ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 16 திங்கள்

தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் எல்லா ஊழியங்களுக்காகவும், கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் மூலம் நடத்தப்படும் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகளுக்காகவும், நடைபெறப்போகும் சட்டமன்றத் தேர்தல் பணிகளில் வன்முறை தூண்டப்படாதபடியும், கர்த்தருடைய கரம் மாநிலத்தின்மேல் இருக்கும்படி ஜெபிப்போம்.

கர்த்தரின் அபிஷேகம்

தியானம்: 2026  பிப்ரவரி 16 திங்கள் | வேத வாசிப்பு: 1சாமுவேல் 24:1-10

YouTube video

… கர்த்தர் என்னை உன் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், நீ என்னைக் கொன்றுபோடவில்லை (1சாமு. 24:18).

நமக்கு அதிக பிரச்சனைகளைத் தரும் ஒருவர் பிரச்சனையில் அகப்பட்டுத் தவிக்கும்போது. எனக்கு இவர் செய்ததின் பலனைத்தான் இப்போது அனுபவிக்கிறார் என்ற எண்ணம்தான் முதலாவது நமது மனதில் தோன்றும். இல்லாவிட்டால் இவருக்கு நல்ல பாடம் புகட்ட எனக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்று எண்ணத் தோன்றும். இது சாதாரணமாக ஒரு சராசரி மனிதனின் மனதில் தோன்றும் எண்ணங்கள். ஆனால் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு அவருடைய பிள்ளைகளாய் இருக்கும் நாமும் இவ்விதமான எண்ணம் உடையவர்களாய் இருக்கலாமா? பிறருக்கும் நமக்கும் வித்தியாசம் இருக்க வேண்டாமா?

சவுலினால் அதிக துன்பங்களை அனுபவித்த தாவீதுக்கு சவுலைக் கொன்றுபோடும்படி இரு சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும், தேவன் அபிஷேகம் பண்ணினவர்மேல் என் கையைப் போடமாட்டேன் என்று சொல்லி அவ்விரு சந்தர்ப்பங்களையும் தாவீது வேண்டுமென்றே நழுவவிட்டார். சவுலின் இடத்தில் இப்போது ராஜாவாக தான் அபிஷேகம் பண்ணப்பட்டிருப்பதை அறிந்தும், தன்னை அபிஷேகம் பண்ணின தேவன் அந்த ஸ்தானத்தில் தன்னை வைக்கும்வரைக்கும் தாவீது பொறுமையுடையவராய் இருந்தார். கர்த்தரின் அபிஷேகம் என்பது உன்னதமானது என்பதை தாவீது உணர்ந்திருந்தார். கர்த்தர் அபிஷேகம் பண்ணியவர்மீது அவன் கைபோடவுமில்லை; தான் அபிஷேகம் பெற்றவர் என்று தாவீது அகந்தை கொள்ளவுமில்லை.

இப்படியிருக்க, நமக்குத் தீங்கு செய்ய நினைத்தவர்கள் விஷயத்தில் நாம் எப்படி நடந்துகொள்ளப்போகிறோம்? உங்கள் வேலை ஸ்தலத்திலோ. குடும்பத்திலோ பிறரினால் பலவிதமான துன்பங்களை நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கலாம். அல்லாவிட்டால், பலவிதமான கசப்புணர்வுகளுடன் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஏன் நாம் இன்னுமொரு தாவீதாக மாறக்கூடாது? உங்களை உருவாக்கி, மீட்டெடுத்த ஆண்டவரை நோக்கிப் பாருங்கள். எல்லாவிதமான பிரச்சனைகளையும் எதிர்கொள்ளவும். மற்றவர்களை மன்னிக்கவும் அவர் உங்களுக்குப் பெலன் தருவார். நம்மைத் துன்புறுத்து வோருக்கு நாமும் தீங்கு நினைப்பது மிகவும் இலகுவான காரியம். ஆனால் அவர்களை மன்னிப்பதோ மிகவும் கடினமான காரியம், அதைச் செய்யவே ஆண்டவர் நம்மை அழைக்கிறார்.

“சத்துருக்களை சிநேகியுங்கள், சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள். துன்பப்படுத்துபவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்” (மத். 5:44) என்று ஆண்டவர் சொன்னாரே!

ஜெபம்: மன்னிக்கிறதில் தயை பெருத்திருக்கும் ஆண்டவரே, உமது பிள்ளையாகிய நானும் மற்றையோரை மன்னித்து வாழ எனக்கு உதவி செய்வீராக. ஆமென்.