ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 28 புதன்

எவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ளக்கூடுமோ என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமி.23:24) மறைவான பாவங்கள், மதுபானம் மற்றும் போதை வஸ்துகளுக்கு அடிமைப்பட்டு உள்ள நபர்களின் ஆத்தும இரட்சிப்பிற்காகவும், அந்த குடும்பங்களின் சமாதானத்திற்காகவும் பாரத்தோடு ஜெபிப்போம்.

பிதாவையே சார்ந்திருந்தார்!

தியானம்: 2026 ஜனவரி 28 புதன் | வேத வாசிப்பு: 2நாளா. 16:1-14

YouTube video

மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான் (நீதி. 29:23).

இவ்வாழ்விலேயே கிறிஸ்துவைப்போல மாற நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். இதை மனதில் நிறுத்தி, இந்தப் புதுவருட ஓட்டத்தை ஆரம்பித்த நாம், சோர்ந்துபோகாமல் முன்செல்ல தேவாவியானவர் நம்மை நடத்துவாராக. கிறிஸ்துவின் சிந்தையே நமது சிந்தையாக வேண்டும். இது வெறும் அறிவினால் அல்ல, ஆவியானவராலேதான் முடியும். எனினும், நமது பங்கு ஒன்று உண்டு. கிறிஸ்துவில் காணப்பட்ட ஒவ்வொரு குணநலன்களையும் நாம் சுதந்தரிக்க வேண்டுமாயின், அவற்றை நாம் பயிற்சி செய்யவேண்டும். சாதாரண வாழ்வில் இது சாத்தியமாவது கடினம். ஆகவே சூழ்நிலைகள் அமையும்போது நாம் பயன்படுத்திக்கொள்ளத் தவறக்கூடாது.

யூதாவின் ராஜாவாகிய ஆசா கர்த்தரையே சார்ந்து வாழ்ந்த ஒருவன். கர்த்தரின் நிமித்தம் தன் தாயையே எதிர்த்தான். இவன் காலத்தில் கர்த்தர் யுத்தமின்றி இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார். இப்படிப்பட்டவனுக்கு எல்லா நிலையிலும் தேவனை மாத்திரமே சார்ந்திருந்து பயிற்சி செய்ய ஒரு நல்ல தருணம் கிடைத்தது. இஸ்ரவேலின் ராஜா யூதாவுக்கு எதிராக வந்தபோது, கர்த்தரிடத்தில் விசாரிக்கவேண்டிய ஆசா தன்னிஷ்டப்படி சீரியா ராஜாவுக்கு ஆள் அனுப்பினான். இதுவரை அவன் அடைந்த வெற்றியும் இளைப்பாறுதலும் அவனைப் பெருமைகொள்ள வைத்தது. தேவனைத் தேடாமல் அவன் சீரியாவை நாடினான். தேவனைச் சார்ந்து கொள்ளாதது என்ன என்று கேட்ட அனானியையும் ஆசா தண்டித்தான். மேலும், சரீரத்தில் வியாதிகண்ட போதும், ஆசா கர்த்தரையல்ல, பரிகாரிகளையே தேடினான். அதனால் ஆசாவின் முடிவு பரிதாபமாயிருந்தது.

இந்த ஆசாவுக்கு நாமும் சளைத்தவர்களல்ல. கஷ்டங்கள் நெருக்கையில், வெற்றி கிடைக்கும்வரை, நினைத்தபடி காரியங்கள் ஆகும்வரை கர்த்தரையே சார்ந்திருப்போம். அதன் பின்னர் நம்மையறியாமலே நமக்குள்ளே பெருமை தலைதூக்கும். அது கர்த்தரை மறந்து சொந்த வழிகளிலே நம்மை நடத்தி விடுகிறது. இதன் முடிவு அழிவுதான். ஆனால் ஆண்டவர் உலகில் வாழ்ந்திருந்தபோது எல்லா நிலையிலும் பிதாவையே சார்ந்திருந்தார். எல்லா வல்லமையும் கொண்ட அவர் ஐந்து அப்பத்தையும் இரண்டு மீனையும் கையில் வாங்கியவுடன் வானத்தை அண்ணாந்து பார்த்து ஆசீர்வதித்த பின்னரே அதைப் பிட்டார், சிலுவைக்குப் போகுமுன்பும் பிதாவிடமே மன்றாடினார். இப்படியிருக்க நாம் எவ்வளவாய் தேவனை சார்ந்திருக்கிறோம்? ஆசாவின் முடிவு வேண்டாம். வீண் பெருமையைத் தவிர்த்து, கிறிஸ்துவின் சிந்தையை தரித்து வாழ்வின் எல்லா நிலையிலும் தேவனையே சார்ந்து வாழுவோமாக.

ஜெபம்: ஆண்டவரே, வீண்பெருமையை தவிர்த்து, கிறிஸ்துவின் சிந்தையைத் தரித்து, உம்மை மட்டும் சார்ந்துவாழும் கிருபைகளை எங்களுக்குத் தாரும். ஆமென்.