ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 14 சனி
இந்திய தேசத்தின் அனைத்து மாநிலங்களுக்காகவும், எல்லா பட்டணங்களிலும் கிராமங்களிலும் நடைபெறும் மிஷனெரி பணிகள் மூலம் நற்செய்தி பரவவும், சபைகள் வளர்ச்சியடையவும், மிஷனரி ஸ்தாபன தலைவர்கள், உடன்ஊழியர்கள், ஊழியங்களை தாங்கும் விசுவாசிகள் சபைகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் வேண்டுதல் செய்வோம்.
தாங்க முடியாது!
தியானம்: 2026 பிப்ரவரி 14 சனி | வேத வாசிப்பு: எண்ணாகமம் 11:1-15

இந்த ஜனங்களெல்லாரையும் நான் ஒருவனாய்த் தாங்கக்கூடாது; எனக்கு இது மிஞ்சின பாரமாயிருக்கிறது (எண்ணாகமம் 11:14).
வாழ்நாட்கள் கடந்துசெல்லும்போது, பொறுப்புக்களை நாம் செய்கின்ற போதும், சிலவேளைகளில் திடீரென வியாதி போன்ற எதிர்பாராத ஒரு சூழ்நிலையை சந்திப்போமானால், இனி எல்லாமே முடிந்துவிட்டது என்று நமக்கு நினைக்கத் தோன்றும்.
மோசேயைத் தேவன் அழைத்து, இஸ்ரவேலரை கானான் தேசத்துக்குள் அழைத்துச்செல்லும் பொறுப்பைக் கொடுக்கிறார். அவனும் அதை ஏற்றுக்கொண்டு செல்லும்போது, வழியில் எத்தனையோ பிரச்சனைகளுக்கு முகங் கொடுக்க நேரிட்டபோதிலும், தேவனுடைய வழிநடத்துதலின்படி அனைத்தையும் சமாளித்துக்கொண்டு சென்றான். இஸ்ரவேலரின் முறுமுறுப்பையும், அவர்கள் அவன்மீது கோபங்கொண்டு கூறும் வார்த்தைகளையுங்கூட சமாளித்துக் கொண்டான். இப்போது இஸ்ரவேலர் தங்களுக்கு இறைச்சி வேண்டும் என்று அடம்பிடிக்கின்றனர். அழுகின்றனர். இதனால் தேவனுக்கு கோபம் மூண்டது. மோசேக்கு இது பொல்லாப்பாய்க் கண்டது.
இப்போது, மோசே தேவனைப் பார்த்து முறையிடுகிறார். “இந்த ஜனங்களை என் மார்பிலே அணைத்துக்கொண்டு, முலையுண்கிற பாலகனை எப்படியாக ஒரு தகப்பன் சுமந்துகொண்டு போகிறானோ அப்படியாக சுமந்து செல்லும்படிக்குச் சொன்னீரே, அப்படிச் செய்வதற்கு நானா இவர்களை கர்ப்பந்தரித்தேன்” என்று தேவனைப் பார்த்து கேட்கிறான். தேவனையே கேள்வி கேட்குமளவிற்கு ஒரு தாங்கமுடியாத நிலை மோசேக்கு ஏற்பட்டுள்ளது என்பதை முதலாவது நாம் புரிந்துகொள்ள வேண்டும். “இந்த ஜனங்களை நான் ஒருவனாய்த் தாங்கக் கூடாது” என்று தேவனிடத்தில் மோசே முறையிடுகிறார். இப்போது தேவன் இதற்கு ஒரு தீர்வைக் கொடுக்கிறார்.
மோசேக்குப் பொறுப்பைக் கொடுத்தது கர்த்தர், அவர்களை இம்மட்டும் வழிநடத்தியவரும் கர்த்தர். அப்படியிருந்தும் ஒருகட்டத்தில் மோசேயால் தாங்கமுடியாத ஒரு பிரச்சனைக்கு முகங்கொடுக்க வேண்டி வந்ததைக் காண்கிறோம். அதுபோலவேதான் நமது வாழ்விலும் இப்படியாக தாங்கமுடியாத சூழ்நிலைகளைச் சந்திக்கவேண்டிய சந்தர்ப்பங்கள் வரும். அதை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாதபோது, நாம் யாரிடத்தில் ஓடுகிறோம்? நமது சுயபுத்தியில் சாய்ந்து முடிவெடுக்கிறோமா? அல்லது மனிதரிடத்தில் சென்று தீர்வுகாண முயலுகிறோமா? தேவசமுகத்துக்குச் சென்று, தேவனுடைய ஆலோசனையைத் தேடுகிறோமா? நாம் எங்கே நிற்கிறோம்? நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியைக் காட்டுவேன், உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன் (சங்கீதம் 32:8 ).
ஜெபம்: அன்பின் பிதாவே, இனியும் எங்களால் தாங்கமுடியாது என்ற சூழ்நிலையில் எங்களது தஞ்சமும் அடைக்கலமும் புகலிடமுமாகிய உம்மையே அண்டிக்கொண்டு, நாங்கள் ஜெயம் பெற கிருபை செய்யும். ஆமென்.