ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 22 வியாழன்

குவைத் நாட்டிற்காக ஜெபிப்போம்: அந்த நாட்டில் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் கிறிஸ்தவ வெளிநாட்டவர்கள் சாட்சியுள்ளவர்களாய் வாழவும், பிழைப்புக்காக பலநாடுகளிலும் இருந்து அங்கு பணி செய்யும் அனைவரது பாதுகாப்புக்காகவும் வேண்டுதல் செய்வோம்.

நான் சாகவேண்டும்!

தியானம்: 2026 ஜனவரி 22 வியாழன் | வேத வாசிப்பு: லூக்கா 19:1-10

YouTube video

ஆண்டவரே … நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலந்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான் (லூக்கா 19:8).

சுயநலத்தோடு வாழ்ந்துவிட்ட ஒருவர், ஒருநாள் பலருக்குக் கடிதம் எழுதினார். வங்கி பணத்தை பிரித்துப் பிரித்து வைத்தார். நிலபத்திரங்களை எடுத்து, வக்கீலை வரவழைத்து சில ஒழுங்குகளைச் செய்தார். இவருக்கு என்ன நடந்தது என்று எல்லோருக்கும் ஆச்சரியம். இவை நடந்து ஒருசில நாட்களுக்குள் அவர் இறந்துவிட்டார். “மனுஷன் சாவதற்குத்தான் இப்படியெல்லாம் செய்திருக்கிறார்” என்று மற்ற சிலர் பேசிக்கொண்டனர். ஆனால் குடும்ப வக்கீலோ அவரவருக்கு சேரவேண்டியதைக் கொடுத்துவிட்டு, இறுதியாக ஒரு கடிதத்தையும் கொடுத்தார். “நீங்கள் யாவரும் என்னைக் குறித்து எதுவும் பேசுவீர்கள். ஆனால் உண்மை என்னவெனில் என்னைக் கண்டவரை நானும் கண்டேன். அவரைக் கண்டபின் என் வாழ்வில் எதுவும் வீண் என்றும் கண்டேன். நான் விடுதலை பெற்றேன். இந்த இயேசு உங்களுக்காகவும் காத்திருக்கிறார்” என்ற வரிகளை வாசித்து எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.

இயேசுவைக் காண சகேயு விரும்பினான். ஆனால் தான் காணுமுன் இயேசு தன்னைக் கண்டுகொண்டார் என்பதை உணர்ந்த அந்த நிமிடமே சகேயுவில் மாற்றம் ஆரம்பித்து விட்டிருந்தது. “சகேயு, …இன்றைக்கு நான் உன் வீட்டில் தங்கவேண்டும்.” இதைத்தவிர ஒரு பிரசங்கமோ ஆலோசனையோ எதுவுமே ஆண்டவர் கொடுக்கவில்லை. இதுவரை அவன் பணஆசை பிடித்த ஒருவன். பிறரது மனஉணர்வுகளை உணராத ஒருவன். எல்லோருடைய வெறுப்பையும் சம்பாதித்து வைத்திருந்த இவனுடைய வீட்டிற்கு இயேசு தாமே போக விரும்பினார். இங்கேதான் சகேயு விடுதலை பெற்றான். மனம் மாத்திரமல்ல, தன் வாழ்வின் காரியங்களையும் மாற்றிப்போட உடனடியாகவே புறப்பட்டான். இது சாத்தியமான விஷயமா? இதுவரை சேர்த்துச் சேர்த்து கட்டிக்காத்த செல்வத்தை ஒரு நொடியில் இழப்பது என்பது இலகுவான விஷயம் அல்ல. அதிலும் தானாகவே முன்வந்து, தானாகவே இழந்துபோகுமளவிற்கு யாருக்கு மனம் வரும்? சகேயுவுக்கு வந்தது. எப்படி? தனக்காகத் தம்மையே இழந்துபோக வந்த இயேசுவை சகேயு உள்ளத்தில் ஏற்றுக்கொண்டான்; அவர் அவனுள்ளத்தில் வந்தார். அவன் தன் சுயத்திற்கு மரித்தான். இயேசு அவனுக்கு புதுஜீவன் கொடுத்து, புது வாழ்வளித்தார்.

உண்மையாகவே கிறிஸ்து நமக்குள் வாழுகிறார் என்றால் நமது வாழ்விலும் இந்த மாற்றம் வரவேண்டும். அதை நாம் செயற்படுத்தும்போது நம்மையும் அறியாமலேயே ஆண்டவருடைய வழியிலே நாம் முன்செல்லுவோம். நம்மில் எத்தனைபேர் எத்தனை தீர்மானங்களை எடுத்துவிட்டு பின்னர் கைவிட்டிருக்கிறோம்? நமது சுயம் சாகவேண்டும். இயேசுவின் ஜீவன் நமக்குள் வரவேண்டும். அப்போது நமது ஓட்டத்தை யாரும் தடுத்து நிறுத்தமுடியாது.

ஜெபம்: “அன்பின் பிதாவே, சகேயுவைப்போல, உண்மையான மனந்திரும்புதல் அர்ப்பணிப்பு எங்களில் காணப்பட எங்களை ஒப்புவிக்கிறோம். ஆமென்.