வாக்குத்தத்தம்: 2026 ஜனவரி 31 சனி

அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர். அவருடைய நியாயந்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும். (சங். 105:7)
வேதவாசிப்பு: யாத்திராகமம் 22,23 | மாலை: மத்தேயு 22:1-22

ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 31 சனி

இம்மாதத்தின் இறுதிநாள்வரை நம்மை சுகபத்திரமாய் பாதுகாத்து ஒரு குறைவுமில்லாமல் நடத்தின தேவாதி தேவனை ஸ்தோத்திரிப்போம். புதிய மாதத்திற்குள் பிரவேசிக்கும்முன்பதாக நம்மைநாமே ஆராய்ந்து நமது வழிகளை கர்த்தருக்கு ஒப்புவித்து ஜெபிப்போம்.

பலாத்காரம் வேண்டாம்!

தியானம்: 2026 ஜனவரி 31 சனி | வேத வாசிப்பு: யோவான் 18:1-13

YouTube video

வாக்குவாதம் செய்யவுமாட்டார், கூக்கிரலிடவுமாட்டார்; அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை (மத்தேயு 12:19).

குறைவுகள் அதிகமின்றி, அமைதலாய் வாழும்வரை, நமக்குள்ளிருந்து புறப்படும் குணாதிசயங்கள் எவ்வளவுக்கு உண்மையாயிருக்கும்? அந்த அமைதியின் மத்தியில் ஒரு சிறு கல் விழுந்தால் போதும், அப்போதுதான் நமது உண்மை நிலைமை வெளிவரும். அமைதியும் பெருந்தன்மையும் இளகிய மனமும் உள்ள ஒருவர் என்று நாம் பெயரெடுக்கலாம். ஆனால் நாம் அநியாயமாகக் குற்றப்படுத்தப்படும்போது, அல்லது தவறாகப் பேசப்படும்போது என்ன செய்கிறோம்? நம்மை நியாயப்படுத்த எத்தனை பாடுபடுகிறோம்! ஆத்திரப்படுகிறோம்! வாக்குவாதம் செய்கிறோம். நமது சத்தம் எடுபடாவிட்டால், சத்தம் போட்டுப் பேசி, சாட்சிகளையும் ஆதரவுகளையும்கூட தேடுகிறோம்! ஒரு ஆவிக்குரியவனுக்கு இது தகுமா? இங்கேதான் நமது உண்மையான குணாதிசயம் வெளிப்படும். நாம் காட்டும் பிரதிபலிப்புகூட மற்றவர்களை பாதிக்கக்கூடியவை. ஏன் நாம் இதைக் குறித்து சிந்திப்பதில்லை. இது ஆண்டவருக்குரிய குணாதிசயம் அல்ல.

இயேசுவை பிசாசுகளின் தலைவன் என்றனர் மார்க்க தலைவர்கள். மதி மயங்கியவர், புத்திதடுமாறியவர் என்றனர் குடும்பத்தார். ஜனங்களை வஞ்சிக்கிறவர் என்றனர் ஜனங்கள். அத்தோடு ஓய்வுநாளையும் யூத பாரம்பரியங்களை மதிக்காதவர், 46 வருடங்களாகக் கட்டிய ஆலயத்தை இடித்து, மூன்றே நாளில் கட்டி முடிப்பேன் என்று தேவதூஷணம் சொன்னவர் என்றெல்லாம் சொன்னார்கள். இத்தனைக்கும் ஆண்டவர் தாம் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப் பாடுபட்டாரா? ஆத்திரப்பட்டு தமது வார்த்தைகளைக் கொட்டினாரா? பலாத்காரம் செய்தாரா? மாறாக, பலவேளைகளில் அவர் அமைதலாய் பதிலளித்தார். பலவேளைகளில் அந்த இடத்தைவிட்டே கடந்து போனார். கெத்சமனேயிலே தம்மையே ஒப்புக்கொடுத்தார். ஆத்திரமடைந்து காதை வெட்டிய பேதுருவை அடக்கினார். இயேசு தமக்கு எதிராக எழுந்த எந்த சூழ்நிலையிலும் எதிர்ப்புக் காட்டவுமில்லை. பலாத்காரத்தைப் பிரயோகிக்கவுமில்லை.

இப்படியிருக்க நமது காரியம் என்ன? நமக்கு நேரிடுகின்ற அவமானங்களில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம்? சோதனைகளும் நிந்தைகளும் நேரிடும் வேளைகள்தான் நமக்கு நம்மை ஆராய்ந்து பார்ப்பதற்கான உகந்த தருணங்கள். ஆத்திரம் கோபம் பாவம்; ஆகவே, அவை நமக்குள் இருந்து வெடித்து வெளிவரும்போது, ஆவியானவர் துணையை நாடி அவற்றை அடக்கி, சொஸ்தமாவதை நாடுவோமாக. அவர் வழிநடத்துதலை ஏற்றுக்கொண்டு முன்செல்லும்போது, இன்னொரு தடவை நாம் சோதிக்கப்படும்போது, நமக்குள்ளான வளர்ச்சியை நாமே கண்டுகொள்ளலாம். கிறிஸ்துவின் ஒப்பற்ற பண்பை நானும் கற்றுக்கொள்ளலாம்.

ஜெபம்: கர்த்தாவே, நீர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும் இருந்து நியாயமாய் தீர்ப்பு செய்கிறவருக்கு ஒப்புவித்த அந்த சிந்தையை எங்களுக்குக் கிருபையாய் தாரும். ஆமென்.