வாக்குத்தத்தம்: 2026 ஜனவரி 1 வியாழன்

நாம் பரிசுத்தமுள்ளவர்களாய் இருப்பதற்காக … தேவன் உலகத்தோற்றத்திற்கு முன்னே … நம்மை தெரிந்துகொண்டார் (எபேசி.1:4)

ஒருவராய் பெரிய அதிசயங்களைச் செய்கிறவைரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. (சங். 136:4)
வேதவாசிப்பு: காலை: ஆதியாகமம் 1,2 | மாலை: மத்தேயு 1

ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 1 வியாழன்

ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதி செய்கிற தேவன் (ஏசா 30:18).

வருடத்தை உம்முடைய நன்மையினால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய் பொழிகிறது (சங்.65:11) இப்புதிய வருடத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும், கர்த்தருக்கு பயப்படுகிற சிறியோர் பெரியோர் யாவரையும் நன்மையினால் முடிசூட்டி கண்மணிபோல பாதுகாத்து நடத்த ஜெபிப்போம்.

புத்தாண்டின் உயரிய நோக்கம்

தியானம்: 2026 ஜனவரி 1 வியாழன் | வேத வாசிப்பு: எரேமியா 33:6-9

YouTube video

இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, …பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன் (எரே.33:6).

இழந்துபோன தேவசாயலை நாம் மறுபடியும் பெற்றுக்கொள்வதற்காக தம்மையே நமக்களித்த ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில், அனுதினமும் தேவனுடன் வாசகர்களுக்கு, அன்பின் புதுவருட வாழ்த்துக்கள்! இப்புதிய ஆண்டிலே, ஒழுக்கமும் கட்டுப்பாடுமுள்ள வாழ்வு வாழவும், கிறிஸ்துவின் சாயலைத் தரித்துக்கொள்ளவும், கர்த்தர்தாமே நம் யாவருக்கும் நாள்தோறும் புதிய கிருபையும் பெலனும் தந்து வழிநடத்துவாராக.

தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிற (சங்.146:5) ஒவ்வொருவனுக்கும் கர்த்தர் நல்ல சுகமும் குணமும் தந்து, நிலையான நிறை வாழ்வையும் தருவேன் என்று வாக்களிக்கிறார். வாக்குறுதி நமக்கு என்றும் உண்டு. ஆனால் அது நம் வாழ்வில் செயல்படுவது அல்லது நிறைவேறுவது என்பது, நம்மை நாம் தேவ நோக்கத்திற்கு விட்டுக்கொடுப்பதிலேதான் தங்கியிருக்கிறது. ஆக, தமது பரிபூரண சமாதானத்தை நாம் பெற்றுக்கொள்ளவேண்டுமென்று தேவன் நம்மீது வைத்திருக்கிற நோக்கம்தான் என்ன? அன்று இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, அழைத்துவந்த தேவன், அவர்களது சகல கீழ்ப்படியாமையின் மத்தியிலும் அவர்களைத் தண்டித்துக் கண்டித்து நடத்தினாரே தவிர, அவர்களைத் தள்ளிவிடவில்லை. ஏன்? அவர்களுக்கூடாக தம்மை உலகத்திற்கு வெளிப்படுத்துவதே அவர் நோக்கமாக இருந்தது. அப்படியே தாவீதின் வம்சத்தில் இயேசு வந்துதித்தார்.

அந்த இயேசுவை ஏற்றுக்கொண்ட நமது வாழ்விலும் தேவன் பெரிய நோக்கங்களை வைத்திருக்கிறார். நம்முடைய வாழ்விலே அவர் மகிமைப்படுவது மாத்திரமல்ல, கிறிஸ்துவைப்போல நாம் மாறவேண்டும் என்பதே அந்த மகா மேன்மையான சித்தம் என திருமறை நமக்கு விளக்குகிறது. நாம் கிறிஸ்துவாகிறது அல்ல; கிறிஸ்துவைப் போல் ஆகிறது. அதாவது இழந்துபோன தேவசாயலை கிறிஸ்துவில் நாம் தரித்துக்கொள்வது; தேவனோடு நித்தியமாய் வாழும் ஒப்பற்ற சிலாக்கியத்தைப் பெற்றுக்கொள்வது. கிறிஸ்துவின் குணாதிசயம், அவருடைய சிந்தை இவற்றை நமதாக்கிக்கொள்வது. தினமும் மாறிக்கொண்டிருக்கும் இந்த உலகத்திலே என்றும் மாறாத கிறிஸ்துவின் சாயலைப் பெற்றுக்கொள்வதைத் தவிர நமக்கு பரிபூரண சமாதானத்தைத் தருவது எதுவும் இருக்கமுடியாது. அந்த மகிமையின் சாயலைப் பெற்று, பூரண சமாதானத்துடன் கிறிஸ்துவை இவ் உலகில் பிரகடனப்படுத்தவேண்டிய நாம் இந்தப் புதிய ஆண்டில் நமது இரட்சகருக்காய் என்னதான் செய்யப்போகிறோம்? என் வாழ்வின் நோக்கம்தான் என்ன? அது உலகத்தோடு முடிந்துவிடுமா? நித்தியம் வரைக்கும் நடத்துமா?

