ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 10 செவ்வாய்

சவூதி அரேபியாவுக்காக ஜெபிப்போம்: அந்த நாட்டின் அதிபர்கள், உயர்பதவி வகிக்கும் அதிகாரிகள், சிறந்த தொழிலதிபர்கள் யாவரும் இரட்சிக்கப்படவும், ஆங்காங்கு ஒருசில குடும்பங்களாக, குழுக்களாக கூடி ஆராதிக்கும் ஆராதனைகளில் ஆவியானவர் வல்லமையாய் கிரியை செய்ய ஜெபிப்போம்.

வார்த்தையை விட்டு விலகாதே

தியானம்: 2026  பிப்ரவரி 10 செவ்வாய் | வேத வாசிப்பு: எண்ணாகமம் 20:1-13

YouTube video

இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம் பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால் …. (எண்ணா. 20:12).

இன்று கிறிஸ்தவ ஐக்கியங்களிலும் அல்லது நமது சபைகளிலும், பெரிய பொறுப்பிலுள்ள ஒருவர் அல்லது தலைமைப் பீடத்திலுள்ள ஒருவர் ஏதாவது தவறு செய்துவிட்டால், அதை மூடிமறைப்பதற்கே பலர் முன்நிற்பர். அல்லது அவர் எவ்வளவு பெரிய பொறுப்பில் உள்ளவர், அவரிடம் எப்படிக் கேட்பது என்று அதை அப்படியே தட்டிக்கழித்து விடுவர். ஏன் குடும்பங்களில்கூட தாய் தந்தையர் தவறு செய்துவிட்டால், அதைக் கண்டுகொள்ளாமலும், பிள்ளைகள் தவறு செய்துவிட்டால் அதற்குத் தண்டனை வழங்கப்படுவதையும் கண்கூடாகக் கண்டிருக்கிறோம். இங்கே இஸ்ரவேலரை எகிப்தில் இருந்து வழிநடத்திவர கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் தெரிந்தெடுத்தார். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு வழிநடத்துதல் எல்லாமே தேவன் அவ்வப்போது கொடுத்து வழிகாட்டியாக இருந்தார். இஸ்ரவேலர் முறுமுறுத்து, தேவனுக்கும், மோசே ஆரோனுக்கும் எதிராக செயற்பட்டபோதும் தேவனே, மோசே ஆரோனைப் பெலப்படுத்தி தேவையான வழிநடத்துதலைக் கொடுத்தார்.

இந்த இடத்திலும் தண்ணீருக்காகப் போராடி இஸ்ரவேலர் தேவனுக்கும், மோசே, ஆரோனுக்கும் எதிராக எழும்பியபோது, கோலை எடுத்து, சபையாரைக் கூடிவரச் செய்து, கன்மலையைப் பார்த்துப் பேசும்படி கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் பார்த்துக் கூறினார். ஆனால் மோசே, மக்கள்மீது கொண்ட கோபத்தினால், கோலை எடுத்து, போய் கன்மலையை அடித்தான். தண்ணீர் வந்தது; ஆனால் அவனோ தேவவார்த்தையை மீறிவிட்டான். இந்த இடத்தில் தேவன் அது மோசேதானே, ஆரோன் தானே அவர்களை எப்படித் தண்டிப்பது, அவர்கள்தானே இஸ்ரவேலருக்கு வழிகாட்டிகள். அவர்களில்லாமல் எப்படித் தொடர்ந்து பயணிப்பது இப்படியெல்லாம் நினைக்கவில்லை. கட்டளையை மீறினார்கள், அதற்கான தண்டனையைப் பெற்றுக்கொண்டார்கள். ஆரம்பத்திலிருந்து இஸ்ரவேலரை வழிநடத்தி வந்த ஆரோனும், மோசேயும் இப்போது கானானுக்குள் பிரவேசிப்பதில் இருந்து தடைசெய்யப்பட்டார்கள்.

இதில் நாம் காண்பது என்ன? தேவன் தனது கட்டளைக்கும் நியமங்களுக்கும் எவ்வளவாய் முக்கியத்துவம் கொடுக்கிறார். அதை நாம் எவ்வளவாய்க் கடைபிடிக்கவேண்டும்? தேவ பிரமாணத்தை விட்டு விலகுகிறவன் எப்படியாகத் தேவனுடைய சமுகத்தினின்று தள்ளப்படுகிறான்? தேவனுடைய வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் நாம் எங்கே நிற்கிறோம்? மற்றவர்கள் தவறுகையில் அவர்களை எச்சரிப்பதில் நமது பங்குதான் என்ன? விழுகிறவனை உமது வார்த்தைகளால் நிற்கப்பண்ணி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர் (யோபு 4:4).

ஜெபம்: அன்பின் தேவனே, உமது கற்பனைகளைக் கைக்கொண்டு, தேவனுக்குப் பிரியமாய் நடந்துகொள்ளவேண்டிய கிருபைகளைத் தாரும். ஆமென்.