ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 7 சனி

கத்தார் நாட்டிற்காக ஜெபிப்போம்: அந்த நாட்டில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காகவும், விசுவாசிகள் தாங்கள் இருக்கும் இடங்களிலே சுவிசேஷத்தை அறிவிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று கர்த்தரின் நாமத்தை அறிவிக்கிறவர்களாக காணப்பட ஜெபிப்போம்.

பெருமை அழிவுக்கே!

தியானம்: 2026  பிப்ரவரி 7 சனி | வேத வாசிப்பு: எண்ணாகமம் 16:1-35

YouTube video

பூமி தன் வாயைத் திறந்து, …. கோராகுக்குரிய எல்லா மனிதரையும், … சகல பொருள்களையும் விழுங்கிப்போட்டது (எண்ணா. 16:32).

கர்த்தரை மன்னிக்கிறவராகவும், கிருபை பொருந்தியவராகவும், ஆசீர்வதிக்கிறவராகவும் இப்படியாக பலகோணங்களிலும் அவரை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் இங்கே ஒரு காரியத்துக்காக அவர் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கிறார் என்று சொன்னால், அது பெருமைதான். பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார் என்றும், தாழ்மை யுள்ளவர்களுக்கோ கிருபையை அளிக்கிறார் என்றும் நாம் நன்கு அறிவோம். இப்படியிருக்க ஏன் நமக்குள் தேவையில்லாத பெருமைகளை வளர்த்துக்கொள்ளுகிறோம்.

இங்கே கோராகு என்பவன் தன்னோடுகூட இன்னமும் இருநூற்றைம்பது பேரையும் சேர்த்துக்கொண்டு, மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாகப் பேச ஆரம்பிக்கிறதைக் காண்கிறோம். அப்பொழுது மோசே அவர்களோடு எதிர்த்து நின்று சண்டை போட எண்ணவில்லை. மாறாக, தேவன் யாரைத் தெரிந்துகொள்ள விரும்புகிறாரோ அந்த நபரை அவரே தெரிவு செய்வார்; ஆகையால் நீங்கள் நாளை தேவனுடைய சந்நிதியில் தூபங்காட்டுங்கள் என்கிறான். அவர்களுமோ தொடர்ந்து மோசேயை எதிர்த்தார்கள்.

இதன் பலனாக, மோசே சொன்னபடியே நிலம் பிளந்தது; கோராகோடு மோசேக்கு விரோதமாக நின்றவர்களையும், அவர்கள் பெண்ஜாதி பிள்ளைகளையும் பூமி தன் வாயைத் திறந்து விழுங்கிப்போட்டது. தூபங்காட்டினவர்கள் அப்படியே அக்கினிக்கு இரையானார்கள். இதனால் இஸ்ரவேலருக்குள்ளே பயம் உண்டானது. கோராகு தன் பெருமையால் தனக்குத்தானே அழிவைத் தேடிக்கொண்டான்.

பிரியமானவர்களே, தேவன் தமது பணிக்காக சிலரை நியமித்துள்ளார். அவர்கள் எப்படியாக நடக்கிறார்கள் என்று பார்த்து, தேவனே அவர்களை நியாயம் விசாரிப்பார். நாம் அவர்களுக்கு விரோதமாகப் பேசவோ, அவர்களை நியாயந்தீர்க்கவோ எந்த அதிகாரமும் நமக்குக் கொடுக்கப்படவில்லை. தேவனின் வேலையை நாம் கையில் எடுக்காமல், நமது கையில் கொடுக்கப்பட்ட வேலையை மாத்திரம் செய்வோம். மோசேயைத் தெரிந்துகொண்டு இவ்வளவு பெரிய பொறுப்பைக் கொடுத்த தேவன், அவரை அப்படியே விட்டுவிடாமல் பிரச்சனை நேரத்தில் மோசேக்காக வழக்காட வந்து நின்றார். கர்த்தர் தமது பணிக்கென அழைத்தவர்களின் காரியத்தில் வழக்காட வந்து நிற்பார். நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்கால்படியிடுவோம் வாருங்கள் (சங்.95:6).

ஜெபம்: அன்பின் பிதாவே, பெருமையினால் தனக்குத்தானே அழிவைத் தேடிக்கொண்ட கோராகின் சம்பவத்தினாலே நாங்கள் எச்சரிப்படைந்து மனந்திரும்ப உதவும். ஆமென்.