ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 15 வியாழன்

ஈரான் நாட்டிற்காக ஜெபிப்போம்: இந்த நாட்டின் அதிபர்கள் இரட்சிக்கப்படவும் ஆராதனை நடத்தப்படும் நிலத்தடி தேவாலய இயக்கம் வளர்ச்சி பெறவும் தங்கள் நம்பிக்கையினிமித்தம் சிறைவைக்கப்பட்டுள்ள விசுவாசிகளின் பாதுகாப்பிற்காகவும், அங்கு காணப்படும் கடுமையான குடிநீர் பஞ்சம் தீரவும் ஜெபிப்போம்.

குறுக்குவழிப் புகழ்ச்சி!

தியானம்: 2026 ஜனவரி 15 வியாழன் | வேத வாசிப்பு: மத்தேயு 4:1-11

YouTube video

வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை (நீதிமொழிகள் 27:21).

சோதனை வரும்போது சொல்லிக்கொண்டு வருவதில்லை. அது எந்த வடிவிலும் நம்மைத் தாக்கலாம். ஆனால், தன்னை மறைத்துக்கொண்டு, நமக்கு நன்மை செய்வதுபோல நம்மைத் தாக்கும் ஒன்று உண்டு. அதனை அலட்சியம் செய்தால், அதன் பின்விளைவு நமது வீழ்ச்சிக்கே காரணமாகிவிடும். அதுதான் “புகழ்ச்சி”.

ஆண்டவர் தாமாக வனாந்தரத்திற்குப் போகவில்லை. சோதிக்கப்படுவதற்கென்றே ஆவியானவராலே கொண்டு செல்லப்பட்டார். அதிலும் வனாந்தரம், தனிமை, என்ன நடந்தாலும் யாருக்கும் தெரியாத இடம். அவருக்கு நேர்ந்த சோதனைகள் யாவும் அவருக்குப் புகழ்ச்சியைக் கொண்டு வரக்கூடியன. அவை அவருடைய வல்லமையைப் பகட்டாகக் காட்டக்கூடிய அருமையான தருணங்கள். தமது சொந்த வல்லமையால் தமது சொந்த தேவைகளையே சந்திக்கக்கூடிய முதலாவது சோதனை. தேவதூதர் வந்து தாங்கிக்கொள்ளும்போது, எந்த சந்தேகமுமின்றி தாமே தேவகுமாரன் என்று எல்லோரும் கைதட்டி, ஆரவாரத்துடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய அருமையான சந்தர்ப்பம் இரண்டாம் சோதனை. தாங்கொண்ணாத வேதனையோடு சிலுவையில் பலியாகி இந்த உலகை மீட்பதிலும் பார்க்க, மிக இலகுவாக, ஒரு விநாடியிலேயே தாம் வந்த காரியத்தைச் செய்துமுடித்து, உலகத்தைக் கைப்பற்றக்கூடிய, மேன்மைமிகு ராஜா என்று எல்லோராலும் புகழப்படத்தக்க ஒரு சந்தர்ப்பம் மூன்றாவது சோதனை.

இவற்றை இயேசு புறக்கணித்தது என்ன? அவர் செய்தது என்ன? தமக்கென ஒரு புகழ்ச்சியை நாடினாரா? மாறாக, யாவராலும் இகழப்பட்டவராகவே சிலுவையில் தொங்கினாரே ஏன்? அப்பம் மாத்திரமல்ல, தேவனுடைய வார்த்தையே மனிதனை வாழ வைக்கும் என்றாரே ஏன்? தேவனைச் சோதிக்கக்கூடாது என்று குரல் எழுப்பினாரே, ஏன்? பிதாவின் சித்தத்தைத் தவிர வேறு குறுக்கு வழிகளை வெறுத்துத்தள்ளினாரே, ஏன்? சோதனைக்காரன் தோற்றுப்போனான். அவன் அவரைவிட்டு சிலகாலம் விலகியே இருந்தான். சோதனைக் களத்திலே குறுக்குவழியிலே புகழ்ச்சியைச் சம்பாதிப்பதையோ, தாம் யார் என்று காட்டுவதையோ இயேசு நாடாமல், தாம் வந்த நோக்கத்தில் பிதாவின் சித்தத்தில் ஊன்றி நின்றார். முடிவு மரணம் அல்ல, மகத்தான உயிர்த்தெழுதல். சத்துரு முறியடிக்கப்பட்டான். ஆண்டவர் சோதிக்கப்பட்டு பொன்னாக விளங்கியதாலேயே இன்று சோதனைகளை ஜெயிக்கமுடியும் என்ற நம்பிக்கையை நாமும் பெற்றிருக்கிறோம். குறுக்குவழிப் புகழ்ச்சிகள் வருமானால், அதை விரும்ப வேண்டாம், தேவனுக்கு முன்பாக பொன்னாக, நீதிமானாக, பரிசுத்த வானாக வெற்றியாளனாக திகழ விரும்புவோம். இயேசுவை முகமுகமாய் சந்திக்கும் போது அதன் பலன் மிகுதியாய் விளங்கும்.

ஜெபம்: அப்பா, பிதாவே, குறுக்குவழிகளில் வரும் புகழ்ச்சிகள் எங்களுக்கு வேண்டாம். உம்மை முகமுகமாய் தரிசிக்கும் நாளில் நீர்தரும் சாட்சி ஒன்றே போதும். ஆமென்.