ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 18 ஞாயிறு
அவருடைய மகிமை பொருந்திய நாமத்துக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக (சங்.72:19) இந்த ஆராதனை நாளில் எல்லா திருச்சபைகளின் ஐக்கியத்திற்காகவும், சபைகள்தோறும் நடைபெறும் சிறுவர் ஊழியங்கள், வாலிபர் ஊழியங்கள், கிராம ஊழியங்கள் இவற்றின் பலனாக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட வேண்டுதல் செய்வோம்.
கேட்டால் போதாது!
தியானம்: 2026 ஜனவரி 18 ஞாயிறு | வேத வாசிப்பு: யோனா 1:1-3; நாகூம் 3:1-6

அப்பொழுது யோனா … நான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி … (யோனா 1:3).
வீட்டிலே நல்ல கீழ்ப்படிவுள்ள பிள்ளைகள்போல இருந்துவிட்டு, வீட்டுக்கு வெளியே, வீதியில் தங்கள் இஷ்டப்படி நடக்கின்ற பிள்ளைகளைக் குறித்து நீங்கள் துக்கப்படமாட்டீர்களா? இப்படி நாமும் நமது பரமபிதாவைத் துக்கப்படுத்துகிறோம் என்பதை எப்பொழுதாவது சிந்தித்திருக்கிறோமா?
தேவனிடத்தில் வார்த்தையைப் பெற்று. அதனை அப்படியே செய்கின்ற தீர்க்கதரிசிகளில் ஒருவனே யோனா. இஸ்ரவேல் அல்லாத நினிவே பட்டணத்தாருக்கு வரப்போகும் அழிவைப்பற்றி அறிவிப்பதற்காக நினிவேக்குப் போகவேண்டுமென தேவனுடைய வார்த்தையைப் பெற்றார் யோனா. அசீரியரின் ஆட்சிக்குட்பட்ட நினிவே பட்டணம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆனால் அங்குள்ள மக்கள் கர்த்தருக்கு விரோதமாகவே நடந்தனர். ஆதரவற்ற வர்களைத் துன்பப்படுத்தி யுத்தங்களை நடப்பித்தனர். வஞ்சகத்தினாலும் கொடுமையினாலும் நினிவே நிறைந்திருந்தது. இந்த இடத்திற்கு யோனா போயாகவேண்டும். அவன், அசீரியரில் கொண்ட வெறுப்பினாலோ, தேவனுடைய அநுக்கிரகம் இஸ்ரவேலுக்கு மாத்திரம்தான் என்று நினைத்ததாலோ, அந்தப் பட்டணத்தார் மனந்திரும்பமாட்டார்கள் என்ற பயத்தினாலோ, தேவனின் வார்த்தைகளை மறந்து யோனா எதிர்த்திசைக்குப் போகும் கப்பலிலே ஏறி வார்த்தைக்குத் தப்பிக்கொள்ள வகை பார்த்தார். அப்படியே ஏறிப்போனார்.
நாம் தீர்க்கதரிசிகளாக இல்லாவிட்டாலும், நித்தமும் தேவபாதத்தை வாஞ்சித்து அமரும் நம்முடனும் வேத வார்த்தையின் மூலமாக தேவன் பேசுகிறார். வார்த்தைமூலம் மன ஆறுதல் மாத்திரமல்ல, பணிகளையும் கொடுக்கிறார். அவரிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் வார்த்தைக்கு நாம் எவ்வளவாகக் கீழ்ப்படிகிறோம்? நமது பெலத்துக்கு மிஞ்சியதைக் கர்த்தர் கேட்கிறார் என்று சாக்குச் சொல்லிக்கொண்டு பயத்தினாலோ அல்லது பிடிவாதக் குணத்தினாலோ அவருடைய வார்த்தை காட்டும் பாதைக்கு எதிர்த்திசையிலே ஓடிப்போகிறோம். யோனாவோ கர்த்தருடைய வார்த்தையை விட்டு ஓடியதால் பெரிய ஆபத்துக்களைச் சந்தித்தார். இதன் மூலம் தேவனுடைய வார்த்தைக்கே இனி முதலிடம் கொடுக்கவேண்டும் என்ற பாடத்தை யோனா கற்றுக்கொண்டார். ஆம், நாம் கர்த்தருடைய வார்த்தைக்கும் அவருடைய சித்தத்துக்கும் முதலிடம் கொடுத்தால் போதாது. அதைச் செயற்படுத்தவே முதலிடம் கொடுக்கவேண்டும். கீழ்ப்படியாத யோனாவுக்கு மீன் காத்திருந்தது. நாம் கீழ்ப்படியாவிட்டால் காரியம் என்னவாகுமோ யாரறிவார்? கர்த்தரின் சமூகத்தினின்று விலகுவது ஆபத்து. ஆகவே, இப்போதே திரும்பிவிடுவோமாக.
ஜெபம்: “கர்த்தாவே, உமது வார்த்தையைக் கேட்டும். உமது சமுகத்தைவிட்டு ஓடிப் போகாமல், வார்த்தைக்குக் கீழ்ப்படிந்திருக்க கிருபை தாரும். ஆமென்.”