ஒரு பிறந்த குழந்தைக்கு பாலைக் குடிக்கக் கொடுக்கிறோம். மூன்று மாதம் முடிய பாலோடு வேறு உணவுகளையும், ஆறுமாதம் முடிய கடின உணவுகளைக் கொடுக்கிறோம். இவற்றினால் பிள்ளை ஆரோக்கியமாக வளருகின்றது. தாவீது ஒரு ஆட்டிடையன்; சவுலைச் சந்தித்து, தான் கோலியாத்தோடு சண்டைக்குப்போக உத்தரவு கேட்கிறான். சவுல் அதை நம்பவில்லை. நீ சிறியவனாக இருக்கிறாய், அவனோ சிறுவயது முதல் யுத்தவீரனாய் இருக்கிறான் என்று சொல்லி, தாவீதுக்குத் தனது உடைகளையும், தனது தலைச் சீராவையும், பட்டயத்தையும் கொடுக்கிறான்.
தாவீது அவற்றை அணிந்து, அவனது பட்டயத்தையும் கட்டிக்கொண்டு நடந்து பார்க்கிறான். பின்பு தாவீது சவுலைப் பார்த்து, “இதில் எனக்கு அப்பியாசம் இல்லை” என்று சொல்லி, தனது தடியைக் கையிலே பிடித்துக் கொண்டு, தனது கவணோடும், ஐந்து கூழாங்கற்களோடும் கோலியாத்தை நோக்கிப் போகிறான். சென்றவன் வெற்றியும் அடைந்தான். பின்னர் சவுல், இவன் யாருடைய குமாரன் என்று கேட்டறிந்து, அவனைத்தனது யுத்த மனுஷருக்கு அதிகாரியாக்கினான் என்று 1சாமு 18ம் அதிகாரத்தில் காண்கிறோம். தாவீது யுத்தமனுஷருக்கு அதிகாரியானதும், கூழாங்கற்களால் எதிரியை எப்படி அடிப்பது என்று சொல்லிக்கொடுக்க முற்படாமல், தாவீது பட்டயத்தாலும், ஆயுதங்களாலும் எப்படிப் போர்புரிவது என்பதைக் கற்றுக்கொள்கிறான். 1சாமுவேல் 21ல் அகிமெலேக்கிடம் சென்ற தாவீது, அவசரமாக வந்தபடியால் தனது ஈட்டியையும், ஆயுதத்தையும் கொண்டு வரவில்லையென்று சொல்லி, அவனிடம் ஈட்டி, ஆயுதத்தைக் கேட்கிறான். ஈட்டியைக் கொண்டு வரவில்லையே என்று தாவீது கூழாங்கற்களைப் பொறுக்கவில்லை.
கவனியுங்கள், ஆட்டிடையனாயிருந்த தாவீது யுத்தவீரனாக வளர்ச்சியும், தேர்ச்சியும் அடைந்தான். இதேபோலவே நாமும் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ச்சியடைய வேண்டும். குழந்தைகளைப்போல இருக்கக்கூடாது. இருபுறமும் கருக்குள்ள பட்டயமாகிய தேவனுடைய வார்த்தையைத் தியானித்து, அதை உட்கொண்டு, எதிரியை எதிர்த்து நிற்கும் திராணியை அடையவேண்டும். வானமண்டலங்களின் பொல்லாத ஆவிகளோடு நமக்கிருக்கும் யுத்தத்தில் நாம் ஜெயங்கொள்ளவேண்டும். அதற்கு நாம் ஆவிக்குரிய ஜீவியத்தில் அனுதினமும் வளரவேண்டும். வளருவதற்கு தினமும் வார்த்தையை தியானித்து, அதை நமதாக்கி, வாழ்வில் அதைப் பயிற்சிக்கவேண்டும். சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்தில் குழந்தைகளாயும், புத்தியிலே தேறினவர்களாயுமிருங்கள் (1கொரி.14:20).
ஜெபம்: அன்பின் கர்த்தாவே, நான் குழந்தையின் அனுபவத்திலிருந்து வளர்ந்த, முதிர்ந்த அனுபவத்திற்குள் கடந்து செல்ல எனக்கு உதவியருளும். ஆமென்.