ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 20 செவ்வாய்
ஜோர்டான் நாட்டிற்காக ஜெபிப்போம்: யுத்தத்தின் நிமித்தம் மனச் சோர்வுகளோடும் இழப்புகளோடும் உள்ள மக்களது ஆறுதலுக்காகவும், நாட்டின் ஆளுமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்காக வேண்டுதல் செய்வோம்.
பேதுருவின் மாற்றம்
தியானம்: 2026 ஜனவரி 20 செவ்வாய் | வேத வாசிப்பு: அப்போஸ்தலர் 2:12-26

பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து …. ஜீவாதிபதியைக் கொலை செய்தீர்கள் (அப். 3:14,15).
தன் சிறுவயதிலே ஒரு துணியை “மைக்”காக கருதி வாயருகே பிடித்துக் கொண்டு கலகலவென்று ஓய்வின்றி பேசிக்கொண்டிந்த ஒரு குழந்தையை அறிவேன். இப்போது அவள் அமைதியும் சாந்தமும் உள்ளவளாய் அதிகம் பேசாதவளாக வளர்ந்திருக்கிறதைப் பார்த்து நானே அதிசயித்திருக்கிறேன். மனுஷனுடைய வாழ்வின் மாற்றங்கள் மெய்யாகவே ஆச்சரியமானதுதான்.
பேதுருவுக்கோ எல்லாவற்றிலும் அவசரம். இயேசுவே தேவகுமாரன் என்று ஆவியில் உணர்த்தப்பட்டபோதும், தேவனுடைய நிர்ணயம் இன்னது என்று சிந்திக்க அவனது அவசரம் இடமளிக்கவில்லை. தானே ஆண்டவரை மறுதலிக்கப்போவதை இயேசுவின் மூலமாக அறிந்திருந்தும் உணராத அவர், பட்டயத்தை எடுத்து வேலைக்காரனின் வலது காதை வெட்டினார். அப்போது, “… பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனோ” என்று இயேசு சொன்னதன் அர்த்தத்தை அவர் உணரவில்லை. தேவன் நிர்ணயித்ததை உணராத பேதுரு இடறிப்போனார். ஆனால், சேவல் கூவி குற்றத்தை உணர்த்தியபோது பேதுரு மனஸ்தாபப்பட்டு ஆண்டவரிடம் திரும்பினாரே, அங்கேதான் அவருடைய மாற்றம் ஆரம்பித்தது. பின்னர் இயேசுவே ஆண்டவர் என்பதை அறிந்துகொண்டு, பரிசுத்தாவியினால் நிரப்பப்பட்டபோது, நடந்த யாவும் தேவன் நிர்ணயித்ததே என்ற ஒப்பற்ற சத்தியத்தையும் உணர்ந்துகொண்டார். மக்கள் மத்தியிலே எழுந்து நின்று, ‘தேவன், தாம் நிர்ணயித்து, அறிவித்து அனுப்பிய இயேசுவை நீங்கள் மறுதலித்து ஆணி அடித்துக் கொன்றீர்கள்’ என்று தைரியமாக எழுந்து நின்று முழங்கினார். அத்தோடு, தேவனுடைய பரிபூரண சித்தத்திற்குள் தானும் இருப்பதை ஏற்றுக்கொண்டதால்தான் தன்னையும் சிலுவையில் தலைகீழாக அறையும்படி ஒப்புக்கொடுத்தார். சுயஉணர்வுகளுக்கு முன்னிடம் கொடுத்த பேதுரு, எப்படி தேவ சித்தத்திற்குத் தன்னை ஒப்புக் கொடுத்தார்? இதை யாரிடம் கற்றுக்கொண்டார்? உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்டதனால் அல்லவா! பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டதால் அல்லவா!
நமக்கு நடப்பது என்ன என்பது அல்ல; நடப்பது ஒவ்வொன்றிலும் தேவதிட்டம் சரியாக நிறைவேற நான் ஏதுவாயிருக்கிறேனா என்பதில்தான் நமது கவனம் இருக்க வேண்டும். ஏனெனில் நாம் தேவனுடைய அநாதித் திட்டத்தின் பங்குதாரர்கள். இந்த அறிவை நாம் பரிசுத்த ஆவியானவருடைய ஆளுகைக்குள் வரும்வரை பெற்றுக்கொள்ள முடியாது. பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குள் நாம் வந்துவிடும்போது, அவர் நமது பயத்தை நீக்கி, தைரியப்படுத்தி, ஆண்டவருக்குச் சாட்சிகளாக நம்மை நிச்சயம் மாற்றுவார். நமது வாழ்வும் பலருக்கு ஆசீர்வாதமாக மாறிப்போகும்.
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, நான் உம்முடைய அநாதிதிட்டத்துக்கு உட்பட்டவன்; எனக்குள் உள்ள பயத்தை நீக்கி சாட்சியாய் வாழ உமதாவியால் எங்களை நிரப்பும். ஆமென்.”