ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 6 வெள்ளி

அவர் வரும் நாளை சகிப்பவன் யார்? (மல்கி.3:2) கடைசிநாட்களின் அடையாளங்களும், தீர்க்கதரிசனங்களும் நிறைவேறி கொண்டிருக்கிற இந்நாட்களில் வஞ்சிக்கப்பட்டுப் போய்விடாதபடி, எஜமான் வரும்போது விழித்திருக்கிறவர்களாக காணப்படும்படி ஆயத்தத்தோடு இருக்க பாரத்துடன் ஜெபிப்போம்.

சூழ்நிலைகளுக்கு அப்பாற்பட்டவர்

தியானம்: 2026  பிப்ரவரி 6 வெள்ளி | வேத வாசிப்பு: எண்ணாகமம் 13:25-33

YouTube video

என்னுடைய தாசனாகிய காலேப் … உத்தமமாய் என்னைப் பின்பற்றி வந்தபடியினாலும், … தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன் (எண்ணாகாமம் 14:24).

இவ்வுலக வாழ்வில் சூழ்நிலைகள் திடீரென மாறலாம். நாம் எதிர்பார்த்திராத பல காரியங்களை எதிர்கொள்ளவேண்டி வரலாம். அப்படிப்பட்ட நேரங்களில் நாம் எப்படியாக அதை எதிர்கொள்ளுகிறோம்? அந்த நேரத்தில்தான் நமது விசுவாசம் சோதிக்கப்படுகிறது. கர்த்தர் நடத்துவார், அவர் ஆசீர்வதிப்பார், நன்மையானதைச் செய்வார். இப்படியெல்லாம் நாம் வாய்ப்பேச்சில் சொல்வதுண்டு. ஆனால் திடீரென சூழ்நிலை மாறிப்போகும்போது நாமும் தடுமாறிப் போகிறோம்.

கானானைச் சுதந்தரித்துக் கொள்ளவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு புறப்பட்டு வந்த மக்கள், வழியில் எத்தனையோ போராட்டங்களை எதிர் நோக்கினார்கள், சில நேரங்களில் முறுமுறுத்தார்கள், மோசேக்கு எதிராகக் கலகம் பண்ணினார்கள். தேவனை மறந்தவர்களாய் தங்களுக்கென்று தெய்வங்களை உண்டுபண்ணினார்கள். இப்படியாக எத்தனையோ பாவங்களைச் செய்தார்கள். தேவனோ பொறுமையாக அவர்களை வழிநடத்தி வந்தார். இப்போது கானானுக்குள் பிரவேசிக்கும் முன்பதாக அதை வேவு பார்த்து வரும்படிக்கு சிலரை மோசே அனுப்பியபோது, அவர்கள் துர்ச்செய்தியையே பரப்பினார்கள். ஆனால் யோசுவாவும், காலேபும் மட்டுமே தேவன் வாக்குப் பண்ணியபடியே தம்மைக் கொண்டுபோய் சேர்ப்பார் என்று முழுமையாக விசுவாசித்து அறிக்கை பண்ணினார்கள். கர்த்தர்மீது அவர்களுக்கிருந்த விசுவாசம் அவர்களை எல்லாவற்றையும் நல்லபடியாகவே பார்க்க வைத்தது. மற்றவர்கள் வந்து, அந்தக் கானானியருக்கு முன்பாக நாம் வெட்டுக்கிளிகளைப் போல இருந்தோம் என்று துர்ச்செய்தியைச் சொன்னபோது, அந்த வெட்டுக்கிளிகளோடு இருப்பவர் சர்வவல்லமையுள்ள தேவன் என்பதுவே யோசுவா, காலேப்பின் கண்களுக்குப் புலப்பட்டது. காரணம் தேவனின் அதிசயங்களைக் கண்டு வளர்ந்த அவர்கள், மற்றவர்களைப்போலச் சூழ்நிலைகளைக் கண்டு பயந்துவிடவில்லை. நாம் ஆராதிக்கும், நம்மை வழிநடத்தும் கர்த்தர் சூழ்நிலைகளுக்கு அப்பாற்பட்டவர் என்பதை அவர்கள் நம்பினார்கள்.

பிரியமானவர்களே, நீங்களும் மாறிப்போகின்ற சூழ்நிலைகளுக்குப் பயந்து, அந்தச் சூழ்நிலைக் கைதிகளாக இருக்கிறீர்களா? அதிலிருந்து வெளியே வாருங்கள். நம் கர்த்தரையே நோக்கிப் பாருங்கள். அவரே உங்களுக்கு அடைக்கலமான தேவனாக இருக்கிறார். சூழ்நிலைகள் மாறிப்போகலாம், ஆனால் நாம் விசுவாசிக்கும் தேவனோ நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும் (சங்கீதம் 31:15).

ஜெபம்: கர்த்தாவே, நாங்கள் சூழ்நிலைகளைக் கண்டு பயப்படாமல், சூழ்நிலைகளை ஆளுகிற உமக்குப் பயந்து நடக்க எங்களை அர்ப்பணிக்கிறோம். ஆமென்.