வாக்குத்தத்தம்: 2026 ஜனவரி 23 வெள்ளி
கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிறவர்கள் யாவரும் துன்பப்படுவாார்கள் (2தீமோ. 3:12)
வேதவாசிப்பு: யாத்திராகமம் 4,5 | மாலை: மத்தேயு 15:29-39
கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிறவர்கள் யாவரும் துன்பப்படுவாார்கள் (2தீமோ. 3:12)
வேதவாசிப்பு: யாத்திராகமம் 4,5 | மாலை: மத்தேயு 15:29-39
தூத்துக்குடி மாவட்டத்திற்காக ஜெபிப்போம். மாவட்ட ஆட்சியாளருக்காக, அங்கு நடைபெறும் அனைத்து திருச்சபைகள், சுவிசேஷப்பணி ஊழியங்களினாலே மிஷனரி தரிசனம்பெற்ற ஊழியர்கள் அநேகர் எழும்பவும், மிஷனரிகளை தாங்கும் திருச்சபைகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், தொழில்வளத்திலும், கல்வியிலும் மாவட்டம் சிறந்துவிளங்க ஜெபிப்போம்.
தியானம்: 2026 ஜனவரி 23 வெள்ளி | வேத வாசிப்பு: மாற்கு 10:17-22

…. நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால் … (மத்தேயு 19:21).
ஆண்டவரிடம் வந்தும், வந்தபடியே திரும்பிப்போய்விட்ட வாலிபனுடைய நிலைமை எவருக்கும் வரக்கூடாது. அவன் நல்ல நோக்கத்தோடுதான் வந்தான். தன் நித்திய ஜீவனுக்காக முயற்சி எடுத்துக்கொண்டிருந்தான் என்பது அவனது பதிலில் விளங்கியது. இயேசு குறிப்பாக ஆறு கற்பனைகளை அவனுக்கு சுட்டிக்காட்டினார். அந்த ஆறும் பிறருக்கும் நமக்கும் இடையேயுள்ள உறவின் பிணைப்பைக் காட்டும் கற்பனைகள். ஆனால் வாலிபனோ, அதை உணராதவனாக, “இவை எல்லாவற்றையும் நான் சிறுவயதுமுதல் கடை பிடிக்கிறேன்” என்று பொதுவாகச் சொன்னான். ஆண்டவரோ, அவனைக் கூர்ந்து கவனித்து, அவனில் அன்புவைத்தார். அவனுக்குள் இருந்த குறை ஒன்றைக் கண்டார். அதாவது அவனால் விட்டுவிட முடியாத, நித்திய ஜீவனுக்குப்போகும் பாதையை அடைத்து வைத்திருக்கும் ஒன்றை விளக்கினார். அவன் செய்ய வேண்டியதையும் அதன் பலனையும் விளக்கினார். இவற்றோடு விட்டுவிடாமல், அதன்பின் சிலுவையை எடுத்துக்கொண்டு தன்னைப் பின்பற்றும்படி கூறினார். ஆனால் நித்திய ஜீவனின் அருமைபெருமை தெரிந்திருந்தும், தனக்கென்று இருந்ததை விட்டுக்கொடுக்க அவனுக்கு மனதில்லாதிருந்தது. அதனால் அவன் துக்கத்தோடே திரும்பிப்போய் விட்டான். நமக்கும், ஆண்டவரோடு நித்தியமாய் வாழ வாஞ்சை உண்டு. ஆனால், ஆண்டவருக்கு முன்னே நம்மை முழுமையாகக் கொண்டுவர நம்மில் பலருக்கு தயக்கம், ஏன் தெரியுமா? அந்த வாலிபனுக்கு அவனுடைய செல்வம் மீதான வாஞ்சை ஒரு தடையாயிருந்தது. நமக்குள்ளும் ஏதோவொன்று தடையாக உள்ளது. அந்த “ஒரு குறையை” சரிசெய்ய நாம் ஆயத்தமில்லை. ஏன்?
தேவனிடத்தில் அன்புகூரு; உன்னிடத்தில் அன்புகூருவதுபோல பிறரிடத்திலும் அன்புகூரு. இதுதான் கற்பனை, கட்டளை. முன்பகுதியில் பிரச்சனையில்லை. பின்பகுதிதான் பலருக்குக் கடினம். ஆனால் பின்பகுதிதான் முன்பகுதியின் பிரதிபலிப்பு என்பதையும், முன்பகுதியில் சரியாயிருப்பவன்தான் பின்பகுதியிலும் உண்மையாக இருப்பான் என்பதையும் நாம் உணருவதில்லை. கண்களுக்குத் தெரியாத தேவனிடத்தில் அன்புகூருவது இலகு; ஆனால் கண்முன்னே தெரிகிற பிறரிடம் அன்புகூருவதானால் நம்முடைய பலவற்றை இழக்க நேரிடும். அதற்கு யார் ஒப்புக்கொள்வார்கள்? தமக்கென்று எதையும் வைக்காமல் தம்மையே முழுமையாகத் தந்த கிறிஸ்துவை அறிகிற அறிவே நித்திய ஜீவன். நமக்காக தம்முடைய யாவற்றையும் இழந்த அவரே பூரண சற்குணர். இவரை அறியும் அறிவுக்காக பவுல் தனது யாவையும் குப்பையாகத் தள்ளினார். அந்த மனது நம்மிடம் உண்டா? நமக்குள் மறைந்திருக்கும் அந்த ஒரு குறை எது? இயேசு அதைக் காண்கிறார். நாம் பூரண சற்குணத்தின் அந்த நிறைவை நோக்கி முன்செல்வோமா? அல்லது திரும்பிப்போய் விடுவோமா?
ஜெபம்: ஆண்டவரே, நித்தியவாழ்வுக்கு தடையாய் என் வாழ்வில் இருக்கக்கூடிய குறைகள் எல்லாவற்றையும் அறிக்கைசெய்து விட்டுவிட உமதருள் தாரும். ஆமென்.