Daily Archives: May 13, 2019

வாக்குத்தத்தம்: 2019 மே 13 திங்கள்

பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்கப் பயப்படுகிறவர்கள் மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது (சங் 103:11).
1இராஜாக்கள் 1 | யோவான்.2

ஜெபக்குறிப்பு: 2019 மே 13 திங்கள்

சத்தியவசன வானொலி, தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் வேதபாடங்களை போதிக்கும் ஊழியத்தில் தேவன் பயன்படுத்தி வரும் ஊழியர்களுக்கு வேண்டிய நல்ல சுகம் பெலனைத் தேவன் தந்தருளவும், வேத வாக்கியங்களைக் கவனிக்கும்படி செய்திகளை கேட்கிறவர்களின் இருதயத்தைக் கர்த்தர் திறந்தருளவும் வேண்டுதல் செய்வோம்.

பாவியை நேசித்த அன்பு

தியானம்: 2019 மே 13 திங்கள் | வேத வாசிப்பு: ரோமர் 5:6-11

“நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோமர் 5:8).

“அப்பா தனக்குரியவற்றை எனக்கு எழுதிவைத்துவிட்டார் என்று அம்மா சொன்னபோது, மரித்துப்போயிருந்த அப்பாவின் உடலைப்பார்த்து நின்ற நான் அதிர்ந்து போனேன். குடும்பத்தைவிட்டு அதிக காலம் பிரிந்திருந்த நான், தவறை உணர்ந்தும் திரும்பிவரவேயில்லை. நான் வேதனையின் மகனாக இருந்தபோதே அப்பா இந்தக் காரியத்தைச் செய்தாரே என்ற எண்ணம் என்னைச் சாகடித்துவிட்டது” என்று ஒரு தம்பி கண்ணீருடன் சொல்லிமுடித்தார்.

“…பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார். சகல ஜனங்களிலும் நீங்கள் திரட்சியான ஜனமென்று கர்த்தர் உங்கள்பேரில் அன்பு வைத்து உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை. …கர்த்தர் உங்களில் அன்புகூர்ந்ததினாலும், உங்கள் பிதாக்களுக்கு இட்ட ஆணையைக் காக்கவேண்டும் என்பதினாலும் கர்த்தர் …உங்களை மீட்டுக்கொண்டார்” (உபா.7:6-8). இவை அன்று மோசே இஸ்ரவேலுக்குச் சொன்ன வார்த்தைகள். கர்த்தர் ஆபிரகாமைத் தெரிந்தெடுத்ததும், இஸ்ரவேல் சந்ததியைத் தமக்கென பிரித்தெடுத்ததும், அவர்கள் தகுதியானவர்கள் என்பதினால் அல்ல. அது அவருடைய சுத்த கிருபை. அதற்காக அவர் மற்ற ஜனங்களை வெறுத்துவிட்டார் என்பது அர்த்தமல்ல. இவர்களுக்கூடாக முழு உலகத்தையும் சந்திப்பதே தேவ நோக்கமாயிருந்தது. ஆனால் இஸ்ரவேல் அதில் தவறிவிட்டது. என்றாலும், வாக்குமாறாத தேவன், தமது குமாரனை ஏக பலியாக உலகிற்கு அனுப்பினார். அவர் மூலமாக பூரணமான மீட்பை நமக்கு ஏற்படுத்தினார். எப்படி? நாம் பரிசுத்தர் என்பதினாலா? அல்லது, நல்லவர்கள் என்றா? “நாம் பாவிகளாயிருக்கையில்” இது ஒரு ஆச்சரியமான வார்த்தை. அதிலும் அவர் அருளிய மீட்பைப் பெற்றுக்கொள்ளத்தக்க விசுவாசத்தை நம் உள்ளத்தில் ஊற்றினாரே அது எதினாலே? நாம் அவரை நேசிக்கிறோம் என்பதாலா? இல்லை! அவர் நம்மை நேசித்ததால்தானே. யூதாஸையே “சிநேகிதனே” என்று அழைத்தவரை நினைத்துப்பார்ப்போம்.

ஆண்டவர் கைவிட்டாரோ என்ற எண்ணம் மனதை வேதனைப்படுத்துமானால் இந்த வார்த்தைகளை நினைவுகூருவோம். நான் பாவியாயிருக்கும்போதே எனக்காக மரிக்கும்படி தமது குமாரனைத் தந்த பிதா, ஆண்டவருடைய உயிர்ப்பின் வல்லமையை மறைத்துப்போடுவாரா? துரோகியாக இருந்தபோதே என்னை நேசித்தவர், தம்மை நேசிக்கும்படி என்னைப் பெலப்படுத்த மாட்டாரா?

“ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” (யோவான் 15:13).

ஜெபம்: அன்பின் தேவனே, நான் துரோகியாய் இருந்தபோதே என்னில் அன்புகூர்ந்தீர்; பதிலீடாக நான் எதை செலுத்தமுடியும். என்னையே அர்ப்பணிக்கிறேன். ஆமென்.

சத்தியவசனம்