வாக்குத்தத்தம்: 2026 ஜனவரி 3 சனி

நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்து விடவில்லை. (ஏசா. 41:9)
வேதவாசிப்பு: காலை: ஆதியாகமம் 6-8 | மாலை: மத்தேயு 3

ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 3 சனி

சத்தியவசன தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இலக்கிய ஊழியங்கள், வாட்ஸ் அப், YouTube ஊழியங்கள் அனைத்தும் தடைகளின்றி நடைபெறவும், இவ்வூழியத்தின் தேவைகள் சந்திக்கப்படவும், இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்தியவசனத்தை திரளானோர் கேட்டு விசுவாசிகளாவதற்கும் ஜெபிப்போம்.

முக்காடு நீங்கிப்போகட்டும்!

தியானம்: 2026 ஜனவரி 3 சனி | வேத வாசிப்பு: 2கொரிந்தியர் 3:6-18

YouTube video

அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போம் (2 கொரிந்தியர்; 3:16).

சீனாய் மலையிலிருந்து இறங்கிய மோசே, தன் முகத்திலிருந்த பிரகாசத்தினால் மக்கள் பயந்துவிடாதபடிக்கு முகத்திற்கு ஒரு முக்காடு போட்டார். தேவசந்நிதிக்குப் போகும்போது அந்த முக்காட்டை எடுத்துவிடுவார். உண்மைதான், மோசேயிடம் மக்கள் சேரக்கூடாதளவுக்கு அந்த முகப்பிரகாசம் பயத்தைக் கொடுத்தது. ஆனால் பவுல் இன்னுமொரு காரியத்தையும் விளக்குகிறார். “ஒழிந்துபோவதன் முடிவை இஸ்ரவேல் புத்திரர் நோக்கிப் பாராதபடிக்கு…” ஆம், அந்த பிரகாசம் ஒழிந்து போவதை மக்கள் காணக் கூடாதபடிக்கும் அந்த முக்காடு போடப்பட்டது. ஆக, இந்த மோசேயின் முக்காடு என்பது, ஒழிந்துபோகும் பழைய காரியங்களையும், மக்களுடைய மனங்கள் முக்காடிடப்பட்டிருப்பதையும், மனந்திரும்ப மனதற்ற கடினமான இருதயங்களையும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. ஆனால் அந்த முக்காடு இந்நாள் வரைக்கும் இஸ்ரவேலரின் இருதயத்தில் இருப்பதாக பவுல் விளக்குகிறார். அப்படியே இன்றைக்கும் நமது இருதயங்களிலும் அந்த முக்காடு இருக்கிறது. அதனால்தான் கிறிஸ்துவைத் தெரிந்தும், அவரது பலியை அறிந்தும், பிதாவின் சித்தம் இன்னது என்று கற்றிருந்தும், நாம் இன்னமும் கிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளாமல், அவரது குணாதிசயங்களைப் பற்றிக்கொள்ளாமல் இருக்கிறோம். இந்த முக்காடு நீங்க வேண்டும். அது கிறிஸ்துவிடம் மனந்திரும்புவதனால் மாத்திரமே நீக்கப்படும்.

நான் கிறிஸ்தவன், எனக்கு எல்லாம் தெரியும், நான் ஜெபிக்கிறவன், நன்மைகள் செய்கிறவன், ஊழியத்திற்கு அதிக செலவுகள் செய்கிறவன்; இவை உண்மையாக இருக்கலாம். ஆனால் அவை, பெருமை, அகங்காரம், மனக் கடினம் போன்ற தேவன் வெறுக்கும் காரியங்களுக்கு நம்மை இட்டுச்செல்ல அனுமதிக்கக்கூடாது. ஏனெனில் இறுதியில் அவைகளே நமது இருதயங்களுக்கு முக்காடாகப் போய்விடும். அந்த முக்காடு நீங்கவேண்டும். அப்போதுதான் நமக்கு விடுதலையுண்டு. ஆண்டவரை, நாம் ஆண்டவராகக் காணுவோம், அனுபவிப்போம். அப்போது தேவனைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக நமது முகங்கள் மாறும், நமது வாழ்வும் மாறும். நமது இருதயத்தை மூடி இருக்கும் முக்காடுகள் என்ன என்பதை முதலில் தேவபாதம் அமர்ந்து சிந்தித்து, அதை ஒத்துக்கொள்வோமாக. ஆம், முக்காடுகள் நீங்கவேண்டுமென்று நாம் முதலில் அதை விரும்பவேண்டும். அந்த மனது நமக்கு இருக்குமானால், இந்தப் புதிய ஆண்டிலே, மனந்திரும்பி, கிறிஸ்துவண்டையில் தைரியத்தோடே சேருவோம். அவர் ஒருவரே நமது முக்காடுகளை அறிந்திருக்கிறவர். அவற்றை நீக்கிப்போட வல்லவர். அது நீங்காவிட்டால் கிறிஸ்துவைப்போலாகும் நம் வாஞ்சை எப்படி நிறைவேறும்?

ஜெபம்: “பரமபிதாவே, இன்று எங்களை மறைத்திருக்கும் முக்காடுகள் நீங்கிப்போக எங்களை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கிறோம். புதிய ஆண்டை புதிய கிருபைகளோடு துவங்க உதவி செய்யும். ஆமென்.”