ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 2 திங்கள்

நேபாள்-க்காக ஜெபிப்போம்: தொடர்ந்து அங்கு காணப்படும் மதமாற்றத்திற்கு எதிரான சட்டங்களினாலே ஊழியர்கள்மேல் சாட்டப்படும் பொய்யான வழக்குகள் நிறுத்தப்படவும், சமூக பாகுபாட்டை எதிர்கொள்ளும் கிறிஸ்தவர்களது பாதுகாப்பிற்காகவும் ஜெபம் செய்வோம்.

தேவன் தரும் பலம்

தியானம்: 2026  பிப்ரவரி 2 திங்கள் | வேத வாசிப்பு: 1சாமுவேல் 17:31-40

YouTube video

என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து …. (1தீமோத்.1:12).

தாவீதைப் பொறுத்தமட்டில், தேவன் தரும் பலம் என்பது. அவனது சரீர வளர்ச்சியிலோ, அவனது சரீர பலத்திலோ, சவுல் அவனுக்கு அணியும் படியாகக் கொடுத்த போர் வஸ்திரத்திலேயோ தங்கியிருக்கவில்லை. தேவன் தரும் பலம் என்பது அவனது உள்ளத்திலும் கடந்தகாலங்களில் அவன் தேவனோடு கொண்டிருந்த உறவின் அடிப்படையிலுமே தங்கியிருந்தது. தேவனோடு அவன் கொண்டிருந்த அந்த ஆழமான உறவுதான். அவர் எப்படியாகிலும் தன்னைத் தப்புவிப்பார் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையை அவனது உள்ளத்தில் தோற்றுவித்தது.

ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது சிங்கம் வந்தது. கரடிவந்தது அவற்றையெல்லாம் தேவனின் பலத்தோடு நான் கொன்றுவிட்டேன். இப்போது கோலியாத் என்ற பெயரில் ஆறுமுழ உயரத்தில் இந்த ராட்சதன் வந்திருக்கிறான். அவனும், எனக்கு இந்த மிருகங்களைப்போலத்தான். ஏனெனில் அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்தித்தானே என்று தாவீது கூறுவதைக் காண்கிறோம் (1சாமு.17:34-36). தேவனோடு கொண்டுள்ள அந்த உறவின் அடிப்படையிலான அனுபவம் தாவீதின் பேச்சில் தொனிக்கிறது.

தேவனில் நம்பிக்கைகொண்டு வாழும் அருமையானவர்களே, கோலியாத் போன்று ராட்சத உருவத்தில் தோன்றும் பிரச்சினைகளைக் கண்டு கலங்கி நிற்கிறீர்களா? அப்படியானால் தேவனுடைய பலத்தை நீங்கள் தவறாகப் புரிந்திருக்கிறீர்கள் என்றுதான் சொல்லவேண்டும். உங்கள் அறிவிலோ சரீர பலத்திலோ, அல்லது நண்பர்கள் மற்றவர்கள் காட்டும் அக்கறையிலோ, பணம் புகழிலோ தெய்வீக பலத்தை நீங்கள் தேடினால் அதை ஒருபோதும் நீங்கள் கண்டடையமாட்டீர்கள். மறுபக்கத்தில், இவ்வளவு காலமும் வந்த எல்லாவித பிரச்சினைகளையும் தேவனின் பலத்தோடு மேற்கொண்டுவிட்டேன். இப்போதுள்ள பிரச்சினையும் அதுபோன்ற ஒன்றுதான். இதனையும் தேவபெலத்தோடு மேற்கொள்வேன் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையோடு இருக்கிறீர்களா? தைரியமாய் முன்னேறுங்கள். கர்த்தர் உங்களுக்கு நிச்சயம் வெற்றி தருவார். தேவபலத்தை உங்களால் நம்பமுடியவில்லை என்றால் அவரோடுள்ள உங்கள் உறவில் ஏதோ ஒரு சறுக்குதல் இருக்கிறது என்பதே உண்மை. அதைச் சிந்தித்து இன்றே சீர்செய்யுங்கள். பவுல் எத்தனையோ உபத்திரவங்களைக் கடந்து வந்தவர். ஆனால் பல இடங்களிலும் “என்னைப் பலப்படுத்தும் கிறிஸ்து” என்று கூறுகிறார். கிறிஸ்துவின் பலம் அவரைப் பலப்படுத்தியது உண்மையானால், அந்தப் பலம் நம்மையும் பலப்படுத்தும்.

ஜெபம்: என்னைப் பலப்படுத்தும் ஆண்டவரே, பெலனிழந்த வேளைகளிளெல்லாம் உமது பலத்தைத் தந்து என்னை நடத்தியருளும். ஆமென்.