ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 15 ஞாயிறு
மகா சபையிலே நான் உம்மைத் துதிப்பேன் … கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள் (சங்.22:25,26) கர்த்தருடைய நாளிலே எங்குமுள்ள மக்கள்கூடி ஆராதிக்கிற இடங்களில் ஆவியானவருடைய பலத்த கிரியை உண்டாகவும், சபைகள் சமாதானம் பெறவும், ஊழியர்களுக்குள் ஒருமனம் உண்டாகி சபை எழுச்சி பெற ஜெபிப்போம்.
தடுமாறுவோர்!
தியானம்: 2026 பிப்ரவரி 15 ஞாயிறு | வேத வாசிப்பு: எண்ணாகமம் 13:30-33,32:8-13

…. நீங்கள் அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப் போகப்பண்ணுகிறதென்ன? (எண்ணாகமம் 32: 7).
நாம் தீர்க்கமாக ஒரு தீர்மானத்தை எடுத்துச் செயற்பட முற்படும்போது, எமக்கு அதிக நெருக்கமானவர்கள் வந்து எதிர்மறையான காரியத்தைச் சொல்வார்களானால், நாம் குழம்பிப்போவதுண்டு. நமது தீர்மானத்தினின்று பின்மாற்றம் அடைவதுண்டு. அதேபோல ஒரு காரியமே இங்கே இஸ்ரவேலருக்கும் நடந்தது. கர்த்தர் இதுவரை இஸ்ரவேலரை கானானை நோக்கி நடத்திச் சென்றார். இப்போது இங்கே சிலர் துர்ச்செய்தியைக் கூறி மக்களை மனந்தடுமாறச் செய்கிறார்கள். அதனால் கானான் பிரவேசமும் தாமதமானது. ஒரு நிமிடத்தில் மக்களின் துர்ச்செய்தியைக் கேட்டு கடவுளின் வழிநடத்துதலை, அவருடைய தயவை, அவருடைய வல்லமையை, இதுவரை நடத்திவந்த விதங்களை, அவர் செய்த அற்புதங்களை எல்லாவற்றையும் இவர்கள் மறந்து போனார்கள், தேவகோபத்துக்கு ஆளானார்கள்.
கானானைக் குறித்து நம்பிக்கையின் செய்தியைச் சொன்ன யோசுவாவும் காலேபும் தவிர, எகிப்திலிருந்து புறப்பட்ட அனைவரிலும் ஒருவரேனும் கானானுக்குள் பிரவேசிப்பதில்லை என்று கர்த்தர் சொல்லி, அவர்கள் அனைவரும் வனாந்தரத்தில் அழிந்துபோகச் செய்தார். யோசுவாவும் காலேபும், கானானின் நிலபரத்தைப் பார்ப்பதைக் காட்டிலும், தங்களோடு இருந்து வழிநடத்தும் தேவனின் வல்லமையையே நோக்கிப் பார்த்தார்கள். கானானியரை எளிதாக மேற்கொண்டுவிடலாம் என்ற நம்பிக்கையை இவர்கள் கொடுத்தார்கள். அவர்களை மட்டுமே தேவன் கானானுக்குள் பிரவேசிக்க அனுமதித்தார். எகிப்திலிருந்து புறப்பட்டவர்களின் அடுத்த சந்ததியே கானானைக் கண்டடைந்தார்கள்.
பிரியமானவர்களே, நமது வாழ்விலும் சூழ்நிலைகள் மாறிப்போகலாம், எதிர்பாராத காரியங்களை எதிர்நோக்கவேண்டி வரலாம், ஆனாலும் நமது நம்பிக்கையை யார் மேலே நாம் வைத்திருக்கிறோம். சூழ்நிலைகளிலா, நமது நாளாந்த வாழ்க்கை முறைகளிலா அல்லது பெலவீனராகிய நம்மிலா? எப்பொழுதும் நாம் நம்பிக்கையோடு எதிர்நோக்கி இருக்கவேண்டியவர் நமது ஆண்டவர் மாத்திரமே. அவரிலே நாம் கொண்டிருக்கும் விசுவாசமே நம்மை எல்லா சூழ்நிலையிலும் தக்கவைக்கும்.
“விசுவாசிக்கிறவன் பதறான்” என்று வேதாகமம் சொல்லுகிறது. நீ உண்மையிலேயே ஒரு விசுவாசியா? அப்படியானால் எந்த நேரத்திலும் உறுதியாக இருக்கக் கற்றுக்கொள். விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சி செய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே. யாக்கோபு 2:22
ஜெபம்: தகப்பனே, நாங்கள் கேட்கும் துர்ச்செய்திகளினாலே கலங்கிடாதபடி, எங்கள்மேல் கரிசனையோடு இருந்து வழிநடத்தும் தேவவல்லமையை மட்டும் விசுவாசிக்கிறவர்களாக காணப்பட கிருபை தாரும். ஆமென்.