ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 29 வியாழன்

மங்கோலியாவுக்காக ஜெபிப்போம்: அங்கு நடைபெறக்கூடிய மிஷன் பணிகளுக்காக, சபை ஊழியங்களுக்காக ஜெபிப்போம். புதிய விசுவாசிகளிடையே நல்ல ஆன்மீக வளர்ச்சி உண்டாவதற்கும், சீஷர்கள் உருவாக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.

தாழ்மையின் மேன்மை!

தியானம்: 2026 ஜனவரி 29 வியாழன் | வேத வாசிப்பு: 1பேதுரு 5:5-10

YouTube video

அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது; அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போயிற்று (அப். 8:33).

ஒரு சபை மூப்பருக்கு “தாழ்மை மிக்கவர்” என்ற கனம் ஒரு அடையாளப் பரிசுடன் வழங்கப்பட்டது. ஆனால் அடுத்த ஞாயிறு தினத்திலேயே அந்தக் கனமும், பரிசும் இல்லையென்றாகிவிட்டது. இதற்கு ஒரே காரணம், அவர் அந்தக் கனத்தையும், பரிசையும் சரியென்று ஏற்றுக்கொண்டதுதான். இது அநியாயமாகத் தெரியலாம். ஆனாலும் ஒரு உண்மை உண்டு. “தன்னைத் தாழ்மையுள்ளவன் என்று ஒருவன் நினைத்தாலே போதும்; அவனுக்குள் பெருமை குடிகொண்டுவிடும்”. “திரு. தாழ்மை” என்ற பெயரை ஒரு பிரசங்கி யாருக்கு பெயராக சூட்டிவிட்டோம். ஆனால் ஓரிருமாதங்களில், “கனப்படுத்தப் பட வேண்டியவர்களின் பட்டியலில் என் பெயரை மேடையில் அழைக்காமல் என்னைக் கனவீனப்படுத்திவிட்டார்கள்” என்று ஓரிடத்தில் அவரே பிரசங்கித்ததைக் கண்டு தடுமாறிவிட்டோம்.

இயேசு தம்மைத்தாமே மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தவராக தம்மைத் தாழ்த்தினார் என்று அடிக்கடி சொல்லும் நம்மிடம், இந்தத் தாழ்மை எதுவரைக்கும் இருக்கிறது? நாளாந்த வாழ்விலே நம்மை மற்றவர்கள் குறை பேசும்போது, குற்றப்படுத்தும்போது, அலட்சியம் செய்யும்போது சிலசமயம் நாம் அதைக் கவனிக்காதவர்கள்போல இருந்தாலும், நமது உள்ளத்திலே நாம் என்ன எண்ணுகிறோம் என்பதே முக்கியம். தாழ்மை என்பதை பேதுரு, “மனத்தாழ்மை” என்று குறிப்பிடுகிறார். அதாவது தாழ்மை நமது வெளியரங்க செயல்களுடன் அல்ல; அது மனதுடன் சம்மந்தப்பட்டது. அது உள்ளத்தை முதலில் அலங்கரிக்கவேண்டும். இல்லையானால் அது மாயையான தாழ்மையே. இந்த மாயையான தாழ்மை மாம்சத்தைப் பேணுவதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது (கொலோ.2:23).

“இயேசு தம்மைத் தாழ்த்தியபோது அவருடைய நியாயம் எடுபட்டுப் போயிற்று” என்று இன்றைய தியான வார்த்தை கூறுகிறது. ஆம், உண்மைதான். தாழ்மை, பரிகாச வார்த்தைகளையும், பைத்தியம் என்ற பட்டத்தையும், முன்னேற்றமில்லாத வாழ்வையும்கூட நமக்குத் தரலாம். ஆனால் அந்த வழிசென்ற ஆண்டவர் அடைந்த மேன்மைகளை மறக்கலாமா? மெய்யாகவே மனிதர் முன்பாக அல்ல, முதலில் தேவனுக்கு முன்பாகத் தன்னை மெய்யாகவே தாழ்த்துகிறவன் ஒருபோதும் வெட்கமடையமாட்டான். ஏற்றவேளையில் தேவன் அவனை உயர்த்துவார். இந்த நம்பிக்கையும், அமைதியும், அடக்கமுமான உள்ளமும் நமக்கு இருக்குமானால், ஆண்டவருடைய இந்த நற்பண்பில் நாமும் வளரலாம். ஆகவே இதுவரை எந்தெந்த இடத்தில் நாம் மெய்த் தாழ்மையை விட்டுவிட்டோம், எந்தெந்த இடத்தில் பெருமையாக நடந்து கொண்டோம் என்பதை நிதானித்து மனந்திரும்புவோமாக.

ஜெபம்: கர்த்தாவே, தாழ்மையற்று நடந்த சந்தர்ப்பங்களை மன்னியும், மனத்தாழ்மையை அணிந்துகொண்டு உம்மை மகிமைப்படுத்த எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.