ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 20 வெள்ளி
அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும் … இயேசு சொஸ்தமாக்கினார் (மத்.4:24) மருத்துவர்களால் கைவிடப்பட்டு கொடிய வியாதியால் அரசு மருத்துவமனைகளில் கஷ்டப்படும் நபர்களுக்காகவும், அதிக மருத்துவ செலவுகளினிமித்தம் மனஅழுத்தங்களோடு காணப்படும் குடும்பங்களுக்கு கர்த்தர் அற்புத சுகத்தைக் கொடுத்து நடத்த ஜெபிப்போம்.
பரிசுத்த வாழ்வின் அவசியம்
தியானம்: 2026 பிப்ரவரி 20 வெள்ளி | வேத வாசிப்பு: உபாகமம் 7:1-10

நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம் … உன் தேவனாகிய கர்த்தர் உன்னை …. தெரிந்துகொண்டார் (உபாகமம் 7:6).
சாயம் போகக்கூடிய துணிகளைக் கழுவும்போது, தனியாகக் கழுவுவோம். காரணம், அவற்றின் சாயம் மற்றைய துணிகளைப் பழுதாக்கிவிடும். பால் கெட்டுப்போய் புளித்துவிட்டால் அதைப் புதிய பாலோடு கலக்கமாட்டோம். அதன் புளிப்பு புதிய பாலையும் புளிக்க வைத்துவிடும். புதிய துணியை பழசோடு வைத்து தைத்தால் புதியது பழையதைக் கிழித்துவிடும். இதுபோன்ற ஒரு கருதுகோளையே தேவன் இங்கே இஸ்ரவேலருக்கும் முன்வைக்கிறார்.
“நீ சுதந்தரிக்கப் போகும் தேசத்தில் உள்ள ஜாதியாகிய ஏழு பெருத்த ஜாதிகளையும் தேவன் உனக்கு முன்பாகத் துரத்தி அவர்களை உன் கைகளில் ஒப்புக்கொடுக்கும்போது, நீ அவர்களை முற்றாகச் சங்காரம் பண்ணி அழிக்கக்கடவாய். அவர்களோடே உடன்படிக்கை பண்ணவும் இரங்கவும் வேண்டாம். அவர்களோடே சம்பந்தம் பண்ண வேண்டாம். உன் குமாரத்திகளை அவர்களுடைய குமாரருக்குக் கொடாமலும், அவர்களுடைய குமாரத்திகளை உன் குமாரருக்குக் கொள்ளாமலும் இருப்பாயாக. இதற்குக் காரணம் என்னவெனில், என்னைப் பின்பற்றாதபடிக்கு அவர்கள் உன் குமாரரை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படிக்குச் சோரம் போகப்பண்ணுவார்கள். இதனால் கர்த்தருடைய கோபம் உன்மேல் பற்றியெரியும். “இதனால் நீ அவர்களுடைய பலிபீடங்களை அழித்து, சிலைகளைத் தகர்த்து, தோப்புக்களை வெட்டி, விக்கிரகங்களை அக்கினியிலே அழித்துப்போட வேண்டும். இவைகள் எல்லாமே தேவனாகிய கர்த்தரைவிட்டு உன்னை வழிவிலகிப்போகச் செய்யும் என்பதை மறவாதே. இவற்றினால் தேவனின் ஆசீர்வாதத்தை இழந்துபோகாதே” என்றே தேவன் எச்சரிக்கிறார்.
இன்றும் நமது பரிசுத்த வாழ்வுக்கு எதுவெல்லாம் இடையூறாக இருக்கிறதோ அதையெல்லாம் நம்மைவிட்டு அகற்றிப்போடுவோமாக. அது ஒரு பாவமாக இருக்கலாம். முறையற்ற உறவாக இருக்கலாம், தேவையற்ற பழக்க வழக்கமாகவும் இருக்கலாம். ஒரு குணாம்சமாகவும் இருக்கலாம். தேவனை விட்டு நம்மைப் பிரித்துப்போடும் எதுவாயிருப்பினும் அதற்கு விலகியிருப்போமாக. இல்லாவிடில் அதுவே நம்மைத் தேவனிடமிருந்து பிரித்து அவருடைய உறவிலிருந்து நம்மை விலகவைத்துவிடும். தேவன் எரிச்சலுள்ள தேவனாக, அவருக்குரியதை எப்போதும் பெற்றுக்கொள்ளவே வாஞ்சிப்பார். தனது மகிமையை எவருக்கும் கொடார்.
உன் நடுவிலிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர் எரிச்சலுள்ள தேவனாய் இருக்கிறாரே (உபாகமம் 6:15).
ஜெபம்: எங்களை இரட்சிக்கும் தேவனே, உமது சமுகத்தைவிட்டும், உமதன்பின் உறவிலிருந்தும் எங்களைப் பிரிக்கும் காரியங்களை எங்களிலிருந்து அகற்றிப்போட உதவும். ஆமென்.