ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 8 வியாழன்
சேனைகளின் கர்த்தர் நியாயந்தீர்ப்பினால் உயர்ந்து, பரிசுத்தமுள்ள தேவன் நீதியினால் பரிசுத்தராய் விளங்குவார் (ஏசா.5:16) தேவன் கிருபையாக இரங்கி மணிப்பூர் மாநிலத்திற்கு கிடைக்கவேண்டிய நீதியைச் செய்தருளவும், சேதப்படுத்தப்பட்ட ஆலயங்கள் மீண்டும் கட்டியெழுப்படவும், சுவிசேஷப் பணிகளுக்கு உள்ள தடைகள் நீங்கவும் ஜெபிப்போம்.
சேவையா? சேவிக்கப்படவா?
தியானம்: 2026 ஜனவரி 8 வியாழன் | வேத வாசிப்பு: பிலிப்பியர் 2:1-5

கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது (பிலிப்பியர் 2:5).
கோடிக்கணக்கான மக்கள் மத்தியில், பாவிகளாகிய நம்மை மாத்திரம் நித்திய வாழ்வுக்காய் மீட்டெடுத்த தேவ கிருபையின் அதிசயத்தை நாம் சிந்தித்துப் பார்ப்பதுண்டா? நாம் மீட்கப்பட்டிருக்கிறோம்; ஆகையால் தேவ ராஜ்யத்திலே விலையேறப்பெற்றவர்கள். இது உண்மைதான்; அப்படியென்றால், நமது வாழ்வு இதனைப் பிரதிபலிக்கவேண்டுமே! மாறாக நமது வாழ்வு, நமது விருப்பம், நமது பிரச்சனைகள் என்று இன்னமும் சுழன்று கொண்டிருப்பது ஏன்? நாம் கிறிஸ்துவின் சிந்தையைத் தரித்துக்கொள்ளவேண்டும் என்பதுவே தேவசித்தம்.
அந்த சிந்தைதான் என்ன? “அவனவன் தனக்கானவைகளை அல்ல; பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.” ஞானஸ்நானம் பெற்றுக் கரையேறியதிலிருந்து, சிலுவையிலே தன் ஜீவனைக் கொடுத்ததுவரை இயேசுவின் வாழ்க்கை இப்படித்தான் இருந்தது. அவர் புகழை நாடவில்லை; தமக்கென்று ஒரு பிரபல்யத்தை அவர் ஏற்படுத்தவுமில்லை. பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காக தன் சொந்த உரிமைகளைக்கூட விட்டுவிட்டு, மற்றவர்களுக்கு சேவை செய்ததையே சுவிசேஷங்களிலே நாம் காண்கிறோம். மொத்தத்தில் ஒரு அடிமையின் சிந்தையே இயேசுவிடம் காணப்பட்டது. பயத்தினாலோ வெறுப்பு உணர்வினாலோ அல்ல; முழு மனதோடு, அன்பு நிறைந்த உள்ளத்தோடு, கடவுளுக்கும் மனிதருக்கும் சேவைசெய்யும் அந்த உன்னதமனதைத்தான் நாம் இயேசுவிலே காண்கிறோம். புகழ் அவரை நாடிவந்த இடங்களிலும் ஆண்டவர் அந்த இடத்திலிருந்து விலகிச் சென்றதையும், அவரை ராஜாவாக்க மக்கள் அவரைத் தேடியபோது அவர் மறைந்துபோனதையும்கூட காணலாம்.
இந்த இயேசுவை நாம் பிரதிபலிக்கிறோமா? அதற்கு நாம் அன்றாட வாழ்வின் சகல சம்பவங்களிலும் நாம் இயேசுவின் குணாதிசயத்தைத் தரித்துக் கொள்ளும்படிக்கு அவற்றைப் பயன்படுத்தவேண்டும். ஆனால் நாம் இன்று எப்படி இருக்கிறோம்? நமது நடக்கையையும் நோக்கங்களையும் உண்மையான மனதோடு சீர்தூக்கிப் பார்ப்போம். குடும்ப, சமுதாய வாழ்விலும் சரி, ஆலய காரியங்களிலும் சரி, சுயநோக்கங்களும் சுயபுகழும், மனிதரின் நற்பெயர் பெறுகின்ற அல்லது மனிதரைத் திருப்தி செய்யும் மனநிலையுமே நம் அநேகரிடத்தில் காணப்படுகிறது. இது கிறிஸ்துவின் சிந்தை அல்ல. “மனுஷகுமாரன் ஊழியம் கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்” (மாற்.10:45). இன்று நாம் செய்வது என்ன? ஆலய கூட்டத்தில் தனக்கு முன் ஆசனம் ஒதுக்கவில்லை என்பதற்காகக் கோபித்துக்கொள்ளும் கிறிஸ்தவர்களும் உண்டு. நாம் இன்றைக்கே தீர்மானிப்போம். நமது வாழ்வு சேவை செய்யவா? அல்லது சேவிக்கப்படவா? இயேசுவின் சிந்தையைத் தரித்துக்கொள்ள நம்மை ஒப்புவிப்போமாக!
ஜெபம்: அன்பின் அன்பின் பிதாவே, உம்மைப்போல தேவைகளில் உள்ள மக்களுக்கு சேவைசெய்யும் உன்னத மனப்பான்மையை கிருபையாய் எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.