ஜெபம்: “அன்பின் பிதாவே இப்புதிய ஆண்டிலும் தேவரீர் அருளும் பரிபூரண சமாதானத்தை நாங்கள் பெற்றுக்கொள்ளவும், கர்த்தருக்காய் புதியவாழ்வை தரித்துக் கொண்டு வாழ உமதருள் தாரும். ஆமென்.

ஆசிரியரிடமிருந்து… (ஜனவரி – பிப்ரவரி 2026)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

புத்தாண்டில் இவ்விதழின் வாயிலாக தங்களை சந்திக்க தேவன் கிருபை செய்தபடியால் கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறோம். கடந்த நாட்களில் எல்லாம் கர்த்தர் தமது மிகுந்த தயையினாலே நம்மை போஷித்து பராமரித்து நம்மேல் கரிசனையுள்ளவ ராயிருந்து வழிநடத்தி வந்திருக்கிறார். அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்தியபுயங்கள் உனக்கு ஆதாரம் (உபா.33:27). இப்புதிய வருடத்திலும் கர்த்தர் புதிய காரியங்களை செய்யவும் உங்கள் இருதயத்தின் வாஞ்சைகளை நிறைவேற்றி, குடும்பங்களில் தேவசமாதானத்தை தந்தருளி ஒவ்வொரு குடும்பங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்து வழிநடத்த ஜெபிக்கிறோம். கடந்த ஆண்டு முழுவதும் ஜெபத்தினாலும் உதாரத்துவமான காணிக்கையினாலும் தாங்கிவந்த அன்பு பங்காளர்கள் ஆதரவாளர்கள் யாவருக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

2026ஆம் வருட சத்தியவசன காலண்டரை பங்காளர்களுக்கு அனுப்பி வைக்கிறோம். கூடுதலான காலண்டர் தேவைப்படுபவர்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். தொலைக்காட்சி, இலக்கியபணி வாயிலாகவும், இணையதளம், வாட்ஸ் அப், YouTube ஆகிய ஊடகங்கள் வாயிலாக அனுதினமும் மக்களுக்கு தேவனுடைய வார்த்தைகளைப் போதிக்க தேவன் கிருபை செய்துவருகிறார். இவ்வூழியத்தின் தேவைகள் சந்திக்கப்பட தாங்கள் தொடர்ந்து இணைக்கரம் கொடுத்து உதவ அழைக்கிறோம். வேதவாசிப்பு அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை தவறாது வாசித்துமுடித்தவர்கள் பெயர்களை ஜனவரி 31ஆம் தேதிக்குள் எங்களுக்கு எழுதித் தெரிவியுங்கள்.

ஜனவரி மாதத்தில் தேவனோடு நெருங்கி ஜீவிக்க அருமையான தியானங்களை சகோதரி சாந்தி பொன்னு அவர்களும், பிப்ரவரி மாதத்தில் சகோதரி தர்ஷினி சேவியர் அவர்களும் எழுதியுள்ள தியானங்கள் இடம்பெற்றுள்ளது. தியானங்கள் தங்கள் ஆவிக்குரிய வாழ்வுக்கு பயனுள்ளதாக இருக்க ஜெபிக்கிறோம். தியானங்களை எழுதும் சகோதர. சகோதரிகளுக்காக ஜெபிக்கவும் கேட்டுக்கொள்கிறோம்.

ஆ.ஜான் துரை

செட்டைகளின் நிழல்!

