ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 7 புதன்
பூட்டான் நாட்டிற்காக ஜெபிப்போம்: நாட்டின் தலைவர்கள் இரட்சிக்கப்படுவதற்கும், தங்கள் நம்பிக்கையினிமித்தம் குடும்ப நிராகரிப்பு மற்றும் சமூக தனிமைப்படுத்தலை எதிர்கொள்ளும் கிறிஸ்தவர்களை அடைக்கலமும் பெலனுமாகிய கர்த்தர் அரவணைத்து வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.
எல்லாம் புதிதாகும்!
தியானம்: 2026 ஜனவரி 7 புதன் | வேத வாசிப்பு: 2 கொரிந்தியர் 5:14-21

இப்படியிருக்க ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின (2கொரி.5:17).
பன்னிரு சீஷர்களும், இயேசுவை முழுமையாக அறிந்துகொண்டு அவரைப் பின்செல்லவில்லை. ஆனாலும் கல், முள், வனாந்திரம், மலை என்று பாராமல் அவருக்குப் பின் நடந்தார்கள். வெயில், மழை, குளிர், காற்று என்றும் பாராமல் அவரோடே கூடவே சென்றார்கள். கல்லறைப் பக்கம் என்றும் ஒலிவமரத் தோப்பென்றும் பாராமல் அவர் சென்ற இடமெல்லாம் சென்றார்கள். ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகளாக கூடவே இருந்த இந்த சீஷர்களுக்கும், அவரைப் பின்பற்றிய மற்றவர்களுக்கும் இயேசு பெரிய மகாநாடுகள் நடத்தவுமில்லை; கல்வி கற்றுக்கொடுக்கவும் இல்லை. மாறாக, இயேசு செய்த அற்புதங்கள், அவரது போதனைகள், சொன்ன உவமைகள், அவர் காட்டிய கரிசனை, மனதுருக்கம், அன்பு இவற்றினால் அவர்கள் தொடப்பட்டனர்; தாமும் இயேசுவை அனுபவித்தனர். தங்கள் இருதயம் கொஞ்சம் கொஞ்சமாகப் புதிதாக்கப்பட்டதை உணர்ந்தனர். பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் இடையே இருந்த பரந்த இடைவெளிக்குப் பாலம் அமைப்பதுபோல கிறிஸ்துவின் நோக்கங்கள் செயல்கள் காணப்பட்டதைக் கண்டனர். கிறிஸ்துவின் கண்களிலே பிதா மாத்திரமல்ல, அவர் நேசித்த மக்களும் பிரதிபலித்ததைக் கண்டனர். இவர்களின் வாழ்வு மாறின.
சகேயு போன்றவர்கள் இயேசுவுடன் கூட வாழ்ந்ததால் அல்ல; அவர்களுடைய இருதயம் இயேசுவினால் தொடப்பட்டதால் மாறிற்று. பேதுரு, யோவான் என்பவர்களில் காணப்பட்ட மாற்றம், வைராக்கியம் என்பன இயேசு, அவர்களோடிருந்த நாட்களிலும் பார்க்க, அவர் பரமேறிய பின்பு பெரிதாக இருந்தது. அது இயேசுவைப் பற்றி அவர்கள் கற்றறிந்ததினால் அல்ல; அவரோடு வாழ்ந்த நாட்களின் பலனாக ஏற்பட்ட பிரதிபலிப்பேயாகும். ஆனால் பவுலோ, இயேசுவோடு வாழ்ந்திருக்கவில்லை. ஆனால் உயிர்த்தெழுந்த ஆண்டவர் அவருக்குள் வாழ வந்தபோது, அவருடைய வாழ்வே புதிதாக மாறியது. அவருடைய சிந்தை, செயல், வாழ்க்கையின் முக்கியத்துவம் எல்லாமே புதிதாயின. அவர் அதை அனுபவித்தார். இறுதியில் சிரைச்சேதம் செய்யப்பட்ட போதும்கூட அவர் தளர்ந்துவிடவில்லை.
ஆண்டவரை நாம் இதுவரை எவ்வளவாய் அனுபவித்திருக்கிறோம்! எவ்வளவாய் அவரது கிருபையை ருசித்திருக்கிறோம்! ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளாக வரும்போது, பழையவாகனங்கள் சரிசெய்து புதிதாக்கப்படுகிறதுபோல, அவன் சரிசெய்யப்பட்டு புதிதாக்கப்படுபவன் அல்ல. பழையவைகள் யாவும் ஒழிக்கப்பட்டு, அவன் ஒரு புதிய சிருஷ்டியாகிறான். அப்படியிருக்க, கிறிஸ்தவர்கள் என்று சொல்லப்படுகிற நமது வாழ்வு இன்னும் பழைய வாழ்வோடு தொடர்புபட்டு இருக்கலாமா? நமது வாழ்வு புதிதாக வேண்டும். இழந்துபோன சாயலைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஜெபம்: கர்த்தாவே, உமக்குப் பிரியமில்லாத எல்லாக் காரியங்களிலிருந்தும் நாங்கள் விடுதலை பெற்று வாழவும், உமது சாயல் எங்களில் பிரதிபலிக்கவும் எங்களை அர்ப்பணிக்கிறோம். ஆமென்.