ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 27 வெள்ளி
பயப்படாதிருங்கள்; திடன்கொள்ளுங்கள் (ஏசா.35:4) பலவித சோர்வுகளினாலும், மனக் கவலைகளினாலும், துன்பதுயரங்களோடு பலநாட்களாக ஜெபித்தும் ஏற்ற தீர்வு கிடைக்காமல் போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரது வாழ்விலும் வழியும் சத்தியமுமாகிய தேவன் இடைபட்டு அவர்களை திடப்படுத்தவும், தம்முடைய சித்தத்தை நிறைவேற்றி வழிநடத்த ஜெபிப்போம்.
தாங்கும் தேவன்!
தியானம்: 2026 பிப்ரவரி 27 வெள்ளி | வேத வாசிப்பு: ஏசாயா 46:1-13

உங்கள் முதிர்வயது வரைக்கும் நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன் நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசாயா 46:4).
நான்கு வயதிலே தாயைப் பறிகொடுத்து, சிறிய தாயோடு, தனது ஆறு சகோதரங்களுக்கும் ஒரு நல்ல அக்காவாக இருந்து, வரும் பிரச்சனைகளையெல்லாம் சமாளித்துவந்தாள் ஒரு பெண். பின்னர் அவள் திருமணம் முடித்து, ஐந்து பிள்ளைகளுக்குத் தாயானாள். தனது 55 வயதில் கணவரையும் இழந்து, விதவையானாள். அதன் பின்னர் தனியாக தனது வாழ்க்கைப் பயணத்தில், பிள்ளைகளையெல்லாம் உருவாக்கி, அவர்களுக்கு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்து, பேரக்குழந்தைகள், பூட்டக்குழந்தைகள் என்றெல்லாம் கண்டுகளித்தார். பின்னர் வயது சென்று, சரீரத்தின் பெலன் குன்றிப்போய் தனது 96 வது பிறந்த நாளை படுக்கையில் இருந்த வண்ணம் நினைவுகூரும்போது, அவர்கள் தனது வாயினால் அறிக்கையிட்ட சாட்சி என்னவெனில், இவ்வளவு காலங்களையும் நான் எப்படிக் கடந்துவந்தேன் என்று நினைத்துப் பார்க்கும்போது, எனக்கே அது அதிசயமாய் இருக்கிறது. என்னோடுகூட கர்த்தரின் வழிநடத்துதல் இருந்தது; அதுவே இதற்குக் காரணமாய் இருக்கிறது என்றார். இத்தாயாருடைய பிறந்தநாளுக்கு மேற்குறிப்பிட்ட வசனத்தையே, ஒரு சகோதரி வாழ்த்தாகச் சொல்லி அனுப்பியிருந்தார்கள்.
இங்கே இஸ்ரவேல் சந்ததியாரைப் பார்த்துக் கர்த்தர் சொல்லுகிறார்: தாயின் வயிற்றில் தோன்றினது முதல் உங்களை ஏந்தி, தாயின் வயிற்றில் உற்பத்தியானது முதல் உங்களைத் தாங்கினேன். உங்கள் முதிர்வயது வரைக்கும் நான் அப்படிச் செய்துவந்தேன். இனிமேலும் அப்படிச் செய்வேன், தாங்குவேன், சுமப்பேன், தப்புவிப்பேன். எப்படிப்பட்டதான ஒரு வாக்குத்தத்தம். கர்த்தரே எம்மைச் சுமக்கிறவராய், தப்புவிக்கிறவராய், தாங்குகிறவராய் இருக்கிறார். அவர் உயிருள்ள தேவனாய் இருக்கிறார்.
“யாருக்கு என்னைச் சமானமாக்குவீர்கள்” என்று கர்த்தர் கேட்கிறார். தங்கள் கையில் இருக்கும் பொன்னைக் கொட்டி, ஒரு தெய்வத்தை உருவாக்கி, அதைப் பணிந்து, அதை தோளின்மேல் சுமந்து, அதன் ஸ்தானத்தில் வைக்கிறார்கள். அது பேசாமல் அவ் இடத்திலேயே நிற்கும், அசையாது, யாராவது கூப்பிட்டால் மறு உத்தரவு கொடுக்காது, அவர்கள் இக்கட்டை நீக்காது, இரட்சிக்கவும் மாட்டாது. அவர்களை அது சுமக்காது. அவர்கள்தான் அதைச் சுமந்து செல்லவேண்டும். நாம் எப்படிப்பட்ட ஒரு தெய்வத்தை ஆராதனை செய்கிறோம். நம்மைச் சுமப்பவரையா? அல்லது நாம் சுமப்பதையா? நம் தேவன் மரணத்தை வென்று உயிரோடே எழும்பியவர். இன்றும் நமக்காக அனைத்தையும் செய்ய வல்லமையுள்ளவர். மரித்தேன், ஆனாலும் இதோ சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் (வெளி.1:18).
ஜெபம்: இந்தநாள் வரை எங்களை சுமந்து வருபவரே, நாங்கள் தோன்றுமுன்னே எங்களுக்கு பேரிட்டு, எங்களை தாங்கி, ஏந்தி தப்புவித்துவருகிறீர். உமக்கே எல்லாத் துதியையும் ஏறெடுக்கிறோம். ஆமென்.