ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 21 புதன்

வேதாகமத்திற்கு திரும்புக செகந்திராபாத் தலைமை அலுவலக பணிகளுக்காக ஜெபிப்போம். தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தில் நடத்தின தேவன்தாமே (சங்.136:16) ஊழியத்தின் தேவைகளைச் சந்தித்து, பத்திரிக்கை ஊழியங்கள் மற்றும் அனைத்து ஊடகப்பணிகள் மூலம் நற்செய்தி தடைகளின்றி அறிவிக்கப்படுவதற்கும் Associate Director Rev.அனில்குமார் அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

மனுஷரிடமல்ல, இயேசுவிடம்…

தியானம்: 2026 ஜனவரி 21 புதன் | வேத வாசிப்பு: அப்போஸ்தலர் 1:15-22

YouTube video

… அவர் மரணாக்கினைக்குள்ளாக்கத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, … பிரதான ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்ப வந்து … (மத்தேயு 27:3).

பேதுருவின் வாழ்வில் நடந்த அந்தப் பெரிய மாற்றம் நம்மிலும் காணப்படவேண்டும். நமது வாழ்விலும் தேவன் நிர்ணயித்தவைதான் நடக்கும் என்ற நம்பிக்கையுடன் எல்லா சூழ்நிலைகளிலும் தேவசித்தத்துக்கு நம்மை விட்டுக்கொடுத்து, இயேசுவின் சாயலை நாமும் வெளிப்படுத்தவேண்டும்.

ஆனால் யூதாஸின் காரியம் சற்று வித்தியாசமானது. யூதாஸ், பேதுரு இருவருமே ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகளாக ஆண்டவரோடு ஒன்றாய் ஜீவித்தவர்கள். ஆனால் இருவருக்கும் என்ன வித்தியாசம்? யூதாஸ் கலிலேயன் அல்ல; அவ்வளவும்தான். யோவான் ஸ்நானகனின் பிரசங்கத்தாலோ இயேசுவின் பார்வையினாலோ ஏவப்பட்டு இயேசுவின் அழைப்புக்குக் கீழ்ப்படிந்தவன் யூதாஸ் என்று நம்பப்படுகிறது. என்றாலும் இயேசுவும் சீஷர்களும் ஊழியத்தில் இருந்தபோது, கிடைக்கும் பணஉதவிகளுக்கும் காணிக்கைகளுக்கும் பொறுப்பாக இவன் நியமிக்கப்பட்டிருந்தான். இவ்வளவும் சரி. ஆனால் இவனைக்குறித்து, “அவன் திருடனாயிருந்தபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும்” (யோவா.12:6) என்று யோவான் எழுதுகிறார். இவனுக்குள் பொருளாசை இருந்தது. ஆனாலும் தனது கடமையை சரிவரச்செய்து, தன் பெலவீனத்தை மேற்கொண்டு வெற்றிபெற அவனுக்குத் தருணம் இருந்தது. ஆனால் பொருளாசை மேலிட்டதால் முப்பது வெள்ளிக் காசுக்கு ஆசைப்பட்டு இயேசுவைக் காட்டிக்கொடுத்து கெட்டுப்போனான். என்றாலும் பின்னர், இயேசுவின் மரண உபாதைகளைக் கேள்விப்பட்டு மனதிலே குத்துண்டான், வேதனைப்பட்டான். அதுவும் சரி. ஆனால் அவன் யாரிடம் ஓடினான் என்பதில்தான் அவனது வாழ்க்கை தடுமாறிவிட்டிருந்தது. அந்த முப்பது வெள்ளிக்காசையும் எடுத்துக்கொண்டு பாடுபடும் இயேசுவின் பாதத்தில் போய் விழுந்திருந்தால் அவன் வாழ்வு மாறியிருக்கும்! அவனோ யார்மூலமாக அந்தக் காசைப் பெற்றுக்கொண்டானோ, அவர்களை நாடிப்போனான். அவர்களோ, அது உன் பாடு என்று தட்டிக்கழித்துவிட்டார்கள். இவன் விளைவாக அவன் தன் வாழ்வையே இழந்துபோனான்.

ஏனைய சீஷர்களைப்போல, இயேசுவுக்காக வாழவேண்டிய ஒருவன், தலைகீழாக விழுந்து வயிறு வெடித்து செத்துப்போனான். அதிலும் விசேஷமாக, அவனுக்குரிய இடம் பாழாய்ப்போனது. அது வெற்றிடமாகவே விடப்பட்டது. அவனது வேலையைச் செய்வதற்காகத்தான் இன்னொருவன் தெரிந்தெடுக்கப்பட்டானே தவிர யூதாசுக்காக தெரிந்தெடுக்கப்படவில்லை. இந்த நிலைமை நம்மில் யாருக்கும் வேண்டாம். இப்போதே நமது பெலவீனங்களோடும், செய்த தவறுகளோடும், இயேசுவின் பாதம் விழுவோமாக. அவர் தம்மைப்போல நம்மையும் நிச்சயமாய் மாற்றுவார்.

ஜெபம்: தகப்பனே, பொருளாசைக்கு எங்களை விலக்கி இரட்சியும், எந்தச் சூழ்நிலை யானாலும் எங்களை அரவணைக்கிற, தூக்கியெடுக்கிற உமது பாதத்தண்டைக்கே ஓடிவர எங்களுக்குதவும். ஆமென்.