ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 19 வியாழன்

துர்க்மெனிஸ்தான்-க்காக ஜெபிப்போம்: சபைகளுக்கு காணப்படும் உபத்திரவங்கள் நீங்கவும், தொடர்ச்சியான காவல் கண்காணிப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தை எதிர்கொள்ளும் விசுவாசிகளுக்காக பாரத்துடன் ஜெபிப்போம்.

விக்கிரகம் எது?

தியானம்: 2026  பிப்ரவரி 19 வியாழன் | வேத வாசிப்பு: உபாகமம் 4:15-40

YouTube video

… உங்கள் ஆத்துமாக்களைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள் (உபாகமம் 4:19).

சிருஷ்டி கர்த்தராகிய தேவன், ஆகாயத்துப் பறவைகள், மிருகங்கள், ஊரும் பிராணிகள், கடல் உயிரினங்கள் அனைத்தையும் சிருஷ்டித்தார். அத்துடன் பகலை ஆள சூரியனையும், இரவை ஆள சந்திரனையும், அத்தோடு நட்சத்திரங்களையும் படைத்தார். இவைகள் அனைத்துமே அவருடைய சிருஷ்டிப்புக்கள். ஆகையால், தமது சிருஷ்டிப்புக்களை வணங்காமல், சிருஷ்டி கர்த்தராகிய தேவன் தம்மை ஆராதிக்கும்படிக்கே கர்த்தர் சொல்லுகிறார். ஆனால் மனிதனோ, கர்த்தருடைய சிருஷ்டிப்புக்களை தனது கைகளாலே உருவங்களாகச் செய்து அவற்றை ஆராதனை செய்து தேவனுக்கு விரோதமாக பலதடவைகளிலும் நடந்துகொண்டான்.

மோசே தேவனோடு நாற்பது நாட்களாக இரவும் பகலும் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோது, மோசேயைக் காணாததால் மக்கள், தங்களுக்கான ஒரு தெய்வத்தை உண்டாக்குவோம் என்று சொல்லி, பொன் கன்றுக்குட்டியை உண்டாக்கி அதை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் தொடங்கினார்கள். இதைக் கண்ட தேவன், மோசேயிடம், “நீ வழிநடத்திவந்த ஜனங்கள் தங்களைத் தாங்களே கெடுத்துக்கொண்டார்கள்” என்றார். மோசே இறங்கி வந்தபோது, ஜனங்களின் செயல்களைக் கண்டு கோபத்தில் கற்பனைகள் எழுதப்பட்டிருந்த, தன் கையிலிருந்த பலகைகளை நொருக்கிப் போட்டான். கர்த்தரின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாதபடியினாலே, மோசே ஜனங்கள் மீது கோபப்பட்டான். இன்றும் நாம் இவ்விதமான நம்பிக்கைகளில் சிக்கிக்கொண்டிருக்கிறோமா? சூரிய, சந்திர கிரகங்களைக் கொண்டு கணக்கிட்டு வானசாஸ்திரம் என்ற பெயரில் நல்லநாள், கெட்டநாள் என்றெல்லாம் சொல்லுவார்கள். நல்லகாலம் கெட்டகாலம் என்றெல்லாம் எண்ணி அதற்குப் பயந்தவர்களாய் வாழுகிறோமா? இவற்றுக்கு நாமும் பயப்படுகிறோமா? இன்று காலநிலை கணிப்பீட்டையே தவறாக கணித்து செய்து, மழைவரும் என்பார்கள், மாறாக நல்ல வெயில் அடிக்கும். மழை இல்லை என்பார்கள், குடையை விட்டுச் சென்று மழையில் நனைந்துவரும் நேரங்களும் உண்டு. இப்படியிருக்க, தேவன் தாமே படைத்த மனிதனுக்கான காலங்களையும், நேரங்களையும் கணித்திட மனிதனால் எப்படி முடியும்? சிந்திப்போமா?

நாம் இன்று உருவச் சிலைகளைச் செய்யாவிட்டாலும், நாமே நமக்கென்று சில காரியங்களை விக்கிரகமாக்கி வைத்துக்கொண்டு, தேவன்மீது வைத்திருக்கவேண்டிய நம்பிக்கையை அந்த விக்கிரகத்தில் வைத்து தேவனைத் துக்கப் படுத்துவதை நிறுத்துவோம். நம்மை உருவாக்கின தேவன், “உன்னை என் உள்ளங் கையில் வரைந்திருக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறாரே, அதை நம்புவோமா?

ஜெபம்: அன்பின் பிதாவே, உமக்கு துக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு விக்கிரகமான காரியங்களும் எங்களில் காணப்படாதபடி எங்களைக் கழுவிச் சுத்திகரியும். ஆமென்.