ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 24 சனி

உமது வசனத்தைத் தியானிக்கும்படி குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக் கொள்ளும் (சங்.119:148) அனுதின தியானவேளைகளில் ஏற்ற வழிகாட்டியாய் இருக்கும் சத்தியவசன தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளை கர்த்தர்தாமே நல்ல சுகபெலத்தோடு பாதுகாத்து வல்லமையாய் உபயோகிக்க ஜெபிப்போம்.

வாழ்வு மாறும்!

தியானம்: 2026 ஜனவரி 24 சனி | வேத வாசிப்பு: லூக்கா 7:36-50

YouTube video

… இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே … (லூக்கா 7:47).

பரிசேயனுடைய விருந்து வீட்டுக்குள் அழையா விருந்தாளியாக நுழைந்தாள் ஒரு பெண். அவள் விருந்துண்ண வரவில்லை. அவளுக்கு விருந்து அல்ல; வேறு எதுவோ தேவையாக இருந்தது. அது இயேசுவிடம் கிடைக்கும் என்ற விசுவாசம் அவளுக்குள் இருந்தது. ஊருக்குள்ளே அவளுடைய பாவவாழ்வின் நிமித்தம் நிச்சயமாக அவளை யாரும் சேர்த்திருக்க மாட்டார்கள். தன் வாழ்வின் அலங்கோலத்தை உணர்ந்தவளாக அங்கே வந்தாள். விருந்துக்கு அழைத்த பரிசேயன், தான் இயேசுவை விருந்துக்கு அழைத்ததே, அவருக்குத் செய்த பெரிய மரியாதை என கருதினானோ என்னவோ! ஆனால் இவளோ அது ஒரு பரிசேயனின் வீடு என்றோ, அங்கே ஆண்கள் இருக்கிறார்கள் என்றோ எதையும் கருத்திற்கொள்ளாமல், வீட்டிற்குள் நுழைந்தவள் இயேசுவின் பாதங்களைத் தேடினாள். உள்ளம் உடைந்து அழுதாள். தன் கண்ணீரினால் நனைந்த அவர் பாதத்தை, தன் தலைமயிரினாலே துடைத்தாள். பாதத்தை முத்தம் செய்தாள். பரிமளதைலத்தைப் பூசினாள். அவளுடைய செய்கை ஒவ்வொன்றும் அவளுக்குள் நடந்துகொண்டிருந்த மாற்றத்தை, அவளுக்குள் இருந்த விசுவாசத்தை வெளிப்படுத்தியது. மொத்தத்தில் தன்னை மேன்மையாக எண்ணிய பரிசேயன் அல்ல; இயேசுவிடம் விசுவாசத்தோடு வந்த பாவியாகிய அந்தப் பெண்ணே இரட்சிக்கப்பட்டாள். அவள் ஒரு புதிய பெண்ணாக அந்த இடத்தைவிட்டுக் கடந்துசென்றாள்.

நாமும் விசுவாசிகள்தான்; ஜெபிக்கிறவர்கள்தான். அப்படியானால் நமது வாழ்வில் அந்த விசுவாசத்தின் பிரதிபலிப்பு இருக்கிறதா? இயேசுவிடம் வந்த அவள் அறியப்பட்ட பாவியாக, தன் பாவ நிலைமையை உணர்ந்து வந்தாளே, அதுவே அவளது மாற்றத்திற்குக் காரணம். அவளுக்குள் துளிர்விட்டிருந்த விசுவாசம், தன் வாழ்வு மாறும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருந்தது. அவளுக்குள்ளிருந்து நிரம்பிவழிந்த அந்த அன்புதான் அவளை அப்படி செயற்பட வைத்தது. அந்த அன்பே அவள் பெற்ற மன்னிப்புக்கும் அவளுக்குள்ளிருந்த விசுவாசத்திற்கும் அடையாளமாயிருந்தது. அவள் விசுவாசத்தோடு இயேசுவிடம் வந்தாள். விடுதலையோடு சென்றாள். ஒருவேளை நாம் அந்தப் பெண்ணைப் போல இருக்கலாம். எல்லோரும் பாவம் செய்து ஏகமாய்க் கெட்டுப்போனவர்கள்தானே. ஆக, இயேசு தந்த விடுதலையை அந்த மீட்பை நாம் பெற்றிருக்கிறோமா? பெற்றிருக்கிறோம் என்றால், அந்த விடுதலையின் அடையாளங்கள் நமது வாழ்வில் வெளிப்படவேண்டுமே! மாறாக, ஏன் குழப்பம், எங்கே நமது சந்தோஷம்? எப்போது உண்மை நிலையை ஏற்றுக்கொண்டு இயேசுவிடம் நாம் வருகிறோமோ, அப்போது நிச்சயம் நமது வாழ்வு மாறும். அந்த வாழ்விலே நாம் பெற்ற விடுதலையின் சாயல் தெரியும். இன்னும் நாம் அதனை அனுபவிக்க வில்லையெனில் இன்றே ஆண்டவரிடம் திரும்புவேனாக. அவர் நமது வாழ்வை மாற்றுவார்.

ஜெபம்: கர்த்தாவே, எங்கள் அக்கிரமங்களையும் மீறுதல்களையும் மன்னித்து உமக்குச் சொந்தமாய் மாற்றின உமது பேரன்பை எங்கும் உயர்த்தி பிரஸ்தாபிக்க உமதருள் தாரும். ஆமென்.