ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 17 செவ்வாய்

துருக்கி – ற்காக ஜெபிப்போம்: சுற்றுச்சூழல் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக காணப்படும் பிரச்சனைகள் தீருவதற்கும், பலவித எதிர்ப்புகள் மத்தியிலும் புதிய விசுவாசிகள் தொடர்ந்து கர்த்தருக்குள் நிலைத்திருக்க, தேவாலய பணிகள் தடைகளின்றி நடைபெற ஜெபிப்போம்.

எல்லையைக் கடக்காதே

தியானம்: 2026  பிப்ரவரி 17 செவ்வாய் | வேத வாசிப்பு: எண்ணாகமம் 34:1-18

YouTube video

அன்றியும், தேசத்தைப் பங்கிடும்படி ஒவ்வொரு கோத்திரத்தில் ஒவ்வொரு தலைவனையும் தெரிந்துகொள்ளுங்கள் (எண்ணாகமம் 34:18).

எண்ணாகமம் முழுவதையும் பார்க்கிறபோது, அதிகமான எண்ணிக்கையும், எண்கள்படி பிரித்தலும், குழுக்களாகப் பிரித்தலும், காணியாட்சிகளைப் பிரித்தலும் என்று அவ்வப்போது எண்கள் சார்ந்ததாகவே எல்லாம் இருக்கிறது. இதனால்தான் என்னவோ இதற்கு எண்ணாகமம் என்று பெயர் வந்தது. இது எதைக் காட்டுகிறது என்றால் தேவன் ஒழுங்குமுறைகளைக் கொண்டவர். நேர்த் தியாக காரியங்களை நகர்த்துகிறவர். செய்கின்றவர். இன்று பல இடங்களிலும் ஒழுங்குகள் தலைகீழாக மாற்றியமைக்கப்பட்டு இருப்பதைக் காண்கிறோம்! கானானுக்குள் இஸ்ரவேலரை வழிநடத்திச் சென்ற கர்த்தர், அவர்கள் அங்கு போய்ச் சேர்ந்ததும் அவர்களது எல்லைகளைக் குறித்து கொடுக்கிறார். ஒவ்வொரு கோத்திரத்துக்கும் அளவாக நிலத்தைப் பிரித்து, அவர்கள் எல்லை எது வரைக்கும் என்பதையும் குறிப்பிடுவதைக் காண்கிறோம். இதனைச் சரியாக நடைமுறைப்படுத்துவதற்கு எலெயாசாரும் யோசுவாவும் நியமிக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு கோத்திரத்திலும் ஒவ்வொருவரை இப்பணிக்காக தேவன் நியமிப்பதை காண்கிறோம். தேவன் அனைத்தையும் ஒரு ஒழுங்குக்கு அமைவாகவே செய்கிறார்.

அன்று ஆதாமையும், ஏவாளையும் ஏதேனிலே கொண்டு வந்து விட்ட தேவன் அவர்களுக்கென்று ஒரு எல்லையை வகுத்தார். இந்தத் தோட்டத்திலுள்ள விருட்சம் எல்லாவற்றையும் நீங்கள் புசிக்கலாம்; ஆனால் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம் என்று எல்லையை வகுத்தார். ஆனால் அவர்களோ அந்த எல்லையை மீறிப் பாவம் செய்தார்கள். மோசேயோ, கர்த்தர் சொன்னதைச் செய்யாமல், தண்ணீருக்காகத் தனது விருப்பப்படி கன்மலையை அடித்து கீழ்ப்படிவு என்றதான எல்லையை மீறினார், கானானுக்குள் பிரவேசிக்கும் பாக்கியத்தையும் இழந்துபோனார். இப்படியாக தேவன் குறித்த எல்லையை மீறிப் பாவம் செய்தோர் எத்தனையோ பேர்.

இன்று தேவன் நமது வாழ்வுக்கும் ஒரு எல்லையைக் குறித்திருக்கிறார். நாம் அந்த எல்லைக்குள் நிற்கும்போது தேவனோடு இருக்கிறோம். அந்த எல்லையை மீpறிப்போகும்போது, நமது வாழ்வில் தேவனின் அநாதி திட்டத்தை விட்டு வெளியே வந்து விடுகிறோம். பரிசுத்த பவுல் தனது நிருபத்தில் குறிப்பிடும்போது, “எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆனாலும் எல்லாம் தகுதியாயிராது” என்கிறார். நமது எல்லையை நாம் அறிந்திருக்கிறோமா? நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யாரென்று சொல்லாதபடிக்கும், தரித்திரப்படுகிறதினால் திருடி என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும் என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும் (நீதிமொழிகள் 30:9).

ஜெபம்: எங்கள் நல்ல ஆண்டவரே, நீர் எங்களுக்கு நியமித்துள்ள எல்லைப்பகுதியை நாங்கள் உணர்ந்து அதை மீறாதிருக்கும் கிருபையை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.