Daily Archives: May 14, 2019

ஜெபக்குறிப்பு: 2019 மே 14 செவ்வாய்

… எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள் (ரோம.8:14) என்று வாக்குப்படி நமது பங்காளர் குடும்பங்களிலே ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சிக்காக ஜெபிக்கக் கேட்ட ஒவ்வொருவரையும் கர்த்தருடைய ஆவியானவர் போதித்து செம்மையான வழியில் நடத்திச்செல்ல மன்றாடுவோம்.

கிருபை வரம்

தியானம்: 2019 மே 14 செவ்வாய் | வேத வாசிப்பு: ரோமர் 5:15-19

“பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்” (ரோமர் 6:23).

“இன்றைக்கே வாழக் கஷ்டப்படும்போது, மறுமை வாழ்வைப்பற்றி நினைக்க எங்கே நேரம்?” என்று அலுத்துக்கொள்கிறவர்கள் பலர். நம்முடைய அன்றாட தேவைகள் பிரச்சனைகளில் அதிகமாக நாம் மூழ்கிவிடுவதால், பல முக்கிய விஷயங்களைக் குறித்துச் சிந்திக்கக்கூட நம்மால் முடிகிறதில்லை. மறுபக்கமாகப் பார்த்தால், அழியாத வாழ்வைக் குறித்துச் சிந்திப்பதைத் தடுப்பதற்காகவே நாளை மாறிப்போகும் வாழ்வின் சாதாரண விஷயங்களையெல்லாம் பெரிதாக்கி சத்துரு நம்மை வஞ்சிக்கிறானோ என்று எண்ணத் தோன்றுகிறது.

“கிருபை வரம்” – இதுவொரு மிக அழகான ஆழமான சொல். நாம் அனைவருமே ஆதாமின் சரீர சம்பந்தமான குடும்ப வம்சத்திலிருந்து வந்தவர்கள்தான். அதனால் ஆதாமுடைய பாவத்திற்கான பலனை – மரணத்தை – நாமும் அனுபவிக்கிறோம். ஆதாமுக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு, பாவ சுபாவம் அதாவது பாவம் செய்யத்தக்க உந்துதல், பாவத்திற்கான தேவ தண்டனை எல்லாம் இன்று நமக்கும் உண்டு. ஆனால் இயேசுவோ, நமது பாவத்தைத் தாம் எடுத்துக்கொண்டு, தமது நீதியை நமக்கு வழங்கி, புதிதாய் பிறந்தவர்களாய் தமது குடும்ப அங்கத்தவர்களாக நம்மை மாற்றியிருக்கிறார். இந்தக் கிருபை வரம் எத்தனை மகத்தானது. இது மீறுதலின் பலனுக்கு ஒப்பானதல்ல (வச.15). இது அநேக குற்றங்களை நீக்கி நீதி விளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாகிறது (வச.16). கிருபை வரம் பரிபூரணமானது (வச.17). எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு எதுவான தீர்ப்பைத் தந்திருக்கிறது (வச.18). இந்தக் கிருபை வரத்தினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுகிறார்கள் (வச.19).

சேற்றின் பள்ளத்தாக்கில் கிடந்த என்னைத் தேடிவந்து தூக்கியெடுத்து, நித்திய நரகத்திற்கென்று தீர்க்கப்பட்ட எனக்கான தீர்ப்பை அழித்து எழுதி, பாவத்தின் பிடியில் சுகமாய் தங்கி சத்துருவின் வஞ்சகத்தை உணராமல் தேவனைத் துக்கப்படுத்தி வாழ்ந்த என்னை இன்று தமது பிள்ளையாக ஏற்று, “தேவனுடைய பிள்ளை” என்ற அதிகாரத்தைத் தந்த தேவனுக்கு நான் என்ன சொல்லி நன்றிகளைத் தெரிவிப்பேன். இப்படியாக, தேவன் அளித்த கிருபை வரத்தைக் கிருபையாய் பெற்றிருக்கிற நாம் கிருபைக்குள் அடங்கி தேவநாமத்தை மகிமைப்படுத்தி வாழுவோமா?

“தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை … விடுவிக்கவும், பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள் மேல் நோக்கமாயிருக்கிறது” (சங். 33:18,19).

ஜெபம்: கர்த்தாவே, சேற்றில் வாழ்ந்த என்னை கழுவி சுத்திகரித்து பிள்ளையாய் மாற்றினீரே. இது நீர் தந்த கிருபை வரம் இதற்கு எப்போதும் நன்றியோடு ஜீவிக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.

சத்தியவசனம்