அதிகாலை வேளையில்… (ஜனவரி – பிப்ரவரி 2026)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: சங்கீதம் 17

உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும். உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும் (சங்கீதம் 17:4). (பொது மொழிபெயர்ப்பு)

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சிறகுகள் கோழியின் செட்டைகளைக் குறிக்காது (மத். 23:37). ஆனால், அவை தேவாலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்தில் உள்ள கேருபீன்களின் செட்டைகளைக் குறிக்கிறது. (யாத். 25:10-22). பிரதான ஆசாரியரைத் தவிர வேறு எவரும் இந்த மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையமுடியாது. அவரும் ஆண்டுக்கு ஒருமுறை பாவநிவிர்த்தி நாளில் மட்டுமே பிரவேசிக்கலாம் (லேவி.16). அவர் பலியின் இரத்தத்தை இரு கேருபீன்களின் செட்டைகளுக்கு கீழே கிருபாசனத்தின்மீது தெளிக்கவேண்டும். இந்த உருவகம் வேதாகமத்தில் எட்டுமுறை குறிப்பிடப்பட்டுள்ளது. தேவனின் செட்டைகளின் கீழ் இருப்பவர்களுக்கு செய்யும் காரியங்களை சங்கீதம் 17 இல் நாம் வாசிக்கிறோம். அவர் அவர்களை இரட்சிக்கிறார், பராமரிக்கிறார், திருப்திப்படுத்துகிறார்.

அவர் இரட்சிக்கிறார் (சங்கீதம் 17:7).

நாம் தேவனுடைய நியாயப்பிரமாணத்தை மீறினதால் நியாயத்தீர்ப்புக்கு தகுதியானவர்கள். எனவே நாம் இரட்சிக்கப்படவேண்டும். கேருபீன்களுடன் கூடிய கிருபாசனம், நியாயப்பிரமாணப்பலகைகள் இருந்த பெட்டியை மறைப்பதாக இருந்தது. இஸ்ரவேலரைப் போலவே நாமும் நியாயப் பிரமாணத்தை மீறுகிறோம். “ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்வது இரத்தமே” (லேவி.17:11). ஆசாரியன் கிருபாசனத்தின் மீது இரத்தத்தைத் தெளித்தார். தேவனுடைய பார்வையில் மீறப்பட்ட பிரமாணங்களல்ல, பாவநிவிர்த்திக்கான இரத்தம் மட்டுமே காணப்பட்டது. இயேசுகிறிஸ்து சிலுவையில் மரித்தபோது அவருடைய இரத்தம் நமது இரட்சிப்புக்கான கிரயத்தை செலுத்தியது. “அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது” (எபே.1:7). மோவாபிய பெண்ணான ரூத், உண்மையான ஜீவனுள்ள தேவனாகிய யேகோவாவில் விசுவாசம் வைக்கும்வரை, இஸ்ரவேலின் உடன்படிக்கை ஆசீர்வாதங்களுக்கு வெளியே இருந்தாள் (ரூத்.1:16,17). விளைவு? “உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைக்கட்டும்” (2:12) என்ற ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டாள்.

அவர் காக்கிறார் (சங்கீதம் 17:8).

“எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்” (57:1). தாவீது இதை எழுதினபோது அவருடைய உயிருக்கு ஆபத்து இருந்தது. அவர் ஒரு குகையில் ஒளித்துக்கொண்டிருந்தார். ஆனால் அவருடைய விசுவாசம் தேவன் மீது இருந்தது. சங்கீதம் 61ம் இதைப் போன்றதொரு ஜெபமாகும்.

“நான் உம்முடைய கூடாரத்தில் சதாகாலமும் தங்குவேன்; உமது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன்” (வசனம் 4). தேவனுடைய பிள்ளைகளுக்கு மிகப் பாதுகாப்பான இடம் அவருடைய மகா பரிசுத்த ஸ்தலமாகும். உன்னதமானவரின் மறைவில் வசிப்பவர் சர்வவல்லவரின் நிழலில் தங்குவார் (சங்.91:1). இதுவே புதிய ஏற்பாட்டில் “என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்“ (யோவான் 15:4) என்று காணப்படுகிறது.

அவர் திருப்திப்படுத்துகிறார் (சங்கீதம் 17:15)

“அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள். உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்; (36:7-8). “நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்” (63:7). என்னே ஒரு வாழ்க்கை! நிறைவு, மிகுதி, முழுமை, மற்றும் மகிழ்ச்சி, இவை அனைத்தும் தேவனுடைய இதயத்திலிருந்து வருகிறது! “என் ஆத்துமா திருப்தியாகும்” (வச.5). இது தாவீதின் சாட்சியாகும்.

பழைய ஏற்பாட்டில், நியாயப்பிரமாணம் பரிசுத்த ஸ்தானத்துக்கு எல்லை களை நிர்ணயித்தது (யாத் 21:12,19-21), மேலும் பரிசுத்த எல்லைக்குள் ஜனங்கள் வரக்கூடாது என்றும் எச்சரித்தது. ஆனால் தேவனுடைய கிருபையோ பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து எறிகிறது (எபே. 2:14), திரையைக் கிழிக்கிறது (மத்.27:51), மேலும் கர்த்தரிடம் நெருங்கி வர நம்மை அழைக்கிறது. “தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடம் சேருவார்” (யாக்.4:8).

“ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பததற்கு இயேசு வானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், ….தேவனுடைய வீட்டின் மேல்அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும்; விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக் கடவோம் (எபி. 10:19,21-22). நாம் “அவருடைய செட்டைகளின் கீழ் இருப்பதால் நமக்கு இரட்சிப்பு, பாதுகாப்பு மற்றும் நிறைவு ஆகிய அனைத்தும் கிடைக்கின்றன.

“ஆகையால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்பவர்களுக்கு இனி தண்டனைத் தீர்ப்பு கிடையாது” (ரோமர் 8:1)

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

வேதாகமம் பற்பல மொழிகளில் எழுதப்பட்டன!

வேதாகமம் உருவானது எப்படி? (ஜனவரி – பிப்ரவரி 2026)
Dr.உட்ரோ குரோல்

வேதாகமத்தில் எந்தெந்த நூல்கள் சேர்க்கப்படவேண்டும் என்று தீர்மானித்து. ஐந்து அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டன.

1. எழுதியவர்

புத்தகத்தை அல்லது நிருபத்தை எழுதியவர் யார்? அது ஒரு அப்போஸ்தலனா? புகழ்பெற்ற சபை உறுப்பினரா? அல்லது அறியப்படாத ஒருவரா?

2. சபைமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா?

முதல் நூற்றாண்டுத் திருச்சபை மக்கள் இந்த நூல் அல்லது நிருபம் குறித்து என்ன கருத்து கொண்டிருந்தார்கள்? அதைச் சரியானது என்று ஏற்றுக்கொண்டார்களா? அது அவர்களது அனுபவங்களோடு ஒத்துப்போனதா?

3. சபைக்குருக்கள் இந்தப் புத்தகங்களை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டார்களா?

இரண்டாம் நூற்றாண்டில் சபைக் குருக்கள் இப்புத்தகங்களை ஏற்றுக்கொண்டார்களா? இந்தக் குருக்கள் இயேசுவின் சீஷர்களின் சீஷர்கள். உதாரணமாக, போலிகார்ப் என்பவர் அப்போஸ்தலனாகிய யோவானின் சீஷனாய் இருந்தவர். இந்த நூல்களைக் குறித்துப் பரிசீலிக்கும்போது “இந்தப் புத்தகத்தைக் குறித்துப் போலிகார்ப் என்ன நினைத்தார்?” என்று கேட்பார்கள்.

4. புத்தகத்தின் பொருளடக்கம்

அந்தப் புத்தகம் அல்லது நிருபம் எதைப் பற்றியது? அதில் கூறப்பட்டிருக்கும் கொள்கைகள் நல்லவைகளா? சரியான வைகளா? ஏற்றுக்கொள்ளக் கூடியவைகளா? வாழ்க்கைக்குப் பொருத்தமானவைகளா? பின்பற்றக் கூடியவைகளா? இது வேறுபுத்தகங்களின் கருத்துக்களோடு முரண்பட்டதா? இப்புத்தகத்தில் உள்ள கதைகள் பண்பற்றதாகவும், கற்பனையானதாகவும் இருக்கின்றனவா?

5. தனிநபர் பக்திவிருத்திக்கேதுவானதா?

சபைமக்களுக்கும், தனிநபர்களுக்கும் நம்பிக்கை ஊட்டக்கூடிய, அகத்தூண்டுதல் தரக்கூடிய, பக்திவிருத்தி ஏற்படுத்தக்கூடியதாய் இருக்கிறதா?

இந்த நெறிமுறைகளில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு சரியாய் இருந்தால் போதாது. எல்லா அம்சங்களும் சரியாய் பொருந்தியிருக்க வேண்டும்.

புத்தகத்தின் காலம் அது அதிகார பூர்வமானது என்று சான்றளித்து விடுவதில்லை. பல பழைய புத்தகங்கள் வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணமாக எண்ணாகமம் 21:5இல் கர்த்தருடைய புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது என்று உள்ளது.

யோசுவா 10:13 இல் இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது என்று உள்ளது. இந்தப் புத்தகங்கள் வேதாகமத்தில் சேர்க்கப்படத் தகுதியானவை என்று காணப்படவில்லை என்று தெரிகிறது.

வேதாகமப் புத்தகங்கள் எழுதப்பட்ட மொழி அடிப்படையில் புத்தகங்கள் தெரிந்தெடுக்கப்படவில்லை.

தோபித்து என்னும் புத்தகம் எபிரெயமொழியில் எழுதப்பட்டது. ஆனால் அது பழையஏற்பாட்டு நூல்களுடன் சேர்க்கப்படவில்லை. ஆனால் அதே வேளையில் தானியேல் புத்தகத்தின் ஒரு பகுதி அரமேய மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. அது பழைய ஏற்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

தள்ளுபடியாகம நூல்கள்

சில வேதாகமங்களில் பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் இடையே 14 நூல்கள் இருப்பதைக் காணலாம். இவற்றைத்தான் தள்ளுபடியாகம நூல்கள் (APOCRYPHA) என்கிறோம். இந்த நூல்களில் பல முக்கியமான தகவல்கள் உள்ளன. எனினும் அவை பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்படவில்லை என்று கணிக்கப்பட்டு, வேதாகம பரிசுத்த நூல்களுடன் சேர்க்கப்படவில்லை. ஏன்? பெரும்பாலும் அவற்றின் பொருளடக்கமே அதற்குக் காரணம்.

தோபித்து ஒரு தள்ளுபடியாகம நூல். இது தோபித்து என்னும் ஒரு தெய்வபக்தியுள்ள யூதனின் கதை. ஒருநாள் தற்செயலாக ஒரு சிட்டுக் குருவியின் எச்சம் இவனுடைய கண்ணில் பட்டு, கண் பார்வை போய்விட்டது. பின்னர் ரபேல் என்னும் தேவதூதன் வந்து, மீனின் இருதயம், ஈரல், பித்தப்பை இவற்றினால் ஒரு கஷாயம் தயாரித்து தோபித்துவின் கண்களில் விட்டான். உடனே அவனுக்கு கண்பார்வை கிடைத்துவிட்டது. பரிசுத்த நூல்களைத் தெரிந்தெடுத்த மக்களுக்கு இது ஒரு நீண்ட கதையாகத் தெரிந்தது. இதைச் சேர்த்துக்கொள்ளவில்லை.

இன்னொரு தள்ளுபடியாகம நூலின் பெயர் பேலும், பேயும் என்பது. இதில் இரண்டு கதைகள் உள்ளன. இதில் உள்ள இரண்டாவது கதையில் வரும் பேய், பாபிலோனியரால் கடவுளாக நினைத்துத் தொழப்பட்டது. இந்தக் கதையில் இதைப் பணிந்துகொள்ளும் படியாகத் தானியேல் அழைக்கப்பட்டான். தானியேல் அதை வணங்குவதற்குப் பதிலாக அதற்கு கீல், முடி, கொழுப்பு கலந்த கலவையைச் சாப்பிடக் கொடுத்தான். அது அதைச் சாப்பிட்டு அதன் வயிற்றின் உள் சென்றதுமே அது வெடித்துச் சிதறியது. இந்தப் புத்தகம் பரிசுத்த நூல்களுடன் சேர்க்கப்படாததன் காரணம் புரிகிறதல்லவா?

தேவஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்ட பரிசுத்த நூல்களோடு இந்தத் தள்ளுபடியாக நூல்கள் சேர்க்கப்படாததற்குத் தகுந்த காரணங்கள் உண்டு. பரிசேயர்கள் இந்த நூல்களை பழைய ஏற்பாட்டுடன் சேர்க்கவில்லை. இந்த நூல்களிலிருந்து எந்த மேற்கோளும் எடுத்துக்காட்டப்படவும் இல்லை. யூதர்களோ, புதிய ஏற்பாட்டு நூலாசிரியர்களோ, இந்த தள்ளுபடியாகம நூல்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவும் இல்லை. தாங்கள் எழுதும்போது இவற்றிலிருந்து எந்த மேற்கோளையும் எடுத்துக் காட்டவும் இல்லை. அதற்கு அவை தகுதியானவை அல்ல.

யூத வரலாற்றாசிரியரான ஜோச பாஷீம் இந்தநூல்களைத் தள்ளிவிட்டார். புகழ்பெற்ற யூத தத்துவ ஞானியாகிய பைலோ என்பவர் இந்த நூல்களை அங்கீகரிக்கவே இல்லை. ஆதித்திருச்சபையின் சபைக்குருக்களில் ஒருவரும் இந்த நூல்களில் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

(தொடரும்)

மொழியாக்கம்: ஜி.வில்சன்

page 1 of 2