ஜெபக்குறிப்பு: 2019 மே 22 புதன்

என் வேண்டுதலுக்கு என் ஜீவனும், என் மன்றாட்டுக்கு என் ஜனங்களும் எனக்கு கட்டளையிடப்படுவதாக (எஸ்தர் 7:3) இந்திய தேசத்தின் பாராளுமன்ற தேர்தல் எல்லா இடங்களிலும் முடிவடைந்து நாளைய தினத்தில் முடிவு தெரிய உள்ள நிலையில் அனைவருமாக மதசார்பற்ற அரசு மத்தியில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஆண்டவருடைய சமுகத்தில் மன்றாடுவோம்.

உனக்கிருப்பதில் கொடுப்பாயா?

தியானம்: 2019 மே 22 புதன் | வேத வாசிப்பு: மத்தேயு 27:57-60

“உங்களுக்குக் கொடுக்கப்படுகிற …காணிக்கையிலுமுள்ள உச்சிதமான பரிசுத்த பங்கையெல்லாம் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்” (எண். 18:29).

‘நாம் உயிரோடிருக்கும்போது பெயர், புகழ், அழகு, அந்தஸ்து என்று சொல்லவா வேண்டும்! ஆனால் ஆவி பிரிந்த மறுகணமே, இன்னார் என்றா பேசுகிறார்கள்; “சடலம்” என்றுதானே அழைக்கிறார்கள். மரித்துவிட்டால் நமது பெயரையோ, பட்டங்களையோ குறிப்பிட்டுப் பேசுவது கிடையாது. அதிலும் இன்றைய காலகட்டத்திலே, மிருகத்திலும் கேவலமாக மனித சடலங்கள் வீதியெங்கும் சிதறடிக்கப்படுகிறதே” என்று ஒரு ஊழியர் அலுத்துக் கொண்டார். இது உண்மைதானே!

ஆனால், இயேசு மரித்தபோது, அவருக்கு அந்தரங்க சீஷனாக இருந்த யோசேப்பு, தன்னைப் பகிரங்கப்படுத்தி, இயேசுவின் சரீரத்தை அடக்கம் பண்ண தனது புதிய கல்லறையையும் கொடுக்க முன்வந்ததைக் காண்கிறோம். அவன் யூதருக்குப் பயந்ததினால் இதுவரை அந்தரங்க சீஷனாக இருந்தான். (யோவா. 19:38). ஆனால் இப்போது இயேசு மரித்த பிற்பாடு, யோசேப்பு துணிந்து, பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு வாங்கி, தனது புதிய கல்லறையிலே வைப்பதையும் காண்கிறோம். பயத்தினால் அந்தரங்க சீஷனாக இயேசுவைப் பின்பற்றியவன், நினைத்திருந்தால், தன்னை வெளிக்காட்டாமலே இருந்திருக்கலாம். யாருக்கும் எதுவும் தெரிந்திருக்காது. ஆனால் அவன் இயேசுவின் சரீரத்துக்கு இறுதி மரியாதை செலுத்த விரும்பியவனாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டான். இயேசு உயிரோடிருந்தபோது அவரைச் சந்திக்கவே பயந்த இவன், இப்போது அதே இயேசுவுக்காய் துணிந்ததைக் காண்கிறோம். அதுமாத்திரமல்ல, இப்போது அவருக்கும் தேவையானது ஒரு கல்லறை என்பதை உணர்ந்து, தனக்கென்று வெட்டி வைத்திருந்த புதிய கல்லறையையும் அவருக்கென்று மனப்பூர்வமாய்க் கொடுத்தான்.

இன்று அநேகர் நன்மை பெறுவதற்காக இயேசுவிடம் ஓடிவருகிறார்கள். பெற்றுக்கொண்ட பின்னர் மறைந்துவிடுகிறார்கள். அவருக்காய் எதையும் மனமுவந்து மனப்பூர்வமாய்க் கொடுக்க யார் முன்வருகிறார்கள்? விலாங்கு மீன்போல தேவைக்கேற்ப தலையையும், வாலையும் காண்பித்து வாழுவோர் எத்தனை பேர்! நம்மை நரகத்தின் பிடியிலிருந்து தப்புவித்த ஆண்டவருக்காய் துணிந்து ஒரு அடியாகிலும் எடுத்துவைக்க நாம் ஆயத்தமா? அவருக்காக நமக்குரியதை மனமுவந்து கொடுக்க நாம் ஆயத்தமா?

“…மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக” (யாத்தி.25:2).

ஜெபம்: அன்பின் கர்த்தாவே, தேவ பணிகளுக்கென விசனத்தோடும் கட்டாயத்தோடும் கொடுக்காமல் மனப்பூர்வமாய்க் கொடுக்கும் பரந்த இருதயத்தை கிருபையாய் எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.