ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 27 செவ்வாய்

மாலத்தீவுகளுக்காக ஜெபிப்போம்: நாட்டின் கடுமையான சட்டங்கள் இருந்த போதிலும் அங்குள்ள விசுவாசிகளின் ஐக்கியத்திற்காகவும், விசுவாசிகள் நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் உறுதியோடு இருப்பதற்கும் ஜெபிப்போம்.

நினைவுகள் மாறட்டும்!

தியானம்: 2026 ஜனவரி 27 செவ்வாய் | வேத வாசிப்பு: பிலிப்பியர் 2:3-13

YouTube video

… தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார் (பிலிப்பியர் 2:13).

சமீப காலமாக ஜோனில் மாற்றங்கள் தென்பட்டன. நாகரீகம் என்று சொல்லி எதை எதையோ உடுத்தியவன், இப்போது நேர்த்தியாக பார்ப்பவர்கள் மதிக்கத்தக்கதாக உடுத்தினான். தன்னிஷ்டப்படி நடந்தவன் இப்போது அம்மாவிடம் யாவையும் கேட்டு செய்தான். எல்லாவற்றுக்கும் மேலாக, முன்பு சூரியன் உதித்தாலும், நித்திரை விட்டு எழாதவன், இப்போதெல்லாம் விடியற் காலையிலேயே எழுந்து, ஜெபிப்பதைப் பார்த்த தாய், காரணத்தைத் தேடினாள். ஜோன் கூறினான், “புத்தக அடுக்கிலே தற்செயலாக அப்பாவின் டைரியைப் பார்த்தேன். நான் இவ்வுலகத்தை விட்டுப்போனாலும், என் விருப்பங்களை நிறைவேற்ற என்னைப்போலவே என் மகன் வளர்ந்துவிட்டான். இனி நம் மகனில் நீ என்னைக் காண்பாய்” என்று தாம் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் அப்பா உங்களுக்கு எழுதியிருந்த சில வரிகளை வாசித்தேன். ஆகவே இனி அப்பாவின் நினைவின்படியே வாழ்ந்து உனக்குப் பெருமை தேடித்தருவேன். நீ என்னைப் பார்க்கும்போதெல்லாம் அப்பாவைப் பார்ப்பாய், என்ற மகனை அன்போடு அணைத்துக் கொண்டாள் தாய்.

ஒரு மகன் தன் தகப்பன் விருப்பங்கள் யாவையும் தன் விருப்பமாகக் கொண்டு தன் தகப்பன்போலவே ஆகவேண்டும் என்று தன்னை மாற்றிக் கொண்டால், நமது காரியம் என்ன? ஆண்டவரும் பரம தகப்பனாக, நமக்கு ஒரு தெய்வீக மாதிரியை வைத்துப்போயுள்ளார். அவரே தேவனாயிருந்தும், சிலுவையின் மரணபரியந்தமும் தம்மைத்தாமே தாழ்த்தி, பிதாவின் சித்தத்தை மாத்திரமே நிறைவேற்றினார். இதனால் அவர் எதையும் இழந்து போகவில்லை. மாறாக எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் அவருக்கே கொடுக்கப்பட்டது.

இந்த மாதம் முழுவதும், இந்தப் புதிய ஆண்டிலே கிறிஸ்துவைப்போல மாறவேண்டும் என்ற நோக்கில் தியானங்களைச் செய்து வருகிறோம். இந்த வாஞ்சை நமக்குள் இருக்குமானால் முதலில் நமக்கென்று நாம் வைத்திருக்கும் வரையறைகளை உடைத்தெறியவேண்டும். என் விருப்பம் என் நோக்கம் என்ற கதை மாறி, தேவனே தமது சித்தத்தை எனக்குள் தோற்றுவிக்கிறவர் என்பதை சிந்திக்க நம்மைப் பயிற்றுவிக்க வேண்டும். இது சொந்த முயற்சியால் கூடுமான காரியம் அல்ல. பரிசுத்தாவியானவரின் நடத்துதலும், தேவனுடைய வார்த்தைகளை அறிந்து அதற்குக் கீழ்ப்படியும் மனதும், அர்ப்பணமுள்ள சேவையும், தேவபிள்ளைகளின் அன்பின் ஐக்கியமும் மிகவும் அவசியம். ஆண்டவர் சித்தத்தை அறிந்து அதன்படி நடக்க ஆரம்பித்துவிட்டால் போதும். பின்னர் அதுவே நமது விருப்பமாக மாறிவிடும். தொடர்ந்து இயேசுவோடு நடப்போம். அவருடைய விருப்பப்படி நமது செய்கைகளும் மாறட்டும்.

ஜெபம்: எங்கள் பரமபிதாவே, எங்களது விருப்பங்கள் செயல்களின்படியல்ல, உம்முடைய சித்தத்தை அறிந்து, உமக்குப் பிரியமானதைச் செய்து உம்மை எங்களது வாழ்வில் பிரதிபலிக்க கிருபை தாரும். ஆமென்.