ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 14 புதன்

சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே இந்தநாளில் நடைபெறும் சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தை ஆசீர்வதிக்கவும், ஏறெடுக்கப்படும் எல்லா விண்ணப்பங்களின் சத்தத்துக்கு கர்த்தர் தமது தயவுள்ள சித்தத்தின்படியே மறுஉத்தரவு அருளிச்செய்து பெரிய காரியங்களைச் செய்தருள ஜெபிப்போம்.

பிறருக்காகவா? பிறரிடமிருந்தா?

தியானம்: 2026 ஜனவரி 14 புதன் | வேத வாசிப்பு: மத்தேயு 20:20-28

YouTube video

… மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும் … வந்தார் (மத்தேயு 20:28).

“சமூகசேவை என்ற பெயரில் அலுவலகத்தை சுத்தம் பண்ணினோம். என்றாலும் நம்மில் பலர் வேண்டாவெறுப்பாகவே வேலை செய்தனர். “பெரியவர் பெரியவர்தான், வேலை நாளிலும் வேலை வாங்குவார்; ஓய்வு நாளிலும் சம்பளம் இல்லாமலே வேலை வாங்குவார். இப்போ பெரியவர் வீட்டிலே, நாங்களோ இங்கே” என்று முறுமுறுத்தனர். தற்செயலாய் பின்னாகத் திரும்பிய போது தலையிலே தொப்பியுடன், வேர்வை சிந்த அலுவலகத்தின் சுவர்களையெல்லாம் கழுவிக்கொண்டிருந்த மேலதிகாரியைக் கண்டதும் வாய்கள் அடைத்துவிட்டன. அவரோ அமைதியாக ஒரு புன்சிரிப்போடு கழுவிக் கொண்டிருந்தார். அதன்பின் என்ன நடந்தது என்று சொல்லத் தேவையில்லை” இப்படியாக ஒருவர் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

தலைமைப் பதவி, மற்றவர்கள் நம்மைக் கனப்படுத்துவது, நான்கு பேருக்கு முன்பாக கௌரவிக்கப்படுவது, இதை எல்லாருமே விரும்புகிறார்கள். நமது வாழ்விலும் இப்படிப்பட்ட தருணங்கள் வந்திருக்கலாம். அதில் தவறில்லை. ஆனால் நான்தான் தலைவன், மற்றவர்கள் என்னை மதிக்கவேண்டும் கனப்படுத்தவேண்டும் என்று எதிர்பார்த்து ஜீவிப்பது நமக்கு ஆபத்தையே விளைவிக்கும். ஆலயத்தில்கூட சிலர் முதன்மையான ஆசனங்களை தமக்கென வைத்திருப்பதும், அதிலே வேறு யாராவது அமர்ந்தால் அந்த இடத்திலே நின்று தடுமாறுவதும், ஆராதனை வேளைகளிலே பெயர் குறிப்பிடப்பட்டு கௌரவிக்கப்படுவதை விரும்புவதும் துக்கத்துக்குரியது.

முழு கனத்துக்கும் பாத்திரராகிய ஆண்டவர், தமது மூன்றரை வருட வாழ்விலே எப்போதாவது கனத்தை எதிர்பார்த்தாரா? முதன்மையான இடத்தை விரும்பினாரா? தனக்குப் பின்னே இத்தனை திரளான மக்கள் வருகிறார்களே என்று பெருமைப்பட்டாரா? இல்லை, மாறாக, எப்போதும் மக்களுக்கு சேவை செய்கிறவராக, தமது சீஷருடைய கால்களையே கழுவ தயங்காதவராக, சிங்காசனத்திற்குப் பதிலாக, சிலுவையில் தொங்குவதையே தெரிந்தெடுத்து வாழ்ந்தார். ஆகவேதான் அவருக்கு எல்லா நாமத்துக்கும் மேலான நாமம் வழங்கப்பட்டது. கனமும் மரியாதையும் இன்று வரும்; வந்தவழியே நாளை அது போய்விடும். அதன்மீது நம்பிக்கை வைப்பவர்களுக்கு ஐயோ. இன்று நான் பிறருக்காக வாழ்கிறேனா? அல்லது பிறர் நமக்காக வாழவேண்டுமென்ற மமதையில் இருக்கிறேனா என்பதை சிந்திப்போம். நான் இனி தேவனுக்கு ஊழியன், அதனால் மக்களுக்கும் ஊழியன் என்ற சிந்தை வேண்டும். கனமும் மரியாதையும் மனிதரிடமிருந்தல்ல, பரத்திலிருந்தே கிடைக்க வேண்டும். அதுவே நல்லது. அதுவே நிரந்தரமானது.

ஜெபம்: “அன்பின் பிதாவே, பணிந்துபோகும் மனநிலையையும், பிறருக்குச் சேவை செய்யும் தாழ்மையையும் நாங்கள் தரித்துக்கொண்டவர்களாய் உம்மால் வழிநடத்தப்பட எங்களை அர்ப்பணிக்கிறோம். ஆமென்.”