்வுடன்
அவருக்கே உரித்தாக்கிடுவோம்.
மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை
[1]
2018 ஆம் வருடத்திலும் வேதவாசிப்பு அட்டவணைப்படி வேதாகமத்தை ஒரு முறை வாசித்து முடிக்க தேவன் கிருபை செய்தார். அனுதினமும் கிறிஸ்துவுடன் தினமும் வாசித்து பயனடையவும், கிறிஸ்துவுக்குள் பெலனடையவும் உதவி செய்தார். சத்தியவசன சஞ்சிகையையும் கிடைக்கிறது. அதிலுள்ள செய்திகளை வாசித்து ஆவிக்குரிய நன்மைகளை பெற்று வருகிறோம். எனது பேத்தி பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருக்கிறாள். அவளுக்காக ஜெபிக்கும்படி கேட்டிருந்தேன். கர்த்தருடைய கிருபையால் எந்த சுகவீனமும் இன்றி எல்லாத் தேர்வுகளையும் நன்றாக எழுத கர்த்தர் கிருபை செய்தார். தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.
Mrs.Leela Packianathan, Tuticorin.
[2]
தாங்கள் அனுப்பும் அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழ், சத்தியவசன சஞ்சிகை யாவும் எங்களுக்கு அதிக ஆசீர்வாதமாக இருக்கிறது. அதை தொடர்ந்து அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.
Mrs.Christober Abraham, Turticorin.
[3]
பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து நான் எழுதுகிறேன். இங்கே சனிக்கிழமை உபவாச கூடுகை, ஞாயிறு ஆராதனை நடைபெறுகிறது. தினந்தோறும் நடைபெறும் காலை தியான வேளையில் அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபகுதியே வாசிக்கப்படுகிறது. உண்மையாகவே அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் பரிசுத்த ஆவியானவர் எங்களோடு பேசுவதுபோலவே இருக்கும். அதின் மூலம் சிலர் இரட்சிக்கப்படவும், சிலர் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ச்சியடையவும், சிலருக்கு பாவத்தை கண்டித்து உணர்த்துவது போலவுமிருக்கும். நாங்களும் தினந்தோறும் தங்கள் ஊழியங்களுக்காக எழுத்துப்பணிக்காக தவறாமல் ஜெபிக்கிறோம்.
அன்பு சகோதரர், Palayamkottai.
[4]
2018 ஆம் ஆண்டில் அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற புத்தகத்தில் கொடுக்கப்பட்ட கால அட்டவணையின்படி வேதாகமத்தை ஒருமுறை வாசித்து முடிக்க ஆண்டவர் கிருபை செய்தார். அந்தவருட ஆகஸ்டு மாதத்தில் 28 ஆம் தேதி அன்று எழுதப்பட்ட தலைப்பு ‘உடைக்கப்பட ஆயத்தமா?’ இந்தத் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட கருத்துகள் உடைந்த உள்ளத்தோடு வாழும் அநேகருக்கு ஆறுதலைக் கொடுத்திருக்கும். எனக்கு இப்பகுதி அதிக ஆறுதலைக் கொடுத்தது. இத்தின தியானங்கள் அநேகருக்கு இவ்விதமான ஆறுதலைக் கொடுக்க ஜெபிக்கிறேன்.
Mrs.Gnanamani Epxipah, Vellelanvilai.
[5]
அன்பு சகோதரருக்கு, தாங்கள் செய்யும் பத்திரிக்கை ஊழியங்களுக்கு மிக்க நன்றி. தியானபுத்தகம் மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த வருடமும் வேதாகமத்தை வாசிக்க துவங்கி தொடர்ந்து வாசித்து வருகிறேன்.
Mr.Y.Rajan, Neyveli.
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
பிதாவின் வலதுபாரிசத்தில் நமது மத்தியஸ்தராக அமர்ந்து நமக்காக பரிந்துபேசும் மீட்பர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
இவ்விதழை ஜெபத்துடனும் தேவன் இத்தியானங்கள் வாயிலாக கிரியை செய்து வருகிறார் என்ற விசுவாசத்துடனும் வெளியிடுகிறோம். இத்தியானங்கள் வாயிலாக அநேகருடைய ஆவிக்குரிய வாழ்வு கட்டப்பட்டு வருவதை அறிந்து தேவனைத் துதிக்கிறோம். சத்தியவசன ஊழியத்தை தங்கள் ஜெபத்தாலும் ஆதரவான காணிக்கையாலும் தாங்கும் படியாக தேவன் தந்த அன்பான பங்காளர்களுக்காக தேவனைத் துதிக்கிறோம்.
தற்போது இந்திய தேசத்தில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற லோக்சபா தேர்தலுக்காக தேவ பிள்ளைகளாக இணைந்து நம் தேச முழுவதும் வேண்டுதல் செய்து வருகிறோம். தேவன் நமது தேசத்தின்மேல் தமது கண்ணை வைத்திருக்கிறார். யாரும் எதிர்பாராத விதத்தில் அதிசயத்தக்க மாறுதல்களை இந்திய அரசியலில் நம் தேவன் கொண்டு வருவார். நாம் சோர்ந்து போகாமல் ஒருமனபட்டவர்களாக திறப்பின் வாசலில் நிற்போம்.
கடந்த இதழில் நாங்கள் பிரசுரித்திருந்தபடி திருச்சபைகளில நடைபெற்ற லெந்து கால சிறப்புக் கூட்டங்கள் ஆசீர்வாதமாக நடைபெற கர்த்தர் கிருபை செய்தார். இக்கூட்டங்களை ஆயத்தம் செய்தவர்கள் உதவி புரிந்தவர்கள் யாவருக்கும் நன்றி கூறுகிறோம். உங்கள் மனபாரங்களையும் ஜெபத்தேவைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம். உங்களுக்காக பாரத்தோடு வேண்டுதல் செய்வோம். இத்தியானங்கள் வாயிலாக நீங்கள் பெற்றுக்கொண்ட ஆசீர்வாத அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
இவ்விதழில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் மே மாதம் 1-20 நாட்களுக்குரிய தியானங்களையும், ஜுன் மாதத்தின் தியானங்களையும் எழுதியுள்ளார்கள். மே 21-31 வரையிலான தியானங்களை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் எழுதியுள்ளார்கள். மே மாத தியானங்கள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால் நமக்கு கிடைத்த நன்மை களையும் கிருபை வரங்களைப் பற்றி அறிந்துகொள்கிறதாயும், ஜுன் மாத தியானங்கள் பிரசங்கி புத்தகத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய அரிய தியானங்களாகவும் உள்ளன. தியானங்கள் ஒவ்வொன்றும் உங்களது தனிப்பட்ட குடும்ப தியான நேரங்களில் அதிக ஆசீர்வாதமாக இருக்க ஜெபிக்கிறோம். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபிக்கவும் அன்பாய் கேட்கிறோம்.
கே.ப.ஆபிரகாம்
