ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 25 ஞாயிறு
கர்த்தருடைய நாளில் கூடி ஆராதிப்பதற்கு ஏற்ற ஆலயமோ இடமோ இல்லாது வீடுகளில் மரத்தடிகளில் சிறுசிறு ஜெபக்குழுக்களாக கூடுகிற எல்லாக் குழுக்களுக்காகவும், விரைவில் அங்கே ஆலயம் கட்டப்படுவதற்கும், கட்டப்பட்டுக் கொண்டிருக்கிற ஆலயங்களின் பணிகள் முடிவடைவதற்கும் மன்றாடுவோம்.
தூக்கத்தை விட்டெழும்பு!
தியானம்: 2026 ஜனவரி 25 ஞாயிறு | வேத வாசிப்பு: யோனா 1: 1-17

யோனோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிப்போய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரை பண்ணினான் (யோனா 1:5).
அயர்ந்த நித்திரை நமக்கு இன்பம் தருகிற விஷயம். அதிலும் அதிகாலையில் யாரும் தொந்தரவு செய்யாத இடத்தில், இழுத்துப் போர்த்துக் கொண்டு நித்திரை செய்யும்போது கிடைக்கின்ற சுகமே தனிதான். நாம் எங்கே இருக்கிறோம்? எந்த சூழ்நிலையில் தூங்கிக் கொண்டிருக்கிறோம் என்று எதைக் குறித்த சிந்தனையும் கிடையாது. ஆனால், நமது பொறுப்புகளையும் தேவ சித்தத்தையும் மறந்து நாம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கின்ற அதேநேரம், நம் நிமித்தம் எத்தனைபேர் என்னென்ன பிரச்சனைகளை அனுபவித்து தூங்காமல் இருப்பார்களோ யாரறிவார்? நாம் அமைதியாகத் தூங்குவதால், நமது உணர்வுகள் அமைதியாய் இருப்பதால், நமது பாதை சரி என்று கணக்கிட முடியுமா?
தேவனுடைய வார்த்தையைவிட்டு விலகி ஓடிய யோனா, நினிவேக்கு எதிர்ப் புறமாக தர்ஷீசுக்குப் போகும் கப்பலில் ஏறினார். மனதில் எந்தவொரு கலக்கமும் இல்லை. எல்லாவற்றையும் மறந்தார். யாரும் தேடி வந்து தொந்தரவு கொடுக்கமுடியாத கீழ்த்தட்டில் இறங்கிப்போய் படுத்து, அயர்ந்த நித்திரை கொண்டார். ஆனால் கப்பலின் மேல்தட்டிலோ ஒரே கூக்குரல். சமுத்திரத்தின் மேல் வீசிய பெருங்காற்றால் கப்பல் அலசடிப்பட்டது. கப்பல் உடையுமென்று நினைக்குமளவுக்கு பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டது. எல்லாரும் தங்கள் தங்கள் கடவுளை நோக்கி வேண்டுதல் செய்தனர். பாரத்தைக் குறைக்கும்படிக்கு கப்பலில் இருந்த சரக்குகளை சமுத்திரத்தில் எறிந்தனர். இத்தனைக்கும் காரணரான யோனாவோ அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். கர்த்தருடைய சமுகத்தை விட்டு விலகி ஓடிப்போகின்ற பயம்கூட அவருக்கு இருக்கவில்லை. மன சஞ்சலமடையாமல் கவலையற்ற அவருடைய பொறுப்பற்ற செயலினாலே அந்தக் கப்பலில் இருந்த அத்தனைபேரும் பாதிக்கப்பட்டார்கள்.
இன்று தேசத்தில் குழப்பம், நமது குடும்பங்களில் சபைகளில் குழப்பம். ஆனால் நாமோ நமது பங்கை மறந்து தூங்கிக் கொண்டிருக்கிறோம். பிறரிலே குற்றம் சுமத்துகின்ற நாம் முதலில் நம்மை ஆராய்ந்து பார்க்க தேவன் நம்மை அழைக்கிறார். தேவன் என்னில் வைத்திருக்கிற நோக்கத்தில், அவருடைய சமுகத்தில் நான் நிற்கிறேனா? ஜெபிக்கின்றேனா? வேதம் வாசிக்கின்றேனா? உபவாசம் இருக்கின்றேனா? அப்படி இல்லாவிடில், “என் தேசத்தையும் குடும்பத்தையும் காப்பாற்றும்படி என்னை சமுத்திரத்தில் எறிந்து போடுவதானால் போட்டுவிடும்” என்று நம்மால் ஜெபிக்கமுடியுமா? நாம் தேவனுடைய சித்தத்தின் மையத்தில் இருந்துவிட்டால் பாதுகாப்பு எப்பொழுதும் உண்டல்லவா?
ஜெபம்: கர்த்தாவே, என் நிமித்தம் என் தேசமும் குடும்பமும் தத்தளிப்பதை உணராமல் உம் வார்த்தைகளை மறந்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த என் பாவத்தை மன்னித்து, உம் சமுகத்தில் என்னை இழுத்துக்கொள்ளும். ஆமென்.