ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 19 திங்கள்

ஜப்பான் நாட்டிற்காக ஜெபிப்போம்: இந்தநாட்டில் இயற்கையை சார்ந்து தவறான தத்துவக் கண்ணோட்டத்தோடும் ஆன்மீக வெறுமையோடும் உள்ள அனைவரின் இரட்சிப்புக்காகவும், நாட்டின் வளத்திற்காகவும் ஜெபிப்போம்.

கண்டவரைக் கண்டேன்

தியானம்: 2026 ஜனவரி 19 திங்கள் | வேத வாசிப்பு: யோவான் 4:4-30

YouTube video

நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் …. (யோவான் 4:39).

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே நடந்த இந்த சம்பவம்போல இன்றும் நடைபெறத்தான் செய்கின்றன. “இத்தனை வருடங்களாக என்னைக் குறித்து நானே அறிந்திராத பல காரியங்களை என் ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார். இதனால் நான் விடுதலை பெற்றேன்” என்றாள் ஒரு அருமை சகோதரி. சமாரியப் பெண்ணைப் பற்றி ஐந்து வசனங்கள் எழுதும்படி சொன்னால், நாம் முதலாவதாக எழுதுவது என்ன? ஐந்து புருஷருடன் வாழ்ந்த ஒருத்தி என்றுதானே எழுதுவோம். ஆனால் ஒரு ஓய்வு நாட்பாடசாலையில் ஒரு மாணவி, “தன் வாழ்வில் தன்னைக் கண்டவரைக் கண்டவள் இவள்” என்று முதலாவதாக எழுதியிருந்தாள். ஆம், இதுதான் உண்மை.

ஆம், அவளுடைய வாழ்க்கை ஒழுங்கற்றது. அவள் விமர்சனத்துக்கு ஆளானாள். பாவத்திற்கு பெயர்பெற்றவளாக இருந்தாள். ஆகையால்தான் மற்றவர்கள் தண்ணீர் எடுக்க வருகிற நேரத்தைத் தவிர்த்து தனியே வந்தாள். இப்படியிருந்தும் கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருவார் என்றும், அவர் வரும்போது எல்லாவற்றையும் அறிவிப்பார் என்றும் அறிந்து நம்பியிருந்தாள். ஆம், அவளுடைய வாழ்வு சீர்கெட்டதாக இருந்தபோதிலும், ஏதோவொரு மூலையில் ஒரு எதிர்ப்பார்ப்பு இருந்தது. இதுதான் மேசியாமீது அவளுக்கிருந்த வாஞ்சையாகும். அதுமாத்திரமல்ல, அவள் தன்னுடைய சீர்கெட்ட தன்மையை உணர்ந்திருந்தாள். இல்லாவிட்டால் பகிரங்கமாக கிணற்றில் தண்ணீர் மொண்டுகொள்ள வராதபடிக்கு, இயேசுவால் தரமுடிந்த அந்த வற்றாத ஜீவதண்ணீரை, அது இன்னது என்ற அறிவு இல்லாமலேயே கேட்டிருக்கமாட்டாள். ஆண்டவர் அவளது சீர்கெட்ட வாழ்விலும் இருந்த ஏதோவொன்றைக் கண்டார். அவளோடு பேசினார். அவளைக் குற்றப்படுத்துவதற்கு மாறாக அவளை அவளுக்குச்சுட்டிக் காட்டினார். அவ்வளவுதான். அவள் தனக்குள் ஒரு மாற்றத்தைக் கண்டாள். அவள் செய்த முதல் காரியம், வெட்கத்தை ஒதுக்கிவிட்டு, “என்னைக் கண்டவரை நான் கண்டேன்” என்ற அற்புத செய்தியை மற்றவர்களுக்குக் கூறி அறிவித்தாள். இயேசுவை அவள் சந்தித்ததால் உண்டான அவளது உள்ளான மாற்றத்தின் வெளியான பிரதிபலிப்பே இது. மொத்தத்தில் இயேசுவைச் சந்தித்ததால் ஒரு பெண் தன்வாழ்வை சீர்ப்படுத்தி ஒரு புதிய பாதைக்குள் வந்தாள்.

நாம் ஒருவேளை அவளைப்போல இல்லாவிட்டாலும் நமது வாழ்வில் இயேசுவைப் பிரதிபலிக்க முடியாத எத்தனை சீர்கேடுகள் உண்டு. நம்மை முற்றிலும் அறிந்தவரின் முன்பு திறந்த மனதுடன் வருவோமானால், அவர் நம்மையும் நமக்குக் காட்டுவார். அது நமக்கு நிச்சயம் ஒரு பெரிய விடுதலையைத் தரும். அடக்கிவைக்க முடியாத அந்த மகிழ்ச்சியை நாம் மற்றவர்களுக்கும் அறிவிப்போம் என்பதும் உறுதி.

ஜெபம்: “அன்பின் கர்த்தாவே நீர் என்னைக் காண்கிற தேவன்: என்னை எனக்குக் காண்பியும். எப்போதும் நான் திறந்தமனதோடு உம்முடைய சமுகத்திற்கு வர என்னை அர்ப்பணிக்கிறேன். ஆமென்.”