ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 28 சனி
அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங்.34:8) நம்பிக்கையின் தேவன் எல்லாவித சந்தோஷத்தாலும் சமாதானத்தாலும் நம்மை நிரப்பி இம்மாதத்தில் நம்மை குறையில்லாமல் நடத்தினார். உள்ளத்தின் ஆழத்திலிருந்து கர்த்தருக்கு நன்றி செலுத்தி ஜெபிப்போம்.
என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம் பண்ணும்படியாக நீர் என் இரட்டை களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர் (சங். 30 :11).
இளைப்படையார்!
தியானம்: 2026 பிப்ரவரி 28 சனி | வேத வாசிப்பு: ஏசாயா 40:18-31

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ … ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள் (பிரசங்கி 40:31).
பொதுவாகக் கழுகுகள் வயதுசென்று பெலவீனமடையும்போது, மிகவும் உயரமான மலைகளிலே சென்று உட்கார்ந்து, தனது இறகுகளையெல்லாம் ஒவ்வொன்றாகப் பிடுங்கிப்போட்டு, வெறும் தோலோடு காணப்படுமாம். சிறிது காலம் செல்ல புதிய இறகுகளெல்லாம் மீண்டும் முளைக்க ஆரம்பிக்கும்; அப்போது அந்தக் கழுகு மீண்டும் புது பெலனடைந்த கழுகாய் மாறி, சிறகடித்து உயரப் பறக்குமாம். இதுபோலவே கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களும், புது பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள் என்றும், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள் என்றும் ஏசாயா தீர்க்கதரிசனமாய் உரைத்துள்ளார். பொதுவாக நமது சரீரம் ஓடினால் இளைப்படையும், நடந்தால் சோர்ந்துபோகும். ஆனால் ஆவியோ உற்சாகமுள்ளது. அது கர்த்தருக்குக் காத்திருக்கும்போது, இளைப்படையாது, சோர்வடையாது. ஆவி உற்சாகமாய் இருக்கும்போது, மாம்சமும் உற்சாகமாய் இருக்கும்.
இதற்கு முந்தின வசனங்களில் சொல்லப்பட்டிருப்பதென்ன? “என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்” என்று தேவன் கேட்கிறார். “வார்க்கப்பட்ட சொரூபத்துக்கும், தட்டான் செய்யும் உருவத்துக்கும் ஒப்பிடுவீர்களோ? பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த அநாதி தேவனாகிய நான் சோர்ந்து போவதுமில்லை, இளைப்படைவதுமில்லை, இதை நீ அறியாயோ” என்கிறார். இப்படிப்பட்ட தேவனிடத்தில் நாம் காத்திருக்கும்போது நாமும் அப்படியே இளைப்படையோம். நாம் எப்போதும் பறக்கிறவர்களாயும், ஓடுகிறவர்களாயும், நடக்கிறவர்களாயும் இருப்போம். ஆனால் முதலாவது சங்கீதத்தில் குறிப்பிடப்பட்டதுபோல கர்த்தருக்குப் புறம்பானவர்களோ, துன்மார்க்கரின் ஆலோசனையில் நடப்பவர்களாகவும், பாவிகளின் வழியில் நிற்கிறவர்களாகவும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காருகிறவர்களாயும் இருப்பார்கள். அவர்கள் இளைப்படைந்து நடந்து, நின்று, உட்கார்ந்து விடுவார்கள். நாம் எப்படி? பறந்து ஓடி நடக்கிறவர்களாய் இருக்கப்போகிறோமா? அல்லது நடந்து, நின்று, உட்காரப் போகிறோமா?
நாம் காத்திருக்கும் தேவன் இளைப்படையாதவராய், உறுதியானவராய் இருக்கும் போது நாமும் அவரின் சாயலைத் தரித்தவர்களாய் உறுதியாக நிற்கப் பிரயாசப்படுவோம். கர்த்தரின் பிள்ளைகளுக்கு நித்திய இளைப்பாறுதலைத் தவிர வேறு இளைப்பாறுதல் இல்லை. ஆனால் அவர்கள் சோர்வடையார்கள். இளைப்படையார்கள் என்பதுதான் உண்மை. சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன்கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் (ஏசாயா 40:29).
ஜெபம்: “எங்களைப் பெலப்படுத்துகிற கர்த்தாவே, சோர்ந்துபோன வேளையிலும், பெலனற்ற நேரத்திலும் உன்னத பெலத்தால் எங்களை நிரப்பி திடப்படுத்துகிறீர். உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.”