ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 17 சனி
இஸ்ரேல் நாட்டிற்காக ஜெபிப்போம்: போரின் நிமித்தம் தொடர்ந்து மக்களிடையே காணப்படும் பதட்டங்கள் மத்தியில் கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தில் நிலைத்திருப்பதற்கும், நாட்டின் அதிபர்களுக்காகவும் அமைதி திரும்பவும் ஜெபிப்போம்.
கணக்குப் பார்ப்போம்!
தியானம்: 2026 ஜனவரி 17 சனி | வேத வாசிப்பு: லூக்கா 14:28-35

அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான் (லூக்கா 14:33).
கிறிஸ்துவின் சாயலைத் தரித்துக்கொள்ளும் நோக்குடன், அவரைப் பின்பற்ற தன்னை அர்ப்பணித்து, ஒவ்வொன்றாய் தன் காரியங்களை ஒழுங்குசெய்துவரும் ஒரு கிறிஸ்தவநபர், தன் சிலுவையைச் சுமப்பதற்கு முன்னானதும் முக்கியமானதுமான விஷயத்தை ஆண்டவர் இன்று நமக்குக் கற்றுத்தருகிறார். எந்தவொரு காரியத்தையும் செய்யும் முன்னதாக, அமர்ந்து சிந்திக்கவேண்டும். கட்டிடம் கட்டுவதற்கு முன்னே கட்டுகிறவன் அதன் செலவைக் கணக்கிடாவிட்டால் கட்டிடம் பாதியிலே நின்றுவிடும். இயேசுவைப் பின்பற்றுவேன் என்று சொல்லுகிறவனும், தான் செலுத்தவேண்டிய கிரயத்தை அமர்ந்திருந்து கணக்கிடவேண்டும். தவறினால் பின்வாங்க நேரிடும். ஆரவாரத்தோடும் அர்ப்பணிப்போடும் ஆரம்பித்த உன் கிறிஸ்தவ ஓட்டம் இப்போது ஏன் தடுமாறி நிற்கிறது? முன்னரே சிந்திக்கவில்லையா?
உண்மைதான், இந்த அர்ப்பணிப்பில், மதிப்பு மரியாதை, சபைப் பதவி, செல்வம், பணம், பொருள், இன்னும் நமது நேரம், வேலை இப்படிப் பலவற்றை நாம் இழக்க நேரிடலாம். பலருடைய பகைமையையும்கூட நாம் சம்பாதிக்கலாம். நமது குடும்பமே நம்மைத் தள்ளிவிடலாம். இந்த எல்லா செலவுகளையும் ஒன்றிணைத்து, கிறிஸ்துவின் பிள்ளைகளாக அவரைப் பின்பற்றுவதன் பெறுமதியுடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். உப்பு எப்படி சாரமற்றுப்போகும்? அதிகமதிகமாக பிறபொருட்கள் அதனுடன் சேரும்போதுதான் உப்பின் சாரம் தெரியாமற்போகும்! அன்று சாக்கடலிலிருந்து எடுக்கப்பட்ட உப்பு, அதனோடு சேர்ந்த மணல், வேறு அழுக்கு போன்றவற்றை நீக்க அதை தூய்மைப்படுத்த வேண்டும். அதுவரையில் அதன் உண்மையான சாரம் தெரியாது. அதனைப் பாவிக்கவும் முடியாது. ஆம், இந்த உலக காரியங்கள் கலக்கப்பட்டிருக்கும் வரைக்கும் நாமும் எதற்கும் உதவாத சாரமற்ற உப்புகள்தான். கடந்துவந்த ஆண்டுகளில் ஆண்டவரைப் பலவகையில் நாம் ருசி பார்த்திருக்கிறோம். அவரிடமிருந்து பலவற்றை பெற்றிருக்கிறோம். இது மாத்திரமா கிறிஸ்தவ வாழ்க்கை? இன்று அமர்ந்திருந்து இயேசுவைப் பின்பற்றுவதினதும், இயேசுவைப் போலாகி அவருடன் நித்தியமாய் வாழ்வதினதும் பெறுமதிகளை கணக்குப் பார்ப்போமாக. இதற்காக நாம் செலவிடவேண்டிய கணக்கையும் சரிபார்ப்போமாக. பின்னர் எது முக்கியம் என்ற தீர்க்கமானதொரு முடிவுக்கு வருவோம்.
நாட்கள் மிக மிக பொல்லாதவை. விசேஷமாக கர்த்தருடைய பிள்ளைகளை வழி விலக்கிவிட தந்திரமான பல வழிகளை நமக்கு முன்னே பிசாசானவன் விசாலமாகத் திறந்துவிட்டிருக்கிறான். எச்சரிக்கையோடு முன்நடப்போம். கணக்கைத் தவறவிடக்கூடாது. எடுத்த தீர்மானத்திலிருந்து வழி விலகவும்கூடாது.
ஜெபம்: “அன்பின் ஆண்டவரே, கர்த்தரையே சேவிப்பேன் என்ற எனது தீர்மானத்திலிருந்து பின்னடைவுக்கு கொண்டுசெல்ல எத்தனிக்கும் சாத்தானின் தந்திரங்களுக்கு ஜாக்கிரதையுள்ளவர்களாய் இருக்க எங்களுக்கு கிருபை செய்யும். ஆமென்”.