ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 22 ஞாயிறு
இயேசுவோ வனாந்தரத்தில் தனித்துப்போய், ஜெபம்பண்ணிக் கொண்டிருந்தார் (லூக்.5:16) ஒவ்வொரு திருச்சபைகளிலும் லெந்துநாட்களில் அனுதினமும் ஆலயத்தில் விசுவாசிகள் கூடி, தேசங்களுக்காக ஜெபிக்கிறவர்களாக காணப்படும்படி, கிருபையின் ஆவியையும், விண்ணப்பத்தின் ஆவியையும் கர்த்தர் ஊற்றியருள (சகரி.12:10) மன்றாடுவோம்.
அவருக்குப் பயந்திரு!
தியானம்: 2026 பிப்ரவரி 22 ஞாயிறு | வேத வாசிப்பு: உபாகமம் 10: 12-22

இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிளெல்லாம் நடந்து …. (உபாகமம் 10:12).
பிள்ளைகள் தவறு செய்துவிட்டால், பெற்றோருக்குப் பயப்படுவார்கள். காரணம் அவர்கள் தண்டிப்பார்கள் அல்லது சத்தம் போடுவார்கள் என்பதாலேயே. அதேபோல மாணவர்களும், ஆசிரியருக்குப் பயப்படுவார்கள். காரணம் அவர் தண்டனை கொடுப்பார் என்பதால். அதேபோல தேவனும் தண்டிப்பார், அவரால் ஏதாகிலும் ஆபத்து நேரிடும் என்றெல்லாம் எண்ணுவதும், இதனால் அவருக்குப் பயப்படுவதும் குழந்தைத்தனமான காரியங்களே. கர்த்தருக்குப் பயந்திருப்பதென்பது, அவருக்குக் கொடுக்கும் கனம், மரியாதை. அது அவருடைய அன்புக்குப் பயப்படுதல், அவரது இரக்கத்திற்குப் பயப்படுதல், அவருடைய மன்னிப்புக்குப் பயப்படுதல் போன்றவைகளே.
தேவன் நம்மீது அளவுக்கதிகமான அன்பை வைத்திருக்கிறார். அவருடைய அன்பை எண்ணிப் பார்க்கும்போது, எப்படி அவருக்குத் துரோகம் பண்ணி பாவம் செய்யமுடியும். அவர் எவ்வளவாய் நம்மை நேசித்தார். தனது ஜீவனைக் கொடுக்குமளவுக்கு அவரது அன்பு விசாலமானதாக இருந்தது. அவர் நம்மீது காட்டிய இரக்கம், கிருபை அதற்கு ஈடு இணையேயில்லை எனலாம். அவரது மன்னிப்பு முடிவற்றது. அவர் மீண்டும் மீண்டும் நம்மை மன்னித்து தம்முடையவர்களாய் ஏற்றுக்கொள்ள ஆயத்தமுள்ளவராய் இருக்கிறார். இப்படிப்பட்ட ஆண்டவருக்குப் பயந்திருப்பது என்பது அவரது குணாதிசயத்திற்கு மதிப்புக் கொடுத்து கவனமாய் நடந்துகொள்ளுதலையே குறிக்கும். மற்றப்படி அவருக்குப் பயந்து நடுங்கி வாழுவதல்ல.
வாலிபனாகிய யோசேப்புக்குப் பாவச் சோதனை வந்தபோது, அவ்விடத்தைவிட்டே ஓடியே விட்டான். காரணம் என்ன? அவன் தேவனுக்குப் பயந்தவனாய் இருந்தபடியால், அவருக்குத் துரோகம் செய்யத் துணியாதவனாய், அவ்விடத்தை விட்டே போனான். தாவீதுக்கு சவுலைக் கொல்லும்படிக்கான சந்தர்ப்பம் கிடைத்தபோதும், அவன் தேவனுக்குப் பயந்தவனாக, கர்த்தர் அபிஷேகம் பண்ணினவர்மேல் என் கையைப் போடமாட்டேன் என்று சொல்லி, தன்னைக் கொலை செய்யத் தேடித் திரிந்த சவுலைக் கொல்லாதே விட்டான். இப்படியாகவே பல தேவனுடைய மனுஷரின் வாழ்வில் தேவனுக்குப் பயப்படும் பயம் என்பது வெளிப்பட்டுள்ளது. நாமும் தேவனுக்குப் பயந்து தீமையை விட்டு விலகுவோம். அவருக்கு உண்மையுள்ளவர்களாய் வாழுவோம்.
அவருடைய கட்டளைகளை பயத்தோடே கடைபிடிப்போம். தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம் (நீதிமொழிகள் 8:13).
ஜெபம்: கர்த்தாவே, தீமையை விட்டு விலகி, எங்களது உள்வாழ்விலும், வெளி வாழ்விலும் பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ள உமதாவியால் எங்களை நிரப்பும். ஆமென்.