ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 26 வியாழன்

பப்புவா (இந்தோனேஷியா)-க்காக ஜெபிப்போம்: இங்கு காணப்படும் இனமோதல்கள் நிறுத்தம் பெற்று அமைதியடையவும், பழங்குடி விசுவாசிகளுக்கிடையே உயிர்மீட்சி காணப்படுவதற்கும் ஜெபிப்போம்.

அவருக்குள் மகிழ்ந்திரு!

தியானம்: 2026  பிப்ரவரி 26 வியாழன் | வேத வாசிப்பு: பிலிப்பியர் 4:1-13

YouTube video

கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள் சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன் (பிலிப்பியர் 4:4).

சமீபத்திலே ஒரு பெரியவர் இறந்தபோது, சொல்லப்பட்ட இரங்கலுரையை செவிமடுக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் குறிப்பாக, அவர் கடைசி வரைக்கும் கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாக இருந்தார் என்று சொல்லப்பட்டது. கடைசிக் காலத்தில் பக்கவாதம் வந்து கட்டிலில் இருந்ததாகவும், அவர் எந்த நிலையில் இருந்தாலும், கர்த்தருக்குள் சந்தோஷமாகவே இருந்ததாகவும் சொல்லப்பட்டது. அதுமட்டுமல்ல, அவருடன் இருந்தவர்கள் யாராவது தங்கள் வாழ்வைக் குறித்து முறுமுறுத்தால், அவர் அப்படிச் சொல்லவேண்டாம், நாம் எப்போதும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சொல்லி, அவருக்குள் சந்தோஷமாக இருக்கப் பழகவேண்டும் என்று அவர்களுக்கும் புத்தி சொல்வாராம்.

இங்கே பரிசுத்த பவுல் பிலிப்பியருக்கு நிருபத்தை எழுதியபோது, அவர் சந்தோஷமான ஒரு சூழ்நிலையில் இருந்து எழுதவில்லை. அவர் சிறைச்சாலையில் இருந்தே இதை எழுதினார். சிறைச்சாலையில் இருந்து எழுதும் ஒருவர், “கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாய் இருங்கள்” என்று எப்படி எழுதமுடியும் என்று நாம் எண்ணலாம். ஆனால் உண்மையாகவே ஒருவர் கர்த்தருக்குள் இருந்தால் அவரால் எந்த சூழ்நிலையிலும் நிச்சயமாகவே சந்தோஷமாக இருக்கமுடியும். நாம் ஒன்றுக்கும் கவலைப்படாமல், நமது தேவைகள் விண்ணப்பங்கள் அனைத்தையும் தேவனுடைய பாதத்தில் வைத்து ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலே ஏறெடுக்கும்போது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் நமது இருதயத்தையும் சிந்தைகளையும் கிறிஸ்துவுக்குள்ளாய் காத்துக்கொள்ளும். கவலையோடு இராதபடிக்கு தேவசமாதானம் எங்களை ஆட்கொள்ளும். ஒருவன் சமாதானத்தோடே இருந்தால் எப்போதும் சந்தோஷமாய் இருக்கமுடியும் அல்லவா!

அடுத்து, மனரம்மியமான வாழ்வு. அதாவது நான் எந்த நிலையில் இருந்தாலும். மனரம்மியமாய் இருக்கக் கற்றுக்கொண்டேன் என்கிறார் பவுல். இந்த நிலைகூட சந்தோஷமாக இருப்பதற்குத் தேவையான ஒன்றுதான். வாழ்வில் நமக்குத் திருப்தியில்லை என்றால் நாம் சந்தோஷத்தை இழந்துவிடுவோம். திருப்தியுள்ள மனமே சந்தோஷமான வாழ்வின் இரகசியம் என்றால் அது பொய்யல்ல. சிலர் எந்நேரமும் தங்கள் வாழ்வைக் குறித்து முறுமுறுப்புடனும், துக்கிப்புடனும் திருப்தியில்லாமல் இருப்பார்கள். அவர்கள் சந்தோஷத்தை இழந்துவிடுவார்கள். நாம் எல்லா நிலையிலும் மனோரம்மியமாய் இருக்கக் கற்றுக்கொண்டால் எப்போதும் சந்தோஷமாய் வாழலாம். கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான் (நீதிமொழிகள் 19:23).

ஜெபம்: அன்பின் தேவனே, நாங்கள் எப்போதும் மனரம்மியமாகவும், கர்த்தருக்குள் சந்தோஷமுள்ளவர்களாகவும் வாழ்ந்திருக்க தூயஆவியானவர் பெலன் தரும்படியாக ஜெபிக்கிறோம். ஆமென்.