ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 3 செவ்வாய்

இந்த மாதத்தில் நடைபெறும் அனைத்து சத்தியவசன ஊழியப் பணிகளுக்காகவும், சத்தியவசன செய்தியாளர்கள், எழுத்தாளர்களை கர்த்தர் நல்ல சுகபெலத்தோடு பாதுகாத்து பிரசங்கிக்கப்படும் வார்த்தைகள், தியானங்களினாலே அநேகர் கிறிஸ்துவுக்குள் வளர தேவகிருபைக்காக ஜெபிப்போம்.

கொண்டாட்டங்கள்!

தியானம்: 2026  பிப்ரவரி 3 செவ்வாய் | வேத வாசிப்பு: எண்ணாகமம் 9:1-14

YouTube video

… பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே கட்டளை இருக்க வேண்டும் என்று சொல் என்றார் (எண்ணாகமம் 9 :14).

இன்றைய காலகட்டத்தில் கிறிஸ்மஸ் பண்டிகையும், கிறிஸ்து உயிர்ப்பு கொண்டாட்டமும் அர்த்தமற்றதாகக் கொண்டாடப்படுவதையும், இதில் கிறிஸ்துவுக்கே இடமில்லாத வகையில் கிறிஸ்து மறைக்கப்படுவதையும், மறக்கப்படுவதையும் காண்பது துக்கத்துக்குரிய விஷயமே. ஆனால் பலரும், இது ஒரு கொண்டாட்டம்தானே, இதை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடி மகிழலாமே என்பார்கள். கொண்டாட்டங்களை இன்று பணம் மட்டுமே நிர்ணயிக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

இன்றைய தியானப்பகுதியில், இஸ்ரவேலர் எகிப்தில் இருந்து புறப்பட்டு, இப்போது இரண்டாவது ஆண்டுக்குள் வருகிறபோது, தேவன் மோசேயிடம், பஸ்காவை ஆசரிக்கும்படி கூறுகிறார். அந்த பஸ்காவை எப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்று தேவன் மோசேக்கு விளக்குகிறார். அவ்வண்ணமாகவே அவர்கள் அதனை ஆசரித்தார்கள். இதிலும், யாராவது இறந்த பிணத்தைத் தொட்டிருந்தால் அவர்கள் சுத்தமற்றவர்கள், தீட்டானவர்கள் என்று கருதப்படுவர். அப்படிப்பட்டவர்கள் கூட எப்படி, எப்போது இந்தப்பஸ்காவை ஆசரிக்கலாம் என்பதையும் தேவன் தெளிவுபடுத்துகிறார். இதை ஒருவன் ஆசரிக்காமல் விட்டாலும் அவன் இஸ்ரவேல் குடிகளில் இருந்து தள்ளிவைக்கப்படுவான் என்றும் தேவன் சொன்னார். பரதேசியொருவன் இந்நாட்களில் வந்திருந்தாலும் அவனும் அவ்வண்ணமே பஸ்காவை ஆசரிக்கவேண்டும். பரதேசிக்கும், சுதேசிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்கிறார் தேவன்.

அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் விடுதலைபெற்றதை நினைந்து பஸ்காவை ஆசரிப்பதுபோலவே, நாமும் கிறிஸ்து நம்மைப் பாவத்தின் அடிமைத்தனத்தினின்று மீட்கும்படிக்கு வந்து பிறந்ததையும், பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து மீண்டும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததையும் நினைவு கூர்ந்து கொண்டாடுகிறோம். இதை எப்படி கொண்டாடவேண்டும் என்று தேவன் சொல்லாவிட்டாலும், அதற்குக் காரணரும், அதன் அர்த்தமும் மறைந்து போகும்வண்ணம் நாம் கொண்டாடலாமா? இம்முறை வெளிநாட்டு உறவினர்கள் வந்தார்கள், அதனால்தான் இப்படியாகிவிட்டது என்று சிலர் சொல்லக்கூடும். வெளிநாட்டவர் வந்தாலும் நான் என் இயேசு பிறப்பை எப்படியாகக் கொண்டாடுகிறேன் என்பதை அவர்கள் பார்த்துக் தெரிந்துகொள்ளட்டும் என்று ஏன் நான் நினைப்பதில்லை? எனது வீட்டுக்கு வரும்போது, அவர்களுக்கு நான் முன்மாதிரியாக இருக்க வேண்டாமா? இனிமேலாவது இயேசு பிறப்பின் நினைவு கூருதலை அவருக்குச் சாட்சியாக மாற்றியமைக்க முன்வருவோமா? எனது கொண்டாட்டம் எப்படிப்பட்டது என்பதை அவர் கவனிக்கிறார்.

ஜெபம்: அன்பின் தேவனே, அடிமைத்தனத்திலிருந்து என்னை நீர் மீட்டுக்கொண்டதால் உமக்கு நன்றி. நான் என்றும் உம்மையே மகிழ்விக்க உதவியருளும். ஆமென்.