ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 12 திங்கள்

ஜார்ஜியாவிற்காக ஜெபிப்போம்: சுவிசேஷ கிறிஸ்தவத்திற்கு பாரம்பரிய மற்றும் கலாச்சார எதிர்ப்பை விசுவாசிகள் கடக்க, சுவிசேஷ பணிகளுக்கு உள்ள தடைகள் நீங்க, அனைத்து மிஷனரி பணிகளை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபம் செய்வோம்.

நேசத்திலும் பாகுபாடா?

தியானம்: 2026 ஜனவரி 12 திங்கள் | வேத வாசிப்பு: மத்தேயு 8:5-13

YouTube video

நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார் (மத்தேயு 8:7).

அவர்கள் அவிசுவாசிகள்; இவர்கள் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று எத்தனை பேரை நாம் விலக்கி வைத்திருக்கிறோம். நம்முடைய இந்த செய்கையினாலேயே, ஆண்டவரிடம் வரவேண்டிய பலர், ஆண்டவரைவிட்டே விலகிச் சென்றிருக்கின்றனர். கிறிஸ்து போதித்த மலைப்பிரசங்கத்தை நேசித்த மகாத்மா காந்தி, கிறிஸ்தவர்களைப் பார்த்தே “கிறிஸ்தவமே வேண்டாம்” என்று சொன்னாராம்.

இங்கே ஒரு ரோம போர்வீரன்; அவனுக்குக் கீழே நூறு போர்வீரர்கள். பொதுவாகவே ரோமப் போர்வீரரை யூதர்கள் வெறுத்தனர். அதிலும் நூற்றுக்கதிபதி என்றால் அவனுக்கிருந்த அதிகாரம், பெருமை, ரோமன் என்ற அகங்காரம் என்பன யூதர்கள் அவனை வெறுக்கப் போதுமாயிருந்தது. இப்படிப்பட்ட ஒருவன் இயேசுவிடம் வந்தான். திமிர்வாதமாய்க் கிடக்கிற தன்னுடைய வேலைக்காரனுக்காக மன்றாடுகிறான். அவன் கிட்ட வருவதைக் கண்டபோதே இயேசுவின் பின்னே நின்றவர்கள் என்னவெல்லாம் பேசியிருப்பார்கள்! ஆனால் இயேசுவோ அவனோடு பேசி, தான் வந்து அவனைச் சுகமாக்குவதாகக் கூறுகிறார்.

அதே பிரகாரம், யூதருக்கு எதிரிகளாக இருந்த கானானைச் சேர்ந்த ஒரு பெண் இயேசுவிடம் வந்து, தன் மகளுக்காக மன்றாடினாள். சீஷர்களுக்கு அது எரிச்சலைக் கொடுத்தாலும், ஆண்டவர் அவளை நேசித்து அவளுடனும் பேசினார். ஆண்டவர் தம்மிடம் வந்த எவரையும் தள்ளிவிடவில்லை. மனதுருக்கத்துடன் பேசினார். நம்மைச் சுற்றிலும் வாழுகின்ற, கிறிஸ்துவை அறியாத, ஏற்றுக்கொள்ளாத ஏராளமான மக்களைக் குறித்து, நமது மனநிலைமை என்ன? சிலர் கிறிஸ்தவர் என்ற பெருமையினால், பிறருடைய தவறான நம்பிக்கைகளை கேலிசெய்வதுண்டு. அவர்களும் தேவனது சிருஷ்டிகள், அவர்களும் தேவ ராஜ்யத்தில் பங்குகொள்ளவேண்டுமே என்று எண்ணுவோர் மிகக் குறைவு. அந்த ஆத்தும தாகம் நம்மிடம் உண்டா? ஆண்டவரோ தம்மிடம் வந்த எவரையுமே புறம்பே தள்ளவில்லை.

பாகுபாடு காட்டும் சிந்தை நமக்குக்கூடாது. எல்லோரையும் ஒன்றுபோல நேசிக்கும் சிந்தை நமக்கு அவசியம். அழைப்புக் கொடுக்காமலேயே, “நான் வருவேன்” என்று ஆண்டவர் சொன்னபோதுதான் அந்த நூற்றுக்கதிபதிக்குள் இருந்த விசுவாசம் வெளியே தெரிந்தது. அது கொழுந்து விட்டெரிந்தது. அவனும் இயேசுவின் அன்பைப் பெற்றுக் கொண்டான். பாகுபாடின்றி நாம் காட்டும் அன்பு கரிசனை ஆதரவு நம்மில் நமது தேவனை வெளிப்படுத்தும். தேவனும் மகிமைப்படுவார்

ஜெபம்: “கர்த்தாவே, எங்களுக்குள் காணப்படும் பெருமையை எடுத்துப்போடும். தவறான நம்பிக்கையுள்ளவர்களை கண்டு ஒதுக்காமல் அவர்களிடத்தில் பரிவோடு பேசி உதவ எங்களுக்கு உமதருள் தாரும். ஆமென்.”