ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 18 புதன்
நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும் … உபவாசத்தைக் கூறினேன் (எஸ்றா.8:21) கர்த்தருடைய பாடுகளைக் குறித்து அதிகமாக தியானிப்பதற்கும், நமது சரீரங்களை ஒடுக்கி தேவனுக்கு முன்பாக நம்மை தாழ்த்துகிறதற்கும் தேவன் கிருபையாக தந்த லெந்து நாட்களை நமது ஆவிக்குரிய வாழ்விற்கு பிரயோஜனமாக்கிக் கொள்ள அர்ப்பணித்து ஜெபிப்போம்.
கீழ்ப்படிதலின் முக்கியத்துவம் !
தியானம்: 2026 பிப்ரவரி 18 புதன் | வேத வாசிப்பு: உபாகமம் 4:1-14

உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும், … நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவைச் சாக்கிரதையாய்க் காத்துக்கொள் (உபாகமம் 4:10).
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது பழமொழி. அது போலவே தேவன் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்லும் காரியம் ஒன்று தான்: அதுவே கீழ்ப்படிவு. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இடத்திற்குச் சென்று, எல்லாம் நன்றாக அமையும்போது, தேவன் சொன்ன யாவற்றையும் மறந்து போகாதபடி எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். இதைத்தான் தேவன் மீண்டும் மீண்டும் தமது ஜனத்துக்கு கூறி எச்சரித்து வந்தார்.
எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து அற்புத அடையாளங்களோடு தேவன் இஸ்ரவேலரை வெளியேற்றினார். அவருடைய வழிநடத்ததுதலைக் கண்களால் கண்டும், இஸ்ரவேல் அதை மறந்து, வனாந்தர வாழ்க்கையிலே மீணடும் மீண்டும் முறுமுறுத்தும், தேவனுக்கு எதிராகப் பேசுவதும், மீண்டும் எகிப்துக்குத் திரும்பிப் போவோம் என்று பின்னிட்டுப் பார்த்தும் தேவனைத் துக்கப் படுத்தினார்கள். இந்த ஜனம் பாலும் தேனும் ஓடுகிறதான கானானுக்குள் பிரவே சித்ததும் கர்த்தரை மறந்துபோவார்கள் என்பது நிச்சயமே. அதனால்தான் மீண்டும் மீண்டும் மோசேக்கூடாகக் கர்த்தர் இதையே எச்சரித்துக்கொண்டு வந்தார். அவர்களுக்காகக் கர்த்தர் பத்துக் கற்பனைகளை மோசேக்கூடாக கொடுத்தார். அவற்றைக் கைக்கொள்ளும்படிக்கு உத்தரவிட்டார். அந்த கற் பலகைகளை மோசே உடைத்துப்போட்ட போதிலும், தேவன் மீண்டுமாக கற் பலகைகளைச் செய்துகொண்டு வரும்படிக்கு மோசேக்குக் கட்டளையிட்டு, அதிலே அதே பத்துக் கட்டளைகளையும் மீண்டுமாக எழுதினார். ஆம், அது அவ்வளவு முக்கியம் என்பதை தேவன் சொல்லாமற் சொன்னார். அக் கட்டளைகளை அவர் எழுதிக்கொடுத்தது மாத்திரமல்லாமல், அதைக் கைக்கொள்ளும்படிக்கும், அதற்கு முற்றிலுமாய்க் கீழ்ப்படியும்படிக்கும் கட்டளையிட்டார்.
இயேசுவானவர் பல இடங்களிலும் இப்பத்துக் கற்பனைகளை எடுத்துக்காட்டி பேசியதையும் நாம் மறுக்கமுடியாது. எனவே தேவனுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுத்தலும், அதற்குக் கீழ்ப்படிதலும் நமது வாழ்வில் முக்கியமான ஒன்றாக இருக்கவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்வோம். இன்று நம்மில் பலர் ஜெபத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். காரணம், நமது வேண்டுதல்களை அது நிறைவேற்றுவதாய் இருப்பதால். ஆனால், வார்த்தைக்கு அதே முக்கியத்துவத்தைக் கொடுக்கத் தவறிவிடுகிறோம். ஆனால், வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்காதவனின் ஜெபமும் அருவருக்கப்படத்தக்கது என்று வேதவாக்கியம் நமக்கு எச்சரித்திருக்கிறது. வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபம் அருவருப்பானது (நீதிமொழிகள் 28:9 ).
ஜெபம்: அன்பின் கர்த்தாவே, இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் செய்ய கவனமாயிருக்கும்படி என்று போதிக்கப்பட்டபடி தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்க உமது பெலன் தாரும். ஆமென